திங்கள், 27 ஜூலை, 2020

5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை .. தொடக்கக் கல்வித்துறை ..

Thangam Thenarasu  : “மரமேறி விழுந்தவனைக் கடா ஏறி மிதிச்சதாம்!”
“ எங்களிடம் கேட்காமல் உயர்கல்வி படித்துவிட்டார்கள்”, என்று ஏறத்தாழ 5000 ஆசிரியர்கள் மீது தொடக்கக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாக வந்துள்ள செய்திகளைப் பார்க்கும் போது, எனக்கு மேலே இருக்கும் பழமொழிதான் நினைவுக்கு வருகின்றது.
ஆசிரியர்கள் கூடுதலாகக் கல்வி கற்றுவிட்டார்கள் என்று காரணம் சொல்லி, அவர்கள் மீதுக் கல்வித்துறையே நடவடிக்கை மேற்கொள்வதென்பது நகை முரணாகத் தோன்றினாலும், அனுமதி பெறவில்லையெனச் சில விதிகளைச் சுட்டிக்காட்டி, இந்த நெருக்கடியான சூழ்நிலையில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முனைவது கண்டிக்கத்தக்கதாகும்.
ஏற்கனவே இந்த அரசால், ஆசிரியர் சமுதாயம் பல வழிகளில் பழிவாங்கப்பட்டு, பலர் மீது குற்ற வழக்குகள் புனையப்பட்டு, மிகுந்த துயரத்துக்கு ஆளாகி இருக்கின்றது.

அவர்கள் மீதான நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என எவ்வளவோ வலியுறுத்தியும் ஏற்றுக்கொள்ளாமல் இன்றுவரை தமிழக அரசு பாராமுகமாகப் பிடிவாதப் போக்குடன் நடந்து கொள்கிறது.
இப்போது “ கொரொனா” நோய்த்தொற்றால் கடந்த நான்கு மாதங்களாக நாடே அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில், ஏதோ ஒரு சப்பைக் காரணத்தைக் காட்டி ஐயாயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது கொஞ்சமும் மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல; ஈர நெஞ்சம் படைத்த எவராலும் எப்போதும் ஏற்க முடியாத செயலும் கூட!
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உடனே தலையிட்டு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ஏற்கனவே அவதிக்கு ஆளாகி இருக்கும் ஆசிரியர்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கிடும் தொடக்கக் கல்வித்துறையின் இந்த ஆணையைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
கல்வித்துறை, ஒருபோதும் கருணையற்ற துறையாக மாறிவிடக்கூடாது!
“வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்”
நினைவிற் கொள்க!
செய்தி: தினகரன் / தந்தி டிவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக