திங்கள், 8 ஜூன், 2020

கோட்டையிலே கொரோனா ..தலைமை செயலகத்தில் . டாஸ்மார்க் .. கோயம்பேடு .. அள்ளிக்கோ அள்ளிக்கோ ..

கோட்டையை உலுக்கும் கொரோனாமின்னம்பலம் : தமிழக அரசாங்கத்தின் தலைமைச் செயலகம் கோட்டை வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இயங்கி வருகிறது. 11 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில்தான் தமிழக அரசின் பல்வேறு துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைந்துள்ள தொழில் துறைச் செயலாளர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 8) பரபரப்பாக கிருமி நாசினி தெளித்து மூடியிருக்கிறார்கள் என்ற தகவல் அரசு ஊழியர்கள் மத்தியில் பரவியது. ஓரிரு நாட்களுக்கு முன் தொழில்துறைச் செயலாளர் முருகானந்தம் தனது அலுவலகத்தில் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்தே இன்று தொழில் துறைச் செயலாளரின் அலுவலகத்தை மூடியிருக்கிறார்கள். அந்த அலுவலகத்தில் இருக்கும் தொழில் துறைச் செயலாளர் உள்ளிட்ட அனைவரும் சோதனைக்கு உட்படுத்தபட்டிருக்கிறார்கள்

இந்தத் தகவலை அடுத்து ஏற்கனவே கொரோனா பீதியால் இருக்கும் கோட்டை மேலும் பதற்றத்தில் இருக்கிறது. இதுகுறித்து கோட்டை வட்டாரத்தில் பேசினோம்.
“தலைமைச் செயலகத்தில் கடந்த மே 18 ஆம் தேதி முதல் 50 சதவிகித ஊழியர்கள் ஷிப்ட் முறையில் வந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே பொதுக்கணக்கு குழு ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த அலுவலகம் மூடப்பட்டது. அதன் பின் முதல்வரின் செயலாளர் அலுவலகத்தில் இரு ஊழியர்களுக்கு தொற்று என்று தகவல் தெரியவந்தது. தமிழ் வளர்ச்சித்துறை, செய்தித்துறை, பொதுப்பணித்துறை, நிதித்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் சுமார் முப்பது ஊழியர்களுக்கு தொற்று என்றும் தகவல்கள் வந்தன.
இந்நிலையில் தொழில் துறைச் செயலாளர் அலுவலகத்தில் அதிகாரிக்கு கொரோனா தொற்று என்ற தகவல் பேரதிர்ச்சியாக உள்ளது. ஏனெனில் தொழில் துறைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தலைமைச் செயலாளர் சண்முகமும் தொடர்ந்து பல கூட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள்.
நேற்று முன் தினம் ஜூன் 6 தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், முதலீட்டை ஈர்க்கவும் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ‘ஒளிரும் தமிழ்நாடு’ மாநாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 500 க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் காணொலியில் கலந்துகொண்டனர். முதல்வருடன் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தலைமைச் செயலாளர் சண்முகம், தொழில் துறைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட தொழில் துறை முதன்மை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இன்று தொழில் துறைச் செயலாளரின் அலுவலகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தொழில் துறையின் முக்கிய அதிகாரிகள் நேற்று முன் தினம் முதல்வருடன் ஒளிரும் தமிழ்நாடு நிகழ்வில் கலந்துகொண்டதால் கோட்டை முழுதும் இப்போது பதற்றமாகியிருக்கிறது” என்கிறார்கள்.
கொரோனா கோட்டையை உலுக்கிக் கொண்டிருக்கிறது.
-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக