வெள்ளி, 26 ஜூன், 2020

ஒற்றைத் தலைமை- சுற்றுப் பயணம்: எடப்பாடி ரெடி

ஒற்றைத் தலைமை- சுற்றுப் பயணம்:  எடப்பாடி ரெடிமின்னம்பலம் : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்புப் பணிகளை ஒருபக்கம் முடுக்கி விட்டிருந்தாலும், அதிலேயே முழு கவனத்தையும் செலுத்தாமல் மற்ற பணிகள் மீதும் கவனத்தைத் திருப்பியிருக்கிறார். நேற்று (ஜூன் 25) கோவை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வுக் கூட்டங்கள், மக்கள் சந்திப்புகள் என்று களமிறங்கிவிட்டார்.
சேலத்தில் இருந்து நேற்று கோவை சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொழிற்சாலைகள் நிறைந்த கோயம்புத்தூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே கோயம்புத்தூர் மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடத்தினார். அடுத்து மகளிர் சுய உதவிக்குழுவினரையும் சந்தித்த முதல்வர், மகளிரின் கிராமப் பொருளாதாரம் பற்றியும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டார்.
மேலும், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், குடிமராமத்து திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் தூர்வாரப்பட்ட ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகள் குறித்து விவாதித்த முதல்வர், அதுகுறித்த கையேடு ஒன்றை வெளியிட அதை உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி பெற்றுக் கொண்டார்.
அதிகாரிகள், விவசாயிகள், மகளிர் என்று அரங்கத்திலேயே கூட்டம் நடத்திக் கொண்டிருந்த எடப்பாடி அமைச்சர் வேலுமணி மற்றும் அதிகாரிகளுடன் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் சென்று பேருந்துகளில் ஏறினார். பேருந்தில் அமர்ந்திருந்த மக்களிடம் நலம் விசாரித்துவிட்டு கொரோனா காலத்தில் மேற்கொள்ள வேண்டிய சமூக கட்டுப்பாடுகளைப் பற்றி விளக்கினார். பேருந்து நிலையத்தில் அமைந்திருந்த கடைகளையும் பார்வையிட்டு வியாபாரிகளிடம் பேசி, மாஸ்க் விலை தரம் பற்றியும் விசாரித்தார். தமிழக முதல்வரின் மக்களோடு மக்களாய் என்ற இந்த பயணம் நேற்று கோவை வாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கோவை மாவட்டத்தோடு நில்லாமல் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் திருவாச்சியில் நடைபெற்று வரும், மூன்று மாவட்ட மக்களின் 60 ஆண்டுகால கனவாகிய அத்திக்கடவு - அவினாசி திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டார். வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் இந்தத் திட்டம் முழு செயல்பாட்டுக்கு வரவேண்டியதன் அவசியத்தை அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார்.
கோவை ஆய்வுக்குப் பின் உற்சாகம் அடைந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியோடு ஆலோசனை நடத்தினார். இன்று (ஜூன் 26) திருச்சி மாவட்டத்துக்கு சுற்றுப் பயணம் என்று ஏற்கனவே திட்டமிட்டப்பட்டிருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் ட்விட்டரில் நேற்று இரவு 9 மணிக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.
“தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று, அரசால் அறிவிக்கப்பட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் எந்தளவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும் விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் எண்ணங்களை கேட்டறிந்தும் கொரோனா தொற்று எந்தளவு தடுக்கப்பட்டுள்ளது எனவும் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன்” என்பதுதான் அந்த அறிவிப்பு,
மேலும், " தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்-எடப்பாடி என்ற இரட்டைட் தலைமை இருக்கும் நிலையில்... எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக மீண்டும் முன்மொழிய அதிமுகவில் ஒரு டீம் திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. விவசாயி, சாமானியர்களின் முதல்வர், எளிய மனிதர் என்ற இமேஜை எடப்பாடிக்கு நிலை நாட்ட இந்த மாநில சுற்றுப் பயணம் அவருக்கு கைகொடுக்கும் .ஆக ஒற்றைத் தலைமை என்ற டெஸ்டினேஷனை நோக்கியே இந்த சுற்றுப் பயணத்தைத் தொடங்கியிருகிறார் எடப்பாடி என்கிறார்கள்" அதிமுகவிலேயே ஒரு தரப்பினர்..
சசிகலா ஆகஸ்டு 14 ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்ற ஆசீர்வாதம் ஆச்சாரியின் ட்விட் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட கொஞ்ச நேரத்தில் முதல்வரின் உத்தரவின் பேரில் அவரது ட்விட்டரில் தமிழகம் முழுதுமான சுற்றுப் பயணம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
-ஆரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக