புதன், 1 ஜூலை, 2020

போலீசார் மீது இப்போது கொலை வழக்கு பதிவு இல்லை.. விசாரணைக்கு பிறகே முடிவு- சிபிசிஐடி ஐஜி பேட்டி

விசாரணைக்கு பிறகுதான் முடிவு
வழக்கு பதிய ஏன் தாமதம்? விமர்சனங்கள்   tamiloneindia.comcom  :தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதை மரணம் தொடர்பாக, காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்வது பற்றி விசாரணைக்கு பிறகுதான் முடிவு செய்யப்படும் என்று சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பலியானதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று முதல் சிபிசிஐடி போலீசார் இந்த விசாரணையை கையில் எடுத்துள்ளனர். அவர்கள் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தனர். பிறகு ஜெயராஜ் வீட்டுக்குச் சென்று, அவர், குடும்பத்தாரிடம், நடந்தவை குறித்து கேட்டறிந்தனர் இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணை நடத்திக் கொண்டிருக்க கூடிய மதுரை ஐகோர்ட் கிளை, தந்தை மற்றும் மகன் ஆகியோருக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அடிப்படையில் பார்த்தால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறது என்று திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் தந்தை-மகன் உடலில் பல்வேறு காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளதாக முக்கியமான ஒரு தகவலை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இப்படியான ஒரு சூழ்நிலையில்தான் தூத்துக்குடியில் இன்று சிபிசிஐடி ஐஜி சங்கரிடம் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்வீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், விசாரணைக்கு பிறகுதான் அதுபற்றி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையே, அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்வதற்கு முகாந்திரம் இருக்கிறது என்று திட்டவட்டமாக தெரிவித்த பிறகும், காவல்துறை இதுபோல ஒரு பதிலை கொடுத்துள்ளது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

வழக்கு பதிய ஏன் தாமதம்?

மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான ஹென்றி டிபேன் இது பற்றி கூறுகையில், கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்த நிலையில் போலீசார் அப்படி செய்ய மறுப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 302 இன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்துவிட்டு, விசாரணைக்கு பிறகு ஒருவேளை, குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்போது, அந்த பிரிவை நீக்கி விடலாமே. மற்றவர்கள் மீதான வழக்கின்போது அப்படித்தானே வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. போலீசாருக்கு மட்டும் எதற்கு இந்த சிறப்பு சலுகை என்று கேள்வி எழுப்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக