சனி, 25 ஜூலை, 2020

புலிகளின் ஆட்சேர்ப்பை ‘லபக்’, ‘ஆள்பிடி’, ‘கொள்ளை’ என்ற சங்கேதப் பெயர்களில் மக்கள் ..

புலிகளின் துணுக்காய் சித்திர வதை கூடம்
தமிழ் மாணவன் : பகுதி-2 வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு
புலிகள் எதிர்பார்த்திராத அளவுக்கு சிறிலங்கா இராணுவத்தின்
நடவடிக்கைகள் அமைந்தன. மரபு வழியில் படைக் கட்டமைப்பையும் அதே வகையிலான தாக்குதல் மற்றும் படை நடவடிக்கைகளையும் குலையவிடக் கூடாது என்ற கவனத்தோடு புலிகள் செயல்பட்டனர். ஆனால் சிறிலங்கா ராணுவமோ மரபுவழி ராணுவமாக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதும் அதன் ஒரு பிரதான அம்சமாக ஒரு முக்கிய அலகு கெரில்லா போர்முறையைப் பின்பற்றிப் புலிகளின் மீது நடவடிக்கைகளில் ஈடுபட்டது. புலிகளை நிலைகுலைய வைக்கும் தாக்குதல்களை சிறிலங்கா ராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகள் மிகக் கச்சிதமாக நடத்தின. இந்தத் தாக்குதல்களில் புலிகளின் முக்கியத் தளபதிகள் பலரும் கொல்லப்பட்டனர்.
இவ்வாறான ஒரு தாக்குதலின்போது புலிகளின் கொழும்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சார்ள்ஸ் என்பவர் (கேனல் சார்ள்ஸ்) மூன்று உதவியாளர்களுடன் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வன்னியின் புவியியல் அமைப்பு (காடும் ஆறுகளும் பெருங்குளங்களும்) இராணுவத்துக்கு வாய்ப்பாகியது. புலிகள் தமது திறன் வாய்ந்த கெரில்லாப் போர்முறையை முழுதாகக் கைவிட்டு முற்று முழுதாக மரபுவழிப் போர்முறையைக் கையாண்டனர். இதே வேளை புலிகளின் கடல்வழி ஆயுத வருகையை-விநியோகத்தை, சிறிலங்கா விமானப் படையும் கடற்படையும் இணைந்து முழுமையாகத் தடுத்திருந்தன. புலிகளின் நான்கு ஆயுதக் கப்பல்கள் கடலில் தாக்கி அழிக்கப்பட்டிருந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது. இதன் பின்னணியில் இந்தியாவும் அமெரிக்காவும் இருந்ததாக நம்பப்படுகிறது.


முக்கியமாக நான்காம் கட்ட ஈழப்போர் என்று வர்ணிக்கப்படும் இந்தக் காலகட்டப் போரில் புலிகளின் கடற்படை அல்லது கடற்புலிகளின் பலம் முற்றாகச் சிதைக்கப்பட்டது. அத்துடன் புலனாய்வுத் துறையும் அவர்களின் கரும்புலிகளின் அணியும் செயலற்ற நிலமைக்குத் தள்ளப்பட்டன. கொழும்பு நடவடிக்கைகளுக்கு இடமளிக்காமல் சிறிலங்கா அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டன. தவிர வன்னிக்கு வெளியே யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்கிளப்பு, அம்பாறை மாவட்டங்களின் சிறு அளவிலான ராணுவ நடவடிக்கைகளையோ அரசியல் செயல்பாடுகளையோ மேற்கொள்ள முடியாதவாறு சிறிலங்கா அரசின் புலனாய்வு நடவடிக்கைகளும் இறுக்கமும் இருந்தன. அத்துடன் கேனல் கருணா என்ற விநாயக மூர்த்தி முரளிதரனின் பிரிவோடு கிழக்கில் புலிகளின் ஆதிக்கமும் அதன் வழியான எல்லா வளங்களும் பாதிக்கப்பட்டன. குறிப்பாகப் புலிகளின் போருக்குக் கிழக்கு இளைஞர்கள் பெரும் பலமாக இருந்தனர். கருணாவின் பிரிவோடு இது தடைப்பட்டது.


இதேவேளை கடலையும் காட்டுப்பகுதியையும் மெல்லமெல்ல தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் சிறிலங்கா ராணுவம் கொண்டுவந்தது. படைத்தரப்பு மன்னாரிலிருந்து நடவடிக்கையை மேற்கொண்டு வன்னி மேற்கின் காட்டுப் பகுதிகளையும் சிறுபட்டணங்களையும் முதலில் கைப்பற்றியது. ராணுவரீதியில் புலிகளின் ஆயுதமும் கவசமும் கடலும் காடுமே. மறுபுறத்தில் மக்கள். படைத்தரப்பின் போர் உத்தியாகக் காட்டையும் கடலையும் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்ததன் மூலம் புலிகளைப் பாதுகாப்பற்ற வெளிக்குள் தள்ளிவிட்டனர். இதனால் புலிகள் சனங்களை அரணாகப் பயன்படுத்தத் தொடங்கினர். புலிகளின் அழிவு என்பது இது போன்ற ஏனைய பல தவறான நடவடிக்கைகள் மூலம் ஏற்கனவே நிகழ்ந்திருந்தாலும் சனங்களைக் கட்டாயப்படுத்திப் போருக்கு இழுத்ததன் மூலம் மேலும் பாதகமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். சனங்களுக்கும் புலிகளுக்குமான முரண் ஒரு கட்டத்தில் உச்சநிலைக்குப் போய்விட்டது.

கட்டாய ஆள்சேர்ப்பை வலியுறுத்திய புலிகளின் ஊடகங்கள் மறுபக்கத்தில் மக்கள் தாமாக முன்வந்தே போரில் இணைகின்றனர் என்று ஒன்றுக்கொன்று முரணான செய்திகளை வெளியிட்டன. சிறிலங்கா அரசு சர்வதேசத் தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதைப் புலிகள் இன்னும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டனர். வெளியே எந்தச் செய்திகளும் வர மாட்டாது என்பது உறுதியானவுடன் முழு அட்டகாசமாகத் தமது நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டனர். புலிகளின் மூத்த உறுப்பினர்கள் கட்டாய ஆள் பிடிப்பை வலியுறுத்திப் பேசியும் எழுதியும் வந்தனர்.
இந்த ஆள் சேர்ப்புக்கு (இதை வன்னி மக்கள் ‘லபக்’, ‘ஆள்பிடி’, ‘கொள்ளை’ என்ற சங்கேதப் பெயர்களில் குறிப்பிட்டனர்) எதிராகச் செயல்படுவோருக்கு மரண தண்டனை வழங்கலாம் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர். வன்னியிலிருந்து வெளிவந்த புலிகளின் ‘ஈழநாதம்’ பத்திரிகையும் ‘புலிகளின் குரல்’ வானொலியும் விடுதலைப் புலிகள் என்ற கொள்கை விளக்க ஏடும் இது தொடர்பான கட்டுரைகளையும் நிகழ்ச்சிகளையும் வெளிப்படுத்தின.
ஆக மிக மோசமான ஒரு நிலை உருவானது.

இதே வேளை படையினரின் முன்னேற்றம் தீவிரமடைந்து கொண்டேயிருந்தது. புலிகள் சேர்த்த பிள்ளைகள் (போராளிகள்) தொகை தொகையாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். ஊர்கள், தெருக்கள் எல்லாம் சாவை அறிவிக்கும் தோரணங்களாலும் சவ ஊர்வலங்களாலும் திணறின. மாவீரர் துயிலும் இல்லம் என்ற கல்லறை மயானங்கள் எல்லை கடந்து பெருத்தபடியே இருந்தன. சாவு ஒன்றுதான் நிச்சயமானதாக இருந்தது. சனங்கள் திகிலடைந்தனர். யுத்தம் மெல்ல மெல்லத் தீவிரமடைய இயல்பு வாழ்க்கை சிதைவடைந்தது. அகதிப் பெருக்கம், இடப்பெயர்வின் அவலம், சாவின் பெருக்கம் என நிலைமை மோசமான கட்டத்துள் வீழ்ந்தது. தினமும் இடப்பெயர்வு, கிராமங்கள் பறிபோதல், சிறு பட்டிணங்கள் வீழ்ச்சியடைதல் என்பதே செய்தியாயிற்று. ஆனால் புலிகளின் ஊடகங்கள் இதற்கு எதிரான செய்திகளையே சொல்லிக்கொண்டிருந்தன. ராணுவம் பொறியில் சிக்கப் போகிறது என்று அவை சொல்லிக் கொண்டிருந்தன.

 இடப் பெயர்வும் உயிரிழப்பும் மக்களை மிக மோசமாகத் தாக்கியது. மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்த இந்தச் சனங்கள் இடம்பெயர்ந்தபோது மிக மோசமான அவலத்திற்குள்ளானார்கள். இடம் பெயர்ந்திருந்த இந்த மக்களிடமிருந்து புலிகள் கட்டாய ஆள் சேர்ப்புக்காகவும் போர்ப்பணி என்ற பெயரிலும் ஏராளமானவர்களைப் பிடித்துச் சென்றனர். தவிர போர் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருந்ததால் இவர்கள் ஒவ்வொரு இடமாக இடம்பெயர்ந்துகொண்டேயிருந்தனர். இவர்கள் போகும் ஒவ்வொரு ஊரைத் தேடியும் படையினர் விரட்டத் தொடங்கினர். புலிகளின் இறுதி வீழ்ச்சி நடந்த இடமான புதுமாத்தளன்-முள்ளி வாய்க்கால் பகுதிவரையில் ஏறக்குறைய 20 தடவைவரை மன்னார் மக்கள் இடம் பெயர்ந்திருக்கின்றனர். இறுதிக் காலத்தில் ஒரு இடத்தில் ஐந்து நாட்கள் மூன்று நாட்கள் என்ற அளவிலேயே இருக்கக்கூடிய நிலை உருவானது. அந்த அளவுக்குப் படைத்தரப்பின் தாக்குதலும் படை நகர்வும் வேகமாக இருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக