ஞாயிறு, 26 ஜூலை, 2020

கனிமொழியை ஓரங்கட்டும் முடிவு யாருடையது? கட்சியை சீர்குலைக்க முயற்சியா?

puthiyamugam.com : மகளிருக்கு முக்கியத்துவம் கொடுக்காத எந்த அமைப்பும் முன்னுக்கு வந்ததா சரித்திரமே கிடையாது. அதுவும் மகளிர் உரிமைகளை முன்னெடுக்கும் அமைப்பாக கருதப்படும் திமுக ஏன் மகளிர் அமைப்பை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடத் துடிக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது.
இளைஞர் அணி, மாணவர் அணி, தொழிலாளர் அணி, விவசாயிகள் அணி, இலக்கிய அணி என்று தொடக்க காலத்தில் கட்சியின் அடித்தளத்தை வலுவாக்க பல்வேறு அணிகள் உருவாக்கப்பட்டன.
மகளிர் அணி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கனிமொழி பொறுப்பேற்ற பின்னர்தான் பாப்புலர் ஆனது. கல்விகற்ற பெண்கள் அதிகமாக பொறுப்புக்கு வந்தது திமுகவில்தான். இப்போது அந்த எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனால், கனிமொழியின் செயல்பாடுகள் கட்சித் தலைமைக்கு பிடிக்கவில்லையா?
அல்லது தலைவரின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை. சமீப காலமாக கனிமொழியை டம்மியாக்கும் அளவுக்கு முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கனிமொழியின் அணுகுமுறை முக்கியமான சாதி அமைப்புகளைச் சேர்ந்தவர்ளை அவரிடம் நெருங்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது. வன்னியர் பகுதியிலும், நாடார் பகுதியிலும், முத்தரையர் பகுதியிலும் அவரை அணுகும் போக்கு அதிகரித்திருக்கிறது. மக்களவை உறுப்பினர் என்ற வகையிலும் அவருடைய செயல்பாடு சிறப்பாக இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக கனிமொழி மீது மீடியா வெளிச்சம் அதிகமாக விழுகிறது. அவருடைய செயல்பாடுகள் உடனுக்குடன் வெளிச்சத்துக்கு வருகின்றன. இது ஸ்டாலின் குடும்பத்தினருக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
திமுகவில் பல்வேறு அணிகள் துடிப்பாக செயல்படுவதை கலைஞரே ஊக்குவிப்பார். ஒரு மாவட்டத்திலேயே போட்டிகளை வரவேற்பார். ஆனால், அத்தகைய அணிகள் கட்சிக்கு பிணியாக மாறிவிடக்கூடாது என்பதில் கலைஞர் உறுதியாக இருப்பார்.
தனது மகன்களையே கலைஞர் அப்படித்தான் வளர்த்தார். பிணியாக மாறிவிடுவாரோ என்ற நிலையில்தான் மு.க.அழகிரியையே தூக்கி எறிந்தார். தலைமைக்கும் கட்சிக்கும் பாதிப்பில்லாமல் எதையும் கலந்து பேசித்தான் கனிமொழி செயல்படுவதாக இதுவரை கருதப்பட்டு வந்தது.
அப்படி இருக்கும்போது, ஏற்கெனவே வாங்கிய மகளிர் அணி உறுப்பினர்கள் படிவங்களே இற்றுப்போன நிலையில், இப்போது புதிதாக இளம்பெண்கள் அமைப்பு உருவாக்கப்படும் என்ற முயற்சி தேவையில்லாத ஆணியாகவே மகளிர் அணியினர் கூறுகிறார்கள்.
அதிலும், இளைஞர் அணியின் கீழேயே இளம்பெண்கள் அமைப்பும் செயல்படும் என்று கூறியிருப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயம் என்கிறார்கள். அதிமுகவில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை என்ற அமைப்பு தொடங்கப்பட்டதும், அதன் இன்றைய நிலையும் திமுக தலைமைக்கு தெரியாமல் இருக்காது. ஒருவேளை தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
பெண்கள் தலைமையிலேயே பெண்களை உறுப்பினர்களாக திரட்ட ஒன்றியச் செயலாளர்கள் அனுமதிப்பதில்லை. மாவட்ட மகளிர் அமைப்பாளர்களே தங்களை சுதந்திரமாக செயல்பட ஒன்றியச்செயலாளர்கள் அனுமதிப்பதில்லை என்று புலம்பித் தவிக்கிறார்கள்.
அப்படி இருக்கும்போது, இளைஞர் அணியினர் இளம்பெண்களை உறுப்பினர்களாகச் சேர்த்து, அவர்களை பொறுப்புக்கு அனுமதித்து, அதிகாரத்தை பிரித்துக் கொடுத்து… நல்லா விடுவாங்க என்று அலுத்துக் கொள்கிறார்கள்.
திமுகவைப் பலப்படுத்த வேண்டுமென்றால், மகளிர் அணியை அதிகாரம் மிக்க அணியாக மாற்ற வேண்டும். உள்ளாட்சிகளில் மகளிருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்துள்ள நிலையில், நாடாளுமன்றம் சட்டமன்றங்களில் 33 சதவீதம் இட ஒதுக்கீடை வலியுறுத்தும் நிலையில் ஏற்கெனவே பொறுப்பில் இருக்கும், தங்களுக்கு ஏதும் முக்கியத்துவம் இல்லை என்று வருத்தப்பட்டு நொந்துகொண்டிருக்கும் மகளிரை மேலும் வெறுப்பூட்டும் வகையிலான முயற்சிகளை தலைமை தடுத்து நிறுத்த வேண்டும்.
கனிமொழி ஸ்டாலினுக்கு கட்டுப்பட்டுத்தான் செயல்படுகிறார். அவரை, உதயநிதி ஸ்டாலினுக்கும் கட்டுப்பட வைக்கும் முயற்சியாகவே இதை கட்சிக்காரர்கள் கருதுகிறார்கள். இது ஆபத்தான போக்கு. இதற்கு யார் காரணம் என்றாலும், அவர்கள் கட்சிக்கு கேடு செய்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக