செவ்வாய், 14 ஜூலை, 2020

அதிமுகவில் எதிரொலிக்கும் திமுக - ஐபேக் சர்வே முடிவுகள்!

டிஜிட்டல் திண்ணை: அதிமுகவில் எதிரொலிக்கும் திமுக - ஐபேக் சர்வே முடிவுகள்!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளராகச் செயல்படும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீம் சமீபத்தில் எடுத்த சர்வே பற்றியும் அதன் முடிவுகளை திமுக தலைமையிடம் அளித்தது பற்றியும் மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில், ‘ஐபேக் சர்வே முடிவுகள்: ஸ்டாலின் ஷாக்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படி தற்போதைய நிலையில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் 180 இடங்கள் வரை திமுக கைப்பற்றும் என்று பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீம் சர்வே முடிவுகளை திமுக தலைவர் ஸ்டாலினிடம் அளித்துள்ளது என்றும், இதனால் ஸ்டாலின் இன்ப அதிர்ச்சியில் இருக்கிறார் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்த நிலையில் இந்த சர்வே முடிவுகள் அதிமுகவிலும் எதிரொலித்துள்ளது. ஜெயா தொலைக்காட்சியில் பத்திரிகையாளராக சேர்ந்து, பின்னர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ரபி பெர்னார்ட் ஜெயலலிதாவாலேயே மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்பட்டார். அப்போதே அந்த காலகட்டத்துக்கு ஏற்ற அளவில் அதிமுகவுக்கு உத்தி வகுப்பாளராக இருந்து ஜெயலலிதாவுக்கு பல இன்புட்ஸ்களை ரபி பெர்னார்ட் அளித்திருக்கிறார். சேலம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் எடப்பாடி பழனிசாமிக்கும் நெருக்கமாகவே இருக்கிறார் ரபி. இந்த நிலையில் தனது டெல்லி தொடர்புகள் மூலம் பிரசாந்த் கிஷோருடனும் நெருங்கிப் பழகிய ரபி பெர்னார்ட் ஒரு கட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்டபோது எடப்பாடியையும் பிரசாந்த் கிஷோரையும் சந்திக்க வைத்தார். வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்காக பிகேவை ஒப்பந்தம் செய்வது என்றும், எடப்பாடியின் இமேஜ் பில்டப் திட்டங்களை விரைவுபடுத்துவது என்றும் அப்போது ஆரம்பக் கட்ட பேச்சுகள் நடந்தன. ஆனால் அதன்பின் பிரசாந்த் கிஷோருக்கும் அதிமுகவுக்கும் இடையே இடைவெளி விழுந்தது. அந்தப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லை என்றபோதும், ரபி பெர்னார்டுக்கும் பிகேவுக்குமான நட்பு தொடர்ந்தது.
இந்த நிலையில்தான் சில தினங்களுக்கு முன் முதல்வர் எடப்பாடிக்கு ரபி பெர்னார்ட் ஒரு முக்கியமான தகவலை அனுப்பியிருக்கிறார். ‘பிகேவிடம் இருந்து எனக்குக் கிடைத்த தகவலின்படி திமுகவுக்கு வரும் தேர்தலில் 150 சீட்டுகள் கிடைக்கும் என்று சொல்கிறார். மீதி இடங்கள் நமக்குத்தான் (அதிமுக) கிடைக்கும் என்றும் தகவல் கொடுத்திருக்கிறார்’ என்று ஐபேக்கை மேற்கோள் காட்டி எடப்பாடியிடம் கூறியிருக்கிறார் ரபி பெர்னார்ட்.
இதை அடிப்படையாக வைத்து, ‘ஆட்சிக்கு எதிர்ப்பு இருப்பதாகப் பரவலாகச் சொல்லப்படும் இன்றைய சூழலிலேயே அதிமுகவுக்கு 80க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்குமென எதிர்க்கட்சிக்காக சர்வே நடத்துபவர்களிடம் இருந்தே தகவல் வருகிறது என்றால்... தேர்தல் நெருங்க நெருங்க அதிமுகவின் வேகத்தை அதிகப்படுத்தினால், பணப் பாய்ச்சலைப் பலப்படுத்தினால் இந்தத் தேர்தல் முடிவுகளை அதிமுகவுக்கு இன்னும் சாதகமாக மாற்ற முடியாதா என்ன?’ என்ற ஆலோசனை எடப்பாடி தரப்பில் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.
இதேநேரம் முதல்வர் வட்டாரத்தில் இன்னொரு விவாதமும் நடந்திருக்கிறது. ‘திமுகவுக்காக ஐபேக் நடத்திய சர்வே முடிவுகள் பற்றிய தகவல் ரபி பெர்னார்டுக்குக் கிடைத்திருக்கிறது என்றால், நம் கட்சியில் நாம் பேசிக்கொள்ளும் ரகசியங்களும், கொள்கை முடிவுகளும் ரபி பெர்னார்ட் வழியாக பிகே மூலம் ஸ்டாலினுக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறதா இல்லையா?’ என்று விசாரணை செய்யச் சொல்லியிருக்கிறார் , விசாரணை முடிவில் அதிமுகவில் இருந்தும் சில தகவல்கள் ஸ்டாலினுக்கு செல்கின்றன என்று முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து முதல்வருக்கு ரபி பெர்னார்ட் மீதே சந்தேக நிழல்கள் படிந்திருக்கின்றன
இது ஒருபக்கம் என்றால் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்துக்கும் ஒரு ரிப்போர்ட் கிடைத்துள்ளது. அவரது நண்பர்களான அரவிந்த் கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி ஆகிய இருவரும் பிகேவுக்கும் நெருக்கமானவர்கள்தான். இப்போது மம்தாவுக்கும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் பிகே. கேஜ்ரிவால், மம்தா மூலமாக தமிழகத்தில் பிகே நடத்திய சர்வே பற்றிய விவரங்கள் சிதம்பரத்துக்குக் கிடைத்திருக்கிறது. அவர் இதன் அடிப்படையில் சோனியாவிடமும் ராகுலிடமும், ‘திமுகவுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் 150 இடங்கள் கிடைக்கும் என பிரசாந்த் கிஷோர் சொல்லியிருக்கிறார். அதனால் வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில்தான் நாம் தொடர வேண்டும். வேறு எந்த அரசியல் சலசலப்புக்கும் நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது’ என்று சொல்லியிருக்கிறார். இவ்வாறு தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பிகே நடத்திய ஆய்வு முடிவுகள் திமுகவுக்குள் மட்டுமல்ல... அதிமுகவிலும் எதிரொலித்திருக்கிறது.
ஐபேக் சர்வேப்படி திமுக வரும் தேர்தலில் 180 இடங்களைப் பிடிக்குமா அல்லது அதிமுக, காங்கிரஸுக்கு வந்த தகவல்படி 150 இடங்களைப் பிடிக்குமா என்பதே இப்போது மாநில அளவிலும் தேசிய அளவிலும் விவாதமாகியிருக்கிறது” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக