புதன், 29 ஜூலை, 2020

பிரகாஷ் போர்செழியன் காலமானார் .. திமுக களப்பணியாளர் ... கொரோனாவால் தொடரும் இழப்புக்கள்

Suriya Krishnamoorthy : நேற்று இரவு மூன்று முறை அழைத்திருந்தார், கவனிக்கவில்லை. நேரமாகிவிட்டது காலையில் திரும்ப அழைக்கலாம் என்று நினைத்தேன்.
ஏதோ நினைப்பில் இரவே அழைத்தேன். ஓபிசி இடஒதுக்கீடு குறித்து சில தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
பேசிவிட்டேன் என்று மகிழ்வதா, கடைசியாக பேசியிருக்கிறேனே என்று அழுவதா என்று தெரியவில்லை.
இன்றைக்கு காலையில் அண்ணன் பிரகாஷ் இல்லை என்று செய்தி வந்ததிலிருந்து, எதுவுமே ஒடவில்லை.
தென் தமிழகத்தின் கீழ்மத்திய தர வர்க்கத்திலிருந்து புறப்பட்டு, படிப்பின் துணை கொண்டு மட்டுமே சொந்த வாழ்வில் உயரங்களை தொட்டவர். 80களின் இலட்சியவாத தலைமுறை, கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி எப்படி மேலெழுந்தது வந்தது என்பதை அவர் வாழ்வின் கதைகளை கொண்டே அனுமானித்து வைத்திருந்தேன்.
அரசு வேலைகளில் நம்மவர்கள் அமர வேண்டிய அவசியத்தை அவர் பேசாத நாளில்லை.

சமூகம் குறித்தும், அரசியல் குறித்தும் தனக்கே உரித்தான தனித்த பார்வைகளையும், தெளிவுகளையும் வைத்திருந்தார். அவற்றை உரிய முறையில் மறுத்து வாதிட்டால், திறந்த மனதோடு ஏற்கிற குணம் அவருக்கு எப்போதும் இருந்தது.
விளிம்பிலும் அல்லாமல், மையத்திலும் அல்லாமல் சமூகத்தில் இடைநிலையில் ஊசலாடிய பின்புலத்திலிருந்து, சொந்த வாழ்வில் நிலையான இடத்தை அடைவதற்கான போராட்டத்தை இடையறாது நடத்திய திரளில் நான் பார்த்த சாட்சியம் அவர்.
தன் வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஏதோ ஒரு வகையில் துணையிருந்த அரசியலை, கடைசி வரை நம்பினார். அரசு வேலை என்கிற வரம்புக்கு உட்பட்டு தன்னாளான பணிகளை செய்துகொண்டே இருந்தார்.
இன்று காலை மறைந்தவர், நேற்று இரவு என்னிடம் கடைசியாக பேசியது ஓபிசி இடஒதுக்கீடு குறித்து என்கிற புள்ளியிலிருந்து அவர் வாழ்வை அனுமானித்துக் கொள்ளலாம்.
இந்த நான்கு ஆண்டுகளில், அவரோடு மணிக்கணக்கில் பேசாத வாரமே இல்லை.
இனி சூர்யா... அந்த.. என்று தொடங்குகிற அவருடைய அழைப்புகள் வரப்போவதில்லை என்பதை நம்ம முடியவில்லை.
எல்லாவற்றிலும் ஒதுங்கி நிற்கும், சலனமே இல்லாத அந்த அமைதியான முகத்தை இனி பார்க்க வாய்ப்பில்லை என்கிற உண்மை கொஞ்சம் கடினமாக இருக்கிறது.
பேசிக்கொண்டே இருந்தவரை, உடம்பு சரியில்ல போலயேண்ணன். ஓய்வெடுங்கள் என்று நான் தான் துண்டித்தேன். இனி பேச சாத்தியமேயற்று போகுமென்று கனவிலும் நினைக்கவில்லை.
கொரோனாவின் கோரம் நம்மை நிலைகுலைய வைத்துவிடுகிறது. இன்னமும் அந்த துயரச்செய்தி பொய்யாகிவிடாதா என்று மட்டும் தான் தோன்றுகிறது.
நினைவில் இருப்பீர்கள் அண்ணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக