வெள்ளி, 3 ஜூலை, 2020

சிவகளை .. காதல் திருமணம் செய்த வாலிபரின் தாய்-உறவினர் வெட்டிக்கொலை .. தூத்துக்குடி


மாலைமலர் : திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளை பரும்பு பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன், விவசாயி. இவருடைய மனைவி முத்துபேச்சி (வயது 42). இவர்களுக்கு ஆத்திமுத்து, விக்னேஷ் ராஜா (21) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். விக்னேஷ் ராஜா கடந்த 10 நாட்களுக்கு முன்பு பக்கத்து ஊரான பொட்டல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நேற்று இரவில் விக்னேஷ் ராஜா தன்னுடைய உறவினரான அருணுடன் (21) சிவகளை பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென்று விக்னேஷ் ராஜா, அருண் ஆகிய 2 பேரையும் சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.அப்போது அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடிய விக்னேஷ்ராஜா தனது வீட்டுக்கு ரத்தம் சொட்ட, சொட்ட ஓடி வந்தார். உடனே லட்சுமணன், முத்துபேச்சி ஆகிய 2 பேரும் தங்களுடைய மகன் விக்னேஷ்ராஜாவை காப்பாற்றி சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


இதற்கிடையே விக்னேஷ்ராஜா, அருண் ஆகிய 2 பேரையும் வெட்டிய கும்பல், விக்னேஷ்ராஜாவின் வீட்டுக்கும் ஓடி வந்தது. அப்போது அங்கு நின்ற லட்சுமணன், முத்துபேச்சி ஆகிய 2 பேரையும் அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. பின்னர் அந்த கும்பல் இருளில் தப்பி ஓடி விட்டது.

இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த முத்துபேச்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த அருணை ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியிலும், லட்சுமணனை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அருண் பரிதாபமாக உயிரிழந்தார். லட்சுமணன், விக்னேஷ்ராஜா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த இரட்டைக்கொலை குறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விக்னேஷ்ராஜா காதல் திருமணம் செய்ததால் ஏற்பட்ட தகராறில், அவருடைய தாயையும், உறவினரையும் மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக