திங்கள், 27 ஜூலை, 2020

தனியார் கல்வி நிறுவனங்கள் ’’மனசாட்சியற்ற மாபாதகர்கள்’ ஆன்லைன் கல்விக்கும் அதே கொள்ளை ..

சாவித்திரி ண்ணன் : படுபாவிங்க, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ’’மனசாட்சியற்ற மாபாதகர்கள்’’ என்றொரு பட்டம் வழங்கலாம்!
பள்ளி,கல்லூரிகள் மூடிக் கிடக்கின்றன! பிள்ளைகள் படிக்க வகையின்றி , பேருக்கு ஆன்லைன் கல்வி என்ற ஆகாத்திய வழிமுறை ஒன்று இவர்களுக்கு பணம் பறிக்க கிடைத்துவிட்டது. அதுவும் கொஞ்சமும் குறைக்காமல் முழுப் பணமும் கேட்கிறார்கள்! தாமதிக்க கூடாதாம்!
இன்று காலை என் நண்பர் சொன்ன செய்தி அதிர்ச்சி ரகம்! ’’என் பொண்ணு கோவை பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரியில் படிக்குது கண்ணன். அரசு கோட்டாவில் இடம் கிடைத்தது.ஆனால்,அதற்கே வருடத்திற்கு நான்கு லட்சத்து 77 ஆயிரம் வாங்குகிறார்கள்! இது தவிர, விடுதிக் கட்டணம் மாதம் 16,000. மார்ச் 20 ந்தேதி முதல் காலேஜ் மூடப்பட்டு பொண்ணு வீட்டுக்கு வந்தாச்சு! இப்ப முழு கல்விக் கட்டணத்தோடு,ஆண்டு முழுவதுக்குமான விடுதிக் கட்டணமும் அப்படியே கட்ட சொல்கிறார்கள்!
மருத்துவ கல்வியை ஆன்லைனில் கற்பிக்க முடியாது.அதுவும் குறிப்பாக மூன்றாவது, நான்காவது ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவமனையில் பிராக்டிக்கலாக நோயாளிகளை பார்ப்பதிலும், பேசுவதிலும்,பெரிய மருத்துவர்களோடு சேர்ந்து இயங்குவதிலும் தான் உண்மையான கல்வியே இருக்குது!

அது முற்றாக தவிர்க்கப்பட்ட நிலையில் முழுக் கல்வி கட்டணமும் கேட்கிறார்கள்! அத்துடன் விடுதியில் தங்கவோ,சாப்பிடவோ இல்லாத இந்த நான்கு மாதத்திற்கு மட்டுமின்றி,இனிவரும் அனைத்து மாதத்திற்கும் அப்படியே முழுப்பணமும் கட்டச் சொல்கிறார்கள்!

அதாவது அங்கு தங்காமல்,திங்காமல் இருக்கும் நிலையிலும் கொடுக்க வேண்டிய பணம் எல்லாத்தையும் குடுத்தே ஆகணும்கிறாங்க! பேரண்ட்ஸ் எல்லாருக்கும் இது பெரிய ஷாக்! என்ன பண்ணறது என்று தெரியல! இதுக்கு எங்க புகார் கொடுக்கணும், யார் ஆக்ஷ்ன் எடுப்பாங்க ஒன்னும் புரியல!
பல பேருக்கு வேலை போயிருச்சு! சிலருக்கு வியாபாரம் படுத்துருச்சு! கடனை உடனை வாங்கி கொடுக்கலாம் என்றால்,இப்படி அநியாயமாக கேட்பதை கொஞ்சமும் ஏற்கமுடியவில்லை? எப்போ கல்லூரி திறக்கும் என்று தெரியாத நிலையில் இப்படி அராஜகமாக பணம் புடுங்குறாங்க..! மனசாட்சியே இல்லாத பாவிகள்…!”என்றார்!
கவர்மெண்ட் கோட்டாவிற்கே 4,77,000 வாங்குறவங்க, நிர்வாக கோட்டாவிற்கு 22 லட்சம் வாங்குறாங்க! அவங்களுக்கும் இந்த நிலைமை தான்! உலகத்திலேயே இந்தியாவைப் போல மருத்துவ கல்லூரிக்கு மிக அதிக கட்டணம் வாங்கும் வேறொரு நாடு கிடையாது. இவர்கள் கற்றுத் தருவது மருத்துவ கல்வியா? அல்லது சூதா? கல்வியை வியாபாரமாகக் கூட செய்யவில்லை இந்த பாவிகள்! அதை பணம் பறிக்கும் சூதாக்கிவிட்டார்களே! இப்படி படித்து வருபவர்களிடம் நேர்மையான மருத்துவம் கிடைக்குமா? நோயாளிகளின் உயிருக்குத் தான் உத்திரவாதம் இருக்குமா?
நீட் கொண்டு வந்ததால் தனியார் கல்வி நிறுவனங்கள் பணம் அதிகமாக வாங்குவதை தடுத்துவிட்டதாக நீட்டி முழங்கும் பா.ஜ.கவின் நேர்மையாளர்களிடம் இதற்கு பதில் இருக்கிறதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக