வியாழன், 30 ஜூலை, 2020

குஷ்பூ புதிய கல்விகொள்கைக்கு ஆதரவு .. பாஜகவில் சேர போகிறாரா?

பாஜகவில் இணைகிறேனா? குஷ்பு பதில்!

மின்னம்பலம் :புதிய கல்விக் கொள்கைக்கு நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய தேசிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. எனினும் மும்மொழிக் கொள்கை, ஒரே நுழைவுத் தேர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை மாநில அரசுகள் நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு, “புதிய கல்வி கொள்கை 2020 வரவேற்கத்தக்க நடவடிக்கை. தம்ஸ் அப்” என்று கூறி வரவேற்பு தெரிவித்திருந்தார். புதிய தேசிய கல்வி கொள்கை தொடர்பாக காங்கிரஸின் நிலைப்பாட்டுக்கு மாறாக, குஷ்பு இவ்வாறு தெரிவித்தது விவாதத்தை ஏற்படுத்தியது.இதனைக் குறிப்பிட்டு பலரும் குஷ்பு விரைவில் பாஜகவில் இணைய இருக்கிறார் என சமூக வலைதளங்களில் கருத்து கூற ஆரம்பித்தனர்.

இந்த கேள்வியை எழுப்பிய மதுரை என்பவரின் ட்விட்டுக்கு பதிலளித்த குஷ்பு, “பாவம்...லூசா நீங்க” என்று சாடியிருந்தார்

மேலும், “பாஜகவினர் ஓய்வெடுக்கலாம், மகிழ்ச்சியடைய வேண்டாம். நான் பாஜகவுக்கு செல்லவில்லை. எனது கருத்து எனது கட்சியிலிருந்து வேறுபட்டிருக்கலாம். நான் சொந்த சிந்தனை மனம் கொண்ட ஒரு தனிநபர். புதிய தேசிய கல்விக் கொள்கையில் சில இடங்களில் குறைபாடுகள் உள்ளன. ஆனால் மாற்றத்தை ஒரு நேர்மறையுடன் பார்க்க முடியும் என்று நான் இன்னும் உணர்கிறேன்” என்று தெரிவித்தார்.

இன்னொரு பதிவில், “புதிய கல்வி கொள்கை தொடர்பான எனது நிலைப்பாடு காங்கிரஸிலிருந்து வேறுபடுவதற்காக ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் தலையை ஆட்டும் ரோபோ அல்லது கைப்பாவையாக இருப்பதை விட உண்மையை பேசுகிறேன். கட்சித் தொண்டர் என்பதைவிட நாட்டின் குடிமகனாக கருத்தை பதிவிட்டுள்ளேன்” என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், “இந்திய நாட்டில் ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்” என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தி, சமஸ்கிருத மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் மக்களிடையே பிளவு மனப்பான்மை தான் வளரும்.

எனவே, கல்வி பெறுவதில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை போக்காமல், வகுப்புவாத கொள்கைகளை புகுத்தாமல் அரசமைப்புச் சட்டப்படி மக்களுக்கு இருக்கிற உரிமைகளை போற்றிடும் வகையில் புதிய கல்விக் கொள்கை இல்லை. இந்த கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால் 136 கோடி மக்களும் மதரீதியாக பிளவுபடுத்துகிற வகையில் கல்வி முறை புகுத்தப்பட்டு காவிமயமாவதற்கு அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. மக்கள் விரோத புதிய கல்விக் கொள்கையை உடனடியாக நிறைவேற்றாமல் பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடத்துவதோடு, அனைத்து மாநில அரசுகளோடு கலந்து பேசி நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக