ஞாயிறு, 26 ஜூலை, 2020

நில அளவை வரைபடங்களுக்கான கட்டணம் 10 மடங்கு அதிகரிப்பு: அரசாணை வெளியீடு

நில அளவை வரைபடங்களுக்கான கட்டணம் 10 மடங்கு அதிகரிப்பு: அரசாணை வெளியீடு தினந்தநதி :  சென்னை,& கிராமம், நகராட்சி, மாநகராட்சிக்கு உட்பட்ட நில அளவை வரைபடங்களுக்கான கட்டணத்தை 10 மடங்கு உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விற்பனை செய்யப்படும் புல அளவீட்டு புத்தக பிரதி, புல எல்லைகளை சுட்டிக்காட்டும் பக்க எல்லை, கோணமானியை பயன்படுத்தி பக்க எல்லை பராமரிப்பு, நில அளவரின் முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீடு, உட்பிரிவு, பாகப்பிரிவினைக்கு முன்னர் நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு, நில அளவை குறியீட்டின் தொகை, மாவட்ட வரைபடம், வட்ட வரைபடம், நகரம் பிளாக் வரைபடங்கள், கிராம வரைபடம் மற்றும் உட்பிரிவு கட்டணம் ஆகியவற்றுக்கான கட்டணம் உயர்த்தி நிர்ணயம் செய்து ஆணையிடப்பட்டன.

நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனரின் கருத்துருவினை அரசு கவனமுடன் ஆய்வு செய்தது. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படும் கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்கள் கட்டணம் மற்றும் உட்பிரிவு, புல எல்லை அமைத்தல், மேல்முறையீடு புலப்படநகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்கான கட்டணம் 2002-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டு சுமார் 18 ஆண்டுகளாக இந்த கட்டணம் நடைமுறையில் இருந்து வருகிறது. எனவே கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்கள் கட்டணம் மற்றும் உட்பிரிவு புல எல்லை அமைத்தல், மேல்முறையீடு புலப்படநகல் வழங்குதல் ஆகியவற்றுக்கான கட்டணங்களை உயர்த்தி அரசு ஆணையிடுகிறது.

அதன்படி, புல அளவீட்டு புத்தக பிரதி பக்கம் ஒன்றுக்கு ரூ.20-ல் இருந்து ஏ4 அளவுக்கு ரூ.50 ஆகவும், ஏ3 அளவுக்கு ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. புல எல்லைகளை சுட்டிக்காட்டும் பக்க எல்லைக்கான கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.200 ஆகவும், கோணமானியை பயன்படுத்தி பக்க எல்லைகளை சுட்டிக்காட்டுதலுக்கான கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.300 ஆகவும், பராமரிப்பு நிலஅளவரின் முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீட்டுக்கு ஒரு பக்க எல்லைக்கான கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.400 ஆகவும், உட்பிரிவு, பாகப்பிரிவினைக்கு முன்னர் நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தன் பேரில் புல எல்லைகளை நிர்ணயித்து சுட்டிக்காட்டுவதற்கான கட்டணம் புஞ்சை நிலத்துக்கு ரூ.30-ல் இருந்து ஆயிரம் ரூபாய் ஆகவும், நஞ்சை நிலத்துக்கு ரூ.50-ல் இருந்து ரூ.2 ஆயிரம் ஆகவும், மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீட்டுக்கான கட்டணம் புஞ்சை நிலத்துக்கு ரூ.30-ல் இருந்து ஆயிரம் ரூபாயாகவும், நஞ்சை நிலத்துக்கு ரூ.50-ல் இருந்து ரூ.2 ஆயிரம் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

நில அளவை குறியீட்டின் தொகை (நில அளவை முன்பணம்) 400 சதவீதத்தில் இருந்து 800 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வரைபடம் (வண்ணம்) ரூ.189-ல் இருந்து ரூ.500 ஆகவும், மாவட்ட வரைபடம் (எல்லைக்கோடு) ரூ.51-ல் இருந்து ரூ.300 ஆகவும், வட்ட வரைபடம் (வண்ணம்) ரூ.357-ல் இருந்து ஆயிரம் ரூபாயாகவும், வட்ட வரைபடம் (எல்லைக்கோடு) ரூ.51-ல் இருந்து ரூ.500 ஆகவும், நகரம் பிளாக் வரைபடங்கள் ரூ.27-ல் இருந்து ரூ.50 ஆகவும், கிராம வரைபடம் ரூ.85-ல் இருந்து ரூ.200 ஆகவும், உட்பிரிவு கட்டணம் கிராமப்புறத்துக்கு ரூ.40-ல் இருந்து ரூ.400 ஆகவும், நகராட்சிக்கு ரூ.50-ல் இருந்து ரூ.500 ஆகவும், மாநகராட்சிக்கு ரூ.60-ல் இருந்து ரூ.600 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அரசாணை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ள

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக