புதன், 22 ஜூலை, 2020

பத்திரிக்கையாளர் மகள்கள் முன்பு துப்பாக்கியால் சுட்டு கொலை .. உத்தர பிரதேசத்தில் வீடியோ


மின்னம்பலம் : உத்தர பிரதேச பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி, தனது இரண்டு மகள்களுடன் டெல்லி அருகேயுள்ள காசியாபாத்தில் கடந்த 20ஆம் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். சுமார் 10.30 மணியளவில் அவரை மர்ம கும்பல் ஒன்று வழிமறித்துள்ளது. இதனால் இரு சக்கர வாகனத்தை வேகமாக இயக்கியுள்ளார் விக்ரம். ஆனால், பைக்கை சுற்றிவளைத்த அந்த கும்பல், அவரை கீழே தள்ளி சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.
தாக்குதலால் அதிர்ச்சியடைந்த விக்ரமின் இரண்டு மகள்களும் பீதியுடன் சம்பவ இடத்திலிருந்து உதவிக்காக ஓடினர். தாக்கிய கும்பல் விக்ரமை தலையில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியது. சிசிடிவி காட்சிகள் சாலையில் காயத்துடன் விக்ரம் ஜோஷி விழுந்து கிடப்பதையும், அவரது மகள்களில் ஒருவர் அழுதுகொண்டே உதவிக்காக கத்தியதையும் காட்டியது. இந்த சம்பவம் பத்திரிகையாளர் வீட்டின் அருகிலேயே நிகழ்ந்துள்ளது.

இதுதொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவரை தேடிக்கொண்டிருப்பதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். “ரவி மற்றும் சோட்டு ஆகிய இரு முக்கிய குற்றவாளிகள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு ஆயுதமும் கைப்பற்றப்பட்டுள்ளது" என்று காஜியாபாத்தின் மூத்த போலீஸ் சூப்பிரண்டு கலாநிதி நைதானி தெரிவித்தார்.

எனினும், விக்ரம் ஜோஷியின் உடலை உடற்கூராய்வுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் மருத்துவமனை முன்பு பத்திரிகையாளர்களும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறந்த பத்திரிகையாளரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என உத்தர பிரதேச அரசாங்கம் அறிவித்துள்ளது.
தாக்குதலுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர், தனது மருமகள் ஒரு குழுவினரால் துன்புறுத்தப்படுவதாக போலீசில் புகார் செய்திருந்தார். இந்த நிலையில் காவல் துறையின் திறமையின்மை காரணமாகவே விக்ரம் ஜோஷி உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “தன் உறவினர் மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதை எதிர்த்த பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி கொல்லப்பட்டிருக்கிறார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உத்தர பிரதேசத்தில் ராம ராஜ்ஜியம் அமைப்பதாக சொல்லிவிட்டு, ரவுடி ராஜ்ஜியம் நடத்துகிறார்கள்” என்று சாடினார்.
எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக