வியாழன், 23 ஜூலை, 2020

ஆ .ராசா : திமுக இந்து விரோத கட்சியல்ல ... தமிழ் மக்களுக்கு காவி அரசியல் நன்றாகவே புரிந்திருக்கிறது.

Nanthivarman:    பலரின் சந்தேகங்களுக்கு தெளிவான பதிலை திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா (A Raja) அவர்கள் விகடனில் தெரிவித்து உள்ளார்.. அதில் மிக முக்கிய மூன்று கேள்விகளும் அதற்கான பதில்களும் கீழே....
1. தி.மு.க இந்து விரோத கட்சி என்று தொடர்ந்து பரப்பப்பட்டு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? தி.மு.க இந்து மக்களுக்கு என்ன செய்துள்ளது?
தி.மு.க 'இந்துக்கள்' என்றழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களாக விளங்கும் சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்குமான உரிமை மீட்பு இயக்கம். தன் வாழ்நாளுக்குள்ளாகவே, தமிழ் நாட்டளவிலாவது இம்மக்களுக்கு சூத்திர பட்டமும், பஞ்சம பட்டமும் ஒழிய வேண்டும் என்று தன்னலமற்று போராடியவர் தந்தை பெரியார். பெரியாரின் எண்ணப்படிதான் காமராஜர் ஊரெங்கும் பள்ளிக்கூடங்களை திறந்தார். பின்னர், கலைஞர் கல்லூரிகளை திறந்து, சூத்திரர்களாகவும் பஞ்சமர்களாகவும் ஆக்கப்பட்ட இந்துக்களை பட்டதாரிகளாக மாற்றினார்.

படித்த அந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு போராடி வெற்றி பெற்றதும் திராவிட இயக்கம்தான். இன்றைக்கும் இம்மக்களுக்கு மறுக்கப்படும் மருத்துவக் கல்விக்கு பின்னால் இருக்கும் நீட் தேர்வு தொடங்கி, தற்போது மறுக்கப்படும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வரை சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் இயக்கம் தி.மு.க.
மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வேண்டும் மண்டல் பரிந்துரைகளை அமலாக்கப் பாடுபட்டது தி.மு.க. அருந்ததியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கியதோடு, 2000 ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு, சூத்திரர்களாக பஞ்சமர்களாக ஆக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டது தி.மு.க.
இந்து என்றழைக்கப்படும் மக்களில் 95% சதவீதமாகவுள்ள இந்த பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமைக்கோரி தி.மு.க போராடியபோதெல்லாம் அவற்றை எதிர்த்தவர்கள் கிறிஸ்தவர்களா? இஸ்லாமியர்களா? இல்லையே! அதை செய்தவர்கள் பிராமணர்களும் அவர்களோடு சேர்ந்த முன்னேறிய சாதியை சார்ந்த இந்துக்களும்தான் வேறு மொழியில் சொன்னால், பாஜகவும் அதன் பரிவாரங்களுமே இன்றுவரை இடஒதுக்கீட்டை எதிர்த்து வருகின்றன. எனவே, தி.மு.க இந்து விரோத கட்சியல்ல. யார் இந்து& என்பதில் பிரச்சனை இருக்கிறது.
இந்து என்று தங்களை ஏற்கும் பிற்படுத்தப்பட்ட சூத்திரர்களுக்கும், தாழ்த்தப்பட்ட பஞ்சமர்களுக்கும், அந்த மதத்தில் சொல்லப்பட்டுள்ள வரையறைகளும், வரம்புகளும், கடமைகளும், கட்டுப்பாடுகளும் ஏற்புடையதா என்பதில் எங்களுக்கு கருத்து வேறுபாடு உண்டு.அதனால்தான், பேரறிஞர் அண்ணா அவர்களே இந்து எனும் அடையாளத்தை ஏற்க மறுத்தார். இந்த கருத்துப் போராட்டம் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக, குறிப்பாக 1916-ல் வெளிவந்த பிராமணர் அல்லாதோர் அறிக்கை (Non-Brahmin Manifesto) வந்ததில் இருந்தே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அந்த கருத்துப் போராட்டத்தில் நாங்கள் எப்போதும் தோற்றதில்லை. தி.மு.க.வின் அரசியல்-சமூகப்பார்வை தமிழர்களை இனத்தால், மொழியால் இனணப்பதேயன்றி; மதத்தால், சாதியால் பிரிப்பதல்ல!.
2. தேர்தலுக்காகவே தி.மு.க இந்து மக்களுக்கு ஆதரவாக இருப்பதுபோல் வேஷம் போடுகிறது என்கிறனரே?
எங்களுக்கு வேஷம் போடவேண்டிய அவசியமில்லை. மதத்தின் பெயரால் காலந்தோறும், கடவுளின் வடிவங்களையும், கருத்துகளையும் மாற்றிக்கொண்டே இருக்கும் இந்துத்துவா கொள்கையை ஏற்றிருக்கும் பாஜகவுக்கும் அதன் பரிவாரங்களுக்கும்தான் இது பொருந்தும். இப்படிப்பட்ட பொய் பிரச்சாரங்களை 1971 தேர்தல் முதலே தி.மு.க சந்தித்து வந்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அப்படிப்பட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. தமிழர்கள் மதத்தின் பெயரால் நடத்தப்படும் அரசியல் நகர்வை எப்போதும் ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. அண்மையில்கூட,

இந்துக்களாக அறியப்படும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இடஒதுக்கீடு கேட்டு தி.மு.க தொடுத்த வழக்கில், அவர்களுக்கு ஒதுக்கீடு கிடையாது என்று உயர் நீதிமன்றத்திலேயே வாதிட்டுவிட்டு இந்துக்களின் பாதுகாவலன் என்று கூச்ச நாச்சமின்றி பாஜக எழுப்பும் வெற்று கோஷம்தான் மக்களிடம் அம்பலப்பட்டு நிற்கிறதே தவிர; தி.மு.க அல்ல. இந்துக்கள் என்றழைக்கப்படும்-சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய மக்களுக்கு (Socially and Educationally Backward) உரிமை கேட்டு அதற்காக அரசியல் சட்டத்தை முதன் முதலாக திருத்தியது திராவிட இயக்கம். அன்று தொடங்கி, மண்டல் கமிஷன் பரிந்துரை வரை நீண்டு, இன்று வரை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கீட்டை ஏற்க மறுக்கும் இவர்கள் இப்போது மதத்தால் அவர்களை உள்ளிழுக்க நினைக்கும் தந்திரம் இங்கு பலிக்காது.

3. ஆனால், இன்னமும் மு.க.ஸ்டாலின் இந்து மத திருமணம் குறித்து பேசியதுதானே சர்ச்சையில் இருக்கிறது?
இந்துமதத் திருமணத்தின்போது என்ன மந்திரம் சமஸ்கிருதத்தில் சொல்லப்படுகிறதோ அது குறித்துத்தான் அக்கருத்தை அவர் சொன்னார். அப்படி இல்லை என்று ஏன் எவரும் விளக்க மறுக்கிறார்கள். ஆரோக்கியமான உள் விவாதம் நடத்தி, காலத்திற்கேற்ப அப்படிப்பட்ட கருத்துக்களை மாற்றிக் கொள்ள மனமில்லா பழமைவாதிகள், உள்ளதைச் சொன்னால் ஏன் கோபிக்கிறார்கள் என்று புரியவில்லை. பெரியார் வலியுறுத்தி அண்ணா கொண்டு வந்த சுயமரியாதை திருமண சட்டத்தின் ஊற்றுக்கண்ணே சமஸ்கிருதத்தில் இருக்கும் இப்படிப்பட்ட ஒவ்வாமை மிக்க அருவருப்பான சுலோகங்களிலிருந்துதான் தொடங்கிற்று. இப்படிப்பட்ட பிரச்சாரங்களை எல்லாம் முறியடித்துத்தான் தி.மு.க. 39 நாடாளுமன்ற தொகுதிகளை வென்றுள்ளது என்பதை மறந்து விடவேண்டாம். தமிழக மக்களுக்கு நன்றாகவே காவி அரசியல் புரிந்திருக்கிறது.
- Sundaram Chinnusam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக