திங்கள், 27 ஜூலை, 2020

திமுக கூட்டணி - யாருக்கு எத்தனை சீட்?

மின்னம்பலம் : மொபைல் டேட்டாவை ஆன் செய்ததும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது,
“தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. திமுக வரும் தேர்தலில் தனியாக நின்றாலே ஜெயித்துவிட முடியும் என்று பிரசாந்த் கிஷோர் திமுக தலைமைக்கு ஏற்கனவே ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு குறிப்பு கொடுத்திருக்கிறார். ஆனாலும் ஸ்டாலின் இதில் தீவிரமாக யோசித்து வருகிறார். வரும் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான காரணிகளில் ஒன்றைக்கூட திமுக தவற விட்டுவிடக் கூடாது என்பதில் ஸ்டாலின் தெளிவாக இருக்கிறார். வரும் தேர்தலில் திமுகவின் வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய காரணிகளில் கூட்டணியும் ஒன்று. எனவே நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே அமைக்கப்பட்ட இந்தக் கூட்டணித் தேரிலேயே சட்டமன்றத் தேர்தலுக்கும் பவனிவர வேண்டும் என்ற எண்ணம் ஸ்டாலினிடம் இருக்கிறது.
ஆனாலும் ஏற்கனவே திமுக பொருளாளர் துரைமுருகன் சொன்னதுபோல தேர்தல் நெருங்கும் நிலையில், சிலர் வரலாம், சிலர் போகலாம். அந்த வகையில் திமுகவின் தலைமை வட்டாரத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட் என்ற ஓர் உத்தேசக் கணக்கு திட்டமிடப்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க கூட்டணிக்குத் தலைமை தாங்கும் திமுகவின் பார்வையில் இது உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், முஸ்லிம் லீக், மமக, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் இருந்த நிலையில் திமுக 174 தொகுதிகளில் போட்டியிட்டது.

ஆனால் திமுக கூட்டணியில் இப்போதைக்கு காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், சிபிஎம், இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மமக, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை இருக்கின்றன. இவை தவிர பல தோழமைக் கட்சிகளும் இயக்கங்களும் இருக்கின்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அணியில் காங்கிரஸுக்குக் கொடுக்கப்பட்ட 41 இடங்களில் 9 இடங்களே வெற்றிபெற்றது. பெரும்பாலான மீதி இடங்களில் அதிமுகவே வெற்றி பெற்றது. எனவே இம்முறை கூட்டணிக் கட்சிகளுக்கான இடம் மிகவும் கறாரான முறையில் கணக்கிடப்படுவதாகத் தெரிகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட எம்.பி தொகுதிகளின் அடிப்படையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் சீட்டுகளை திமுக கணக்கிடுகிறது. அதாவது ஓர் எம்.பி தொகுதியில் போட்டியிட்ட கட்சிக்கு மூன்று சட்டமன்றத் தொகுதிகள் என்ற விகிதத்தில் திமுக திட்டமிட்டு வைத்துள்ளது. அதன்படி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 10 எம்.பி தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸுக்கு 30 சட்டமன்றத் தொகுதிகள் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் அடுத்த கட்சி மதிமுக கடந்த எம்.பி தேர்தலில் ஒரு மக்களவை தொகுதி, ஒரு ராஜ்யசபா என இரு எம்.பி.க்களைப் பெற்றது. அதன் அடிப்படையில் மதிமுகவுக்கு 6 சட்டமன்றத் தொகுதிகள், அடுத்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தலா இரு எம்.பி தொகுதிகளில் போட்டியிட்டன. அவற்றுக்கு 6 + 6 = 12 சட்டமன்றத் தொகுதிகள். விடுதலைச் சிறுத்தைகள் இரு எம்.பி தொகுதிகளில் போட்டியிட்டதன் அடிப்படையில் அக்கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகள். ஒரு தொகுதியில் நின்ற கொமதேக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயகக் கட்சி கட்சிகளுக்கு தலா 3 சட்டமன்றத் தொகுதிகள். ஆக இந்தக் கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தம் 63 தொகுதிகள் போய்விடுகின்றன. 234 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தம் 63 தொகுதிகள் போய்விட, மீதி 171 தொகுதிகளில் திமுக போட்டியிட வாய்ப்பிருக்கிறது.
இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் தவிர மீதியிருக்கும் கட்சிகளிடம், ‘நீங்கள் ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது போல உதயசூரியன் சின்னத்திலேயே நின்றால் உங்களது கட்சிக்கான தேர்தல் செலவை திமுக ஏற்றுக் கொள்ளும்’ என்றும் திமுக கூற வாய்ப்பிருக்கிறது. அப்படிப் பார்த்தால் ஏற்கனவே 171 இடங்கள் தவிர, மதிமுக 6, விடுதலைச் சிறுத்தைகள் 6, கொமதேக 3, ஐஜேகே 3 ஆகிய 18 இடங்களிலும் என மொத்தம் 189 சட்டமன்றத் தொகுதிகளிலும் உதயசூரியனே நிற்க வாய்ப்பிருக்கிறது. கடந்த எம்.பி தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்தும் போட்டியிடாத மனிதநேய மக்கள் கட்சிக்கும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம்.
இதுதான் இப்போதைய திமுக தலைமைக்குள் ஆலோசிக்கப்பட்டு வரும் பட்டியல். இது முழுக்க முழுக்க திமுகவின் பார்வையில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கும் உத்தேசப்பட்டியல். கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வருகிற சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கு இவ்வளவு இடங்கள் தேவையென இப்போதே ஆலோசனைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கருத்தும், திமுகவின் கருத்தும் விவாதிக்கப்பட்டு பிறகே கூட்டணிக் கணக்கு இறுதி செய்யப்படும். வரும் தேர்தலில் அரசியல் சூழலைக்கொண்டு இந்தக் கூட்டணிக் கணக்கு மாறலாம் அல்லது இந்தக் கூட்டணிக் கணக்கை அடிப்படையாகக் கொண்டு கூட்டணிக் கட்சிகள் கூட மாறலாம்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக