சனி, 6 ஜூன், 2020

Dr. புருனோவின் கிண்டில் வெற்றி ... அதிர்ச்சி ? ரவிஷங்கர் அய்யாக்கண்ணு

Ravishankar Ayyakkannu : Dr. புருனோவின் கிண்டில் வெற்றி அதிர்ச்சி
அளிக்கிறது!
நமக்குச் சில நண்பர்கள் இருப்பார்கள். அவர்கள் எப்போது நண்பர்கள் ஆனார்கள், எப்படி நம் வாழ்க்கையில் வந்தார்கள் என்பதே மறந்து போயிருக்கும். எனக்கு மருத்துவர் புருனோ அப்படிப் பட்ட ஒரு நண்பர்.
Gmailல் அவர் எனக்கு முதல் மின்மடல் எப்போது அனுப்பி இருக்கிறார் என்பதைத் தேடிப் பார்த்துத் தான் குத்துமதிப்பாக எப்போது இருந்து பழகத் தொடங்கினோம் என்று எண்ணிப் பார்க்கிறேன். அது பத்து ஆண்டுகளுக்கு முன்பு இழுத்துச் செல்கிறது.
2005-2006 காலக்கட்டத்தில் வலைப்பதிவில் எழுதினேன். அப்போது இருந்து அவரது அறிமுகம் உள்ளது. பிறகு, விக்கிப்பீடியாவில் ஒரு தன்னார்வலராகப் பங்களித்த போது இன்னும் நெருங்கிப் பழகினார்.

அவர் சென்னையில் மருத்துவக் கல்லூரியில் முதுகலைப் படிப்பு மாணவராக இருந்த போது அவரது விடுதி அறைக்குச் சென்றிருக்கிறேன். அப்பொழுதே அவர் மூன்று ஆப்பாயில்களை மொத்தமாக விழுங்கியது நினைவில் இருக்கிறது. வருங்காலத்தில் பேலியோ டாக்டர் ஆவார் என்பது எனக்கு அப்போது தெரியவில்லை
2010ஆம் ஆண்டு என் திருமணம் புதுக்கோட்டையில் உள்ள ஒரு மிகச் சிறிய ஊரில் நடந்தது. அது மட்டும் என் திருமணமாக இல்லாவிட்டால் நானே போயிருக்க மாட்டேன். எனக்குப் பெண் கொடுத்த மனைவி வீட்டார், இந்த ஊரில் போய் பெண் கொடுக்கலாமா என்று தாலி கட்டும் வரை யோசித்திருப்பார்கள். ஆனால், புருனோ என் திருமணத்திற்காகச் சென்னையில் இருந்து கிளம்பி வந்தார். உண்மையில், எனக்கும் அவருக்கும் அப்போது நெருங்கிய பழக்கம் கூட கிடையாது. நான் உண்மையிலேயே நல்ல நண்பராக அவரை மதிக்கத் தொடங்கியது அப்போது தான்.
நம்முடன் நிறைய பேர் நண்பர்கள் போல் பேசுவார்கள். ஆனால், நமக்கு ஒரு பிரச்சினை வரும் போது தான் காலம் நமக்கான நண்பர்களைக் காட்டிக் கொடுக்கும். அது போல், ஒரு முறை எனக்காக இறங்கி சண்டை போட்டவர் புருனோ. அன்று அவர் மட்டும் அந்தத் தார்மீக ஆதரவைத் தந்திருக்காவிட்டால் பல மாதங்களை நான் இழந்திருப்பேன். இது நடந்தது 2013ல்.
அதற்குப் பிறகு அவருடைய தனிப்பட்ட வாழ்வில் பல சோதனையான கட்டங்களைத் தாண்டியிருக்கிறார். அப்போது எல்லாம் ஒரு பேச்சுத் துணையாகவேனும் அவருடன் பயணித்திருக்கிறேன் என்பதில் எனக்கு மிகுந்த மன நிறைவு உண்டு.
என்னுடைய வேலையில், குடும்பத்தில், இணையச் செயற்பாடுகளில் ஏதேனும் பிரச்சினை என்றால் முதலில் ஆலோசனை கேட்பது புருனோவிடம் தான். அவர் எனக்கு மட்டும் இல்லை குறைந்தது ஒரு 100 பேருக்காவது ஒரு friend, philosopher, and guideஆக இருக்கக் கூடியவர் என்பது என் ஊகம்.
அவரைச் சந்தித்துப் பேச அவரது மருத்துவமனைக்குச் சென்றால், இரவு 11 மணி வரை Duty முடித்து விட்டு பிறகு நம்மைச் சாப்பிட அழைத்துச் செல்வார். சாப்பிட்டு முடித்த பிறகு நம் வீடு தாம்பரத்தில் இருந்தாலும் அலுத்துக் கொள்ளாமல் Drop செய்வார். மீண்டும் சென்னையில் நடுப்பகுதியில் இருக்கக் கூடிய அவர் வீட்டுக்குச் செல்வார்.
இப்படித் தான் ஒருமுறை அவருடன் சில நண்பர்கள் இணைந்து திருமண நிகழ்வுக்காக திண்டுக்கல் சென்றிருக்கிறார்கள். திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய நண்பருக்கு பஸ் கிடைக்கவில்லை. இவர் அவரை ஓசூர் வரை போய் drop செய்து விட்டு மீண்டும் சென்னைக்குத் திரும்பினார். சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஆனால், இது உண்மை
அத்தகைய புருனோ இந்த ஆண்டு கிண்டில் போட்டியில் முதல் பரிசு 5 இலட்சம் வென்றிருக்கிறார்.
மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துகள்!
எனக்கு அவர் பரிசு வென்றதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை. ஆனால், அவர் எப்படி இறுதிச் சுற்றுக்கு வந்தார் என்பதில் எல்லோரைப் போலவே எனக்கும் அதிர்ச்சி உண்டு
ஏன் என்று சொல்கிறேன்.
எல்லோருக்கும் சென்னும் ரவியும் உதவியது போல் தனக்கும் உதவினார்கள் என்று புருனோ மிக்க பெருந்தன்மையோடு கூறி இருந்தார்.
நான் செய்த உதவி இரண்டே இரண்டு தான்:
1. போட்டி தொடங்கிய நாள் முதல் முடியும் நாள் வரை "புக் எப்ப வரும் டாக்டர்ர்ர்ர்" என்று விடாமல் கேட்டு நச்சரித்தது.
2. இறுதிச் சுற்றுக்குச் செல்வது என்றால் குறைந்தது எத்தனைப் புத்தகங்கள் விற்க வேண்டி வரும் என்ற ஊகத்தைச் சொன்னது.
இந்த இரண்டையுமே போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெறக்கூடிய பலருக்கும் நான் கூறியிருந்தேன்.
மற்ற நண்பர்கள் மூன்று மாதம் போராடி விற்ற நூல்களின் எண்ணிக்கையை அவரால் கட்டாயம் 2 வாரங்களில் விற்க முடியாது என்றே எண்ணினேன். அதுவும் அவர் எழுதியது கதை இல்லை. அறிவியல்.
அவர் போட்டி தொடங்கிய நாளில் இருந்து புத்தகம் எழுதினார், திருத்தினார், எழுதினார், திருத்தினார்.... திருத்திக் கொண்டே இருந்தார் (சம்சாரம் அது மின்சாரம் விசு குரலில் படிக்கவும்).
அவர் புத்தகம் கொண்டு வருவார் என்ற நம்பிக்கையே போன, போட்டியின் கடைசி நாளில் கடைசி ஆட்டக்காரர் போல் களம் இறங்கினார்.
அதற்கு அடுத்து ஏறத்தாழ 16 நாட்களில் அவர் ஆடியது தான் ரணகள ஆட்டம்.
இத்தனைப் புத்தகங்கள் விற்றாக வேண்டும் என்பது கிரிக்கெட்டில் இத்தனை ரன் அடித்தால் வெல்லலாம் என்ற Run rate போன்றது. ஒவ்வொரு ஓவரும் அந்த இலக்கை அடைந்து ரன் ரேட் குறைந்து கொண்டே வந்தால் தான் வெல்ல முடியும்.
ஆனால், இவர் இறங்கியதோ கடைசி ஓவர். 6 பந்துகளும் Six அடித்தாக வேண்டிய நிலை. இறங்கி அடித்தார்.
கிட்டத்தட்ட 20,000 WHatsApp contactகளுக்கு செய்தி அனுப்பினார்.
மேலே திண்டுக்கல்லில் இருந்து ஓசுர் வரை போய் Drop செய்தாரே? அந்த நண்பரை அழைத்து என் புத்தகம் 49 ரூபாய் வாங்குங்கள் என்று சொன்னால் வாங்குவாரா மாட்டாரா?
இந்த 20,000 Contactகளும் எப்படிக் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
அவர் முதுகலை மருத்துவ மாணவராக இருந்த போதே அவரது தொலைப்பேசி எண்ணைப் பொதுவில் அறிவித்து இருப்பார். யார் மருத்துவ வழிகாட்டல் கோரி அழைத்தாலும் ஆலோசனை சொல்வார். ஆமாம், முற்றிலும் இலவசமாகத் தான். முதல் முறை அரசு மருத்துவமனைகளுக்குத் தயங்கித் தயங்கிச் செல்பவர்கள் புருனோ இருக்கிறார் என்ற நம்பிக்கையில் அங்கு செல்வார்கள். நானே என்னுடைய ஊரில் இருந்து என் மாமா, மச்சான் என்று இருவரை அழைத்து வந்து சென்னையில் உள்ள புதிய தலைமைச் செயலக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து உதவுமாறு கேட்டுக் கொண்டேன். கடைசி வரை அவர்களால் இவர் ஒரு மருத்துவர் என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஒரு மருத்துவர் இப்படி எளிமையானவராக, பழகுவதற்கு இனியவராக இருக்க முடியும் என்பதை அவர்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
இவர்களுக்கு எல்லாம் தகவல் அனுப்பி என் புத்தகம் வாங்குங்கள் என்று கேட்டால் வாங்குவார்களா மாட்டார்களா?
உண்மையில் அவர் மருத்துவ நண்பர் ஒருவர் சொன்னாராம்..
புருனோ இந்தப் புத்தகம் விற்கும் ஆர்வத்தில் 1% அவரது மருத்துவ careerஐ முன்னெடுத்துச் செல்வதில் காட்டியிருந்தால், அவர் எங்கேயே போயிருப்பார் என்றாராம்.
அது மிகவும் உண்மை தான்.
தன்னுடை மருத்துவப் பணிக்காலத்தில் பெரும்பான்மையான நேரத்தை அவரது பணி நேர எல்லைகளைத் தாண்டியும் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த உழைத்துள்ளார். அவர் அரசுப் பணியில் இருக்கிறார், பலர் கூட்டாகச் செய்த செயற்பாடுளில் புருனோவை மட்டும் பாராட்டுவது தர்மசங்கடமாகும் என்ற ஒரே காரணத்திற்காக பல நண்பர்கள் அவரை வெளிப்படையாகப் பாராட்ட முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டிருக்கிறோம்.
அவர் ஒரு மூளை அறுவை சிகிச்சை வல்லுநர்.
அவர் தன் கையில் கத்தி பிடித்து, அறுவை சிகிச்சை செய்து சில நூறு உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார் என்றால்
அவருடைய பேனா கொண்டு பல அரசு திட்டங்களைத் தீட்ட உறுதுணையாக இருந்து,
தமிழ்நாட்டில் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் போகாமல் காப்பாற்றி இருக்கிறார் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.
அவர் பரிசு வென்றதற்குக் கிடைத்த ஒரு பாராட்டு:
"புருனோ காலத்தை முந்திச் செயற்படுபவர். ரயில் தண்டவாளம் போடுவதற்கு முன்பே பெட்டி, படுக்கையோடு வந்து இரயில் நிலையத்தில் காத்திருப்பவர்".
அது முற்றிலும் உண்மை.
நமக்கு எல்லாம் நீட் கொடிது என்று 2017ஆம் ஆண்டு தான் தெரியும்.
அவர் 2010லேயே அதை எதிர்த்து பதிவு போட்டிருப்பார். அப்போதே நீட்டை எதிர்த்த இன்னொருவர் கலைஞர் மட்டும் தான்.
3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் திடீரென்று பேலியோ தொடர்பான பல இணையத்தளங்களைப் பதிந்தார். இவர் ஏன் இந்தப் பேலியோவுக்கு இத்தனைத் தளங்களைப் பதிகிறார் என்று நினைத்தேன். பார்த்தால், அடுத்த இரு ஆண்டுகளில் தமிழ்நாடு முழுக்க மிகப் பெரிய அளவில் பேலியோ பரவியது.
புருனோ ஒரு மிகச் சிறந்த trend spotter.
சென் பாலனின் பரங்கிமலை ரயில் நிலையம் பரிசு வென்ற போது,
அது கலைஞர் பராசக்தி படைத்ததற்கு இணையான மாற்றத்தைக் கொண்டு வரும் என்று கூறினார்.
அதே போல், அவரது வெற்றிக்குப் பிறகு கிண்டில் உலகில் ஒரு புதுப் பாய்ச்சல் நிகழ்ந்து வருகிறது.
மீண்டும் கிண்டில் போட்டிக்கு வருவோம்.
வெற்றி பெற இத்தனைப் புத்தகங்கள் விற்க வேண்டும் என்ற இலக்கை முடிவு செய்து கொண்டு,
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் இத்தனைப் புத்தகங்கள் விற்க வேண்டும் என்று விற்றார்.
அவற்றுக்கு Excel sheet போட்டு விற்பனையைக் கண்காணித்தார்.
விற்பனை குறைந்தால் வேறு புது வழியில் விற்பனையைப் பெருக்க முயல்வார்.
அந்த நாட்களில் அவர் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் கூட உறங்கவில்லை. மருத்துவமனையில் இருந்த நேரம் போக மற்ற நேரம் எல்லாம் புத்தகம் விற்றுக் கொண்டிருந்தார். அவர் என்ன புத்தகம் எழுதித்தானா இந்தப் பணத்தைப் பெற வேண்டும் என்று மற்ற ஏழைத் தமிழ்ப் புலவர்கள் கடுப்பானார்கள்.
பணம் தான் வேண்டும் என்றால் அவர் மருத்துவம் பார்த்தாலேயே இதை விட பல மடங்கு ஈட்டலாம்.
ஆனால், அவருக்கு வேண்டியது வெற்றி.
20 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத் துறை சார்ந்து எழுதி வருகிறார். அந்தத் துறையில் வெற்றி நாடினார். அவருடைய இந்த வெற்றி அடுத்து இதே போல் பல மருத்துவர்களை, துறை வல்லுநர்களைத் தமிழில் நூல் எழுத அழைத்து வரும் என்று உறுதியாக நம்பலாம்.
வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்கள் அதற்காகத் திட்டமிட வேண்டும். உழைக்க வேண்டும். அவரது வெற்றிக்காக உழைக்கும் பல நண்பர்களைச் சம்பாதித்து வைத்திருக்க வேண்டும்.
அப்படி உள்ளவர்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. புருனோவே சாட்சி!
வெற்றியைக் கொண்டாட உடனே பாராட்டு விழா எடுப்போமோ என்றோம். வேண்டாம், சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கிறது. இந்த வேளையில் நாம் கொண்டாடுவது முறையாக இருக்காது என்றார்.
அவர் தான் புருனோ!
வாழ்த்துகள், புருனோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக