ஞாயிறு, 26 ஜூலை, 2020

குறைவான வருவாய் ஈட்டித்தரும் 6,000 ரயில் நிறுத்தங்கள் நீக்கப்படுகிறது ..

தினகரன் : குறைவான வருவாய் ஈட்டித்தரும் 6,000 ரயில் நிறுத்தங்கள் இனி ரத்து என்ற இந்திய ரயில்வேயின் அறிவிப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 7 ஆயிரத்து 312 ரயில் நிலையங்கள், 68 ஆயிரத்து 155 கிலோ மீட்டர் தூர ரயில் பாதைகளுடன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளை இணைப்பது ரயில்வேதான். 
மக்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல, சரக்குகளை எடுத்துச் செல்ல என ரயில்களின் சேவை நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. பரந்து விரிந்த இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும், தொழில் வளத்திற்கும் முதுகெலும்பாக இருப்பது ரயில்கள்தான். இந்தியாவில் பயணிகள் ரயில் சேவை துவங்கி 167 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அப்போது முதல், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரயில் போக்குவரத்து என்பது சேவையாகவே நீடித்து வந்தது.

ஆனால், சேவை என்பதை மாற்றி எதையும் லாபம், நஷ்டம் என்ற வியாபார கணக்கோடு பார்க்கும் அதிகாரிகள், ஆட்சியாளர்களால் நிலைமை இப்போது மாறிப்போனது. உலகிலேயே குறைவான கட்டணம் வசூலிப்பதால் நஷ்டம் ஏற்படுகிறது என்று காரணம் கூறி கட்டண கொள்ளையில் இறங்கியது ரயில்வே நிர்வாகம். சாமானியர்கள் எளிதாக வெளியூர் சென்று தொழிலோ, வேலையோ செய்யப்போவதால் தனிநபரின் பொருளாதாரம் மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரமும் வளரும். ஆனால், எவன் எக்கேடு கெட்டால் என்ன, எனக்கு தேவை லாபம் என்ற நோக்கத்தில் சில அதிகாரிகள் செயல்பட, அவர்களை ஆட்சியாளரும் ஊக்குவிக்க, அடுத்தடுத்து எடுக்கப்படும் முடிவுகளால் ரயில்கள்
சாமானியனுக்கானது இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது.

ரயில் நிலையங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பு, தனியார் ரயில்கள் இனி ஓடும் என்று அடுத்தடுத்து தனியார்மய அறிவிப்புகளை அரசு வெளியிட்டபடி உள்ளது. இதன் அடுத்த கட்டம்தான் குறைவான வருவாய் உள்ள ரயில் நிலையங்களில் இனி ரயில்கள் நிற்காது என்ற அறிவிப்பு. ஒரு ரயில் நிலையத்தில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம்  50 பேர் ரயில்களில் இருந்து ஏறவோ, இறங்கவோ வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அது வருவாய் குறைந்த ரயில் நிறுத்தமாகவே கருதப்பட்டு, அங்கு இனிமேல் ரயில்கள் நிறுத்தப்படாது என்று ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் கூறியுள்ளார். இதற்காக மும்பை ஐஐடி அறிஞர்கள் குழுவை அழைத்து ஆய்வு நடத்தி புதிய ரயில்வே கால அட்டவணையை தயாரித்துள்ளார்களாம்.

இதில் பெரும்பாலும் பாதிக்கப்படப்போவது ஊரகப்பகுதிகளில்  உள்ள சிறிய ரயில் நிலையங்கள்தான். அந்த ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காவிட்டால், அப்பகுதியின் பொருளாதாரமே பாதிப்புக்குள்ளாகும். அப்பகுதி ஏழை, எளிய மக்கள் வெளியூர் சென்று தொழில் புரிவதும் குறைந்துபோகும். இதையெல்லாம் ஐஐடி அறிஞர்கள் ஆய்வு செய்தார்களா என்பது தெரியவில்லை. எல்லாவற்றையும் வியாபாரமாக பார்ப்பதால்தான், விளைவுகள் என்ன என்பதை பற்றி கவலைப்படாமல் இதுபோன்ற முடிவுகளை
சர்வ சாதாரணமாக எடுத்து விடுகிறார்கள். லாப கணக்கை பார்க்காமல் மக்களுக்கு இது நல்லதா என்பதை மட்டும் பார்த்து முடிவு எடுப்பதே சிறந்தது என்பதை ரயில்வே நிர்வாகத்தின் கனிவான கவனத்துக்கு முன்வைக்கிறோம். தவறை உணர்ந்து தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வார்களா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக