புதன், 8 ஜூலை, 2020

கொரோனாவுக்கு மத்தியில் ரூ.12ஆயிரம் கோடி டெண்டர்...

கொரோனாவுக்கு மத்தியில் ரூ.12ஆயிரம் கோடி டெண்டர்!மின்னம்பலம : தமிழகத்தில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை பணிகளுக்கான ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான டெண்டர்கள் மூலம் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள அறப்போர் இயக்கம், டெண்டரை ரத்து செய்யவும் வலியுறுத்தியுள்ளது.
அறப்போர் இயக்கம் புகார்
தமிழக நெடுஞ்சாலைத் துறை கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை 2020 வரை 12000 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் கோரி சாலைப் பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் அவசர அவசரமாக டெண்டர்கள் கோரியுள்ளது குறித்து கேள்வி எழுப்பியுள்ள அறப்போர் இயக்கம், இதில் பெரும்பாலானவை தேவை இல்லாத டெண்டர்கள் என்று குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து நிதித்துறை செயலருக்கும், மாநில நெடுஞ்சாலை செயலருக்கும் அறப்போர் இயக்கம் புகார் அனுப்பியுள்ளது.
எதற்கு முன்னுரிமை
அதில், “தமிழக அரசின் வரி வருவாய் குறையும் சூழ்நிலையிலும், கொரோனா தாக்கத்தினாலும், செலவினங்களில் முன்னுரிமை எதற்குத் தரப்பட வேண்டும் என்ற ரங்கராஜன் குழு பரிந்துரைகள் வருவதற்கு முன்பே அவசரமாக நெடுஞ்சாலைத் துறையில் 12,000 கோடி ரூபாயில் டெண்டர்கள் முடிவு செய்வது கண்டிக்கத்தக்கது.

நல்ல நிலையில் இருக்கும் சாலைகளுக்கு டெண்டர்
கடந்த செப்டம்பர் மாதம் ஒதுக்கப்பட்ட ரூ.4,500 கோடிக்கான ஒட்டுமொத்த சாலை வளர்ச்சி திட்டமே இன்னும் பெரும்பாலும் செயல்படுத்தாத சூழ்நிலையில், இந்த திட்டத்தில் மட்டும் இந்த ஆண்டு ரூ.5,500 கோடி டெண்டர்கள் அவசரமாக கொரோனாவிற்கு நடுவே மே மாதமே வெளியிட்டுள்ளார்கள். மேலும் தஞ்சாவூரில் நல்ல நிலையில் உள்ள சாலைகளைப் பராமரிக்க ரூ 1,947 கோடி செலவில் டெண்டர் கோரியுள்ளனர்.
பிப்ரவரி 2020ல் கொளத்தூர் செந்தில் நகர் ஜவஹர்லால் நேரு சாலை சர்வீஸ் ரோடு போடப்பட்டது. போடும் முன்பே அது நல்ல நிலையிலிருந்தது.
கடந்த மாதம் நாகப்பட்டினம் திருமுல்லைவாசலில் சீர்காழி- திருமுல்லைவாசல் சாலை போடப்பட்டது. இதுவும் நல்ல நிலையிலிருந்த சாலை. மில்லிங் – அதாவது இருக்கும் சாலையை எடுக்காமல் அப்படியே மேலே போடப்பட்டு வருகிறது என்று அறப்போர் இயக்கம் புகாரில் தெரிவித்துள்ளது. அதோடு நல்ல நிலையில் இருக்கும் சாலைகள் குறித்த புகைப்படங்களையும் அனுப்பியுள்ளது.
மக்கள் வரிப் பணத்தில் ஊழலுக்கு வழிவகை
மேலும், "தஞ்சாவூர் 5 வருட டெண்டரில் 1 கி.மீ க்கு 2.33 கோடி மதிப்பு போடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு 3 மாதங்களுக்கு முன் போட்ட சிவகங்கை 5 வருட டெண்டரில் 1 கி.மீ க்கு 1.28 கோடி வழங்கப்பட்டது. எனவே போடத் தேவை இல்லாத நல்ல சாலைகளுக்கு 1 கி.மீ க்கு 2.33 கோடி என்பது மக்கள் வரிப் பணத்தை வீண் செய்து ஊழல் செய்வதற்கான வழிவகையை ஏற்படுத்தும் செயல்” என்றும் அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
சென்னை வந்ததால் பொறியாளர்களுக்கு கொரோனா
தொடர்ந்து அந்த புகாரில், “நெடுஞ்சாலை டெண்டர்கள் மதிப்பு முடிவு செய்வதற்காகப் பல மண்டலங்களிலிருந்து பொறியாளர்கள் சென்னை வரவழைக்கப்பட்டார்கள். இதனால் சென்னை மட்டுமின்றி மற்ற மண்டல பொறியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. பொறியாளர்கள் சென்னை வந்து சென்றவுடன் மதுரை மண்டலத்தில் மட்டும் கடந்த மாதம் கிட்டத்தட்ட 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது

பெரிய பேக்கேஜ் டெண்டர்களாகவும், பொறியாளர் கையொப்பமிட்ட Plant/ Equipment சான்றிதழ் தேவை, பொறியாளரிடம் டெண்டர் ஆவணங்கள் தரப்பட வேண்டும் என இ டெண்டரில் நேரடி சந்திப்பு ஏற்படுத்தும் வேலைகளும் செய்து டெண்டர்களில் பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள் பங்கு பெறாத வகையிலும் ஊழலை எளிதில் அரங்கேற்றும் வகையிலும் விதிகள் அமைக்கப்பட்டுள்ளது. டிவிசனல் குவாலிட்டி பொறியாளர்கள் எப்படி 1000 டெண்டர்களில் பங்கு எடுப்பவர்கள்? பிளான்ட்களை கொரோனா நடுவே எப்படி பார்வையிட முடியும் ? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
மூன்று கோரிக்கைகள்
மேலும், ”கடந்த 5 ஆண்டுகளில் தரப்பட்ட 5 வருட Performance based maintenance contract டெண்டர்கள் பெரும்பாலும் நாகராஜன் செய்யாதுரை என்பவரது நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. அவர் இடத்திலிருந்து வருமான வரித்துறை 170 கோடி கணக்கில் வராத பணம் எடுத்தது நெடுஞ்சாலை துறையில் உள்ள ஊழல்களைத் தெளிவாகக் காட்டியது. மேலும் இவர் நெடுஞ்சாலை துறை அமைச்சரான நம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சம்பந்தியின் பிசினஸ் பார்ட்னர்” என்று தனது புகாரில் குறிப்பிட்டுள்ள அறப்போர் இயக்கம், இந்த கொரோனா நேரத்தில் அரசும் மக்களும் பணமின்றி தவிக்கும் வேளையிலும், மக்கள் வரிப்பணத்தை இப்படி வீண் செய்வதும், ஊழலுக்கு வழிவகை செய்வதும் மன்னிக்க முடியாதது. எனவே, ரூ 12,000 கோடி டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும். நிதிநிலை அறிக்கையை மறுபரிசீலனை செய்து செலவினங்களை மாற்றி அமைக்க வேண்டும் . மோசமான சாலைகளைக் கண்டறிந்து அந்த சாலைகளுக்கு மட்டும் டெண்டர் கோர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக