வெள்ளி, 26 ஜூன், 2020

சாத்தான் குளம் .. நடந்தது என்ன ? போலீஸ் தாக்குதல் கொரோனா நோய் போன்றது: உயர் நீதிமன்றம்

திமுக எம்.பி கனிமொழி அதிரடியான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அவர் அளித்துள்ள புகாரில், சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது பென்னீக்ஸை கையாண்ட விதம் மனித உரிமை மீறல் ஆகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21க்கு புறம்பாக செயல்பட்டுள்ளனர். மேலும் மேற்கு வங்க மாநிலத்தின் டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களை போலீசார் சிறிதும் பின்பற்றவில்லை. இதேபோல் தமிழக அரசு பிறப்பித்துள்ள காவல்துறையினருக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் மீறியிருக்கின்றனர்..

மின்னம்பலம் :போலீஸ் தாக்குதல் கொரோனா நோய் போன்றது: உயர் நீதிமன்றம்!
காவல்துறையினரால் மக்கள் தாக்கப்படுவது கொரோனா போன்று மற்றொரு நோய் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இவ்விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. ஜூன் 24ஆம் தேதி இவ்வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது விசாரணை கைதிகள் மரணமடையும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் வலியுறுத்தினர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக தூத்துக்குடி எஸ்.பி. அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை மற்றும் இருவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, அதன் வீடியோ பதிவு ஆகியவற்றை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஜூன் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கு மீண்டும் இன்று (ஜூன் 26) விசாரணைக்கு வந்தபோது, தூத்துக்குடி எஸ்.பி நிலை அறிக்கை தாக்கல் செய்தார்.
அப்போது காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜரான எஸ்.பி, தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது ஓரளவுக்கு அமைதி திரும்பியுள்ளது. மாஜிஸ்திரேட்டுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் காவல் நிலைய தலைமைக் காவலர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
அரசு தரப்பில், பிரேதப் பரிசோதனை முடிந்து அறிக்கை தயாராக உள்ளதாகவும் ஊரடங்கு காரணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், கோவில்பட்டி கிளை சிறையின் பதிவேடுகள், மருத்துவ பதிவேடுகள் ஆகியவற்றைப் புகைப்படம் எடுத்து வைக்கவேண்டும். வழக்கு தொடர்பான அனைத்து சிசிடிவி பதிவுகளையும் சேகரித்து வைக்க வேண்டும் என்று கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் கோவில்பட்டி கிளைச் சிறையில் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள ராஜ்சிங் விவகாரம் குறித்து தூத்துக்குடி மாவட்ட நீதிபதி ஆய்வு செய்து தனியாக அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் விசாரணையின் போது காவல்துறையினரால் தாக்கப்படுவது கொரோனா போன்று மற்றொரு நோய்த் தொற்று. காவல் துறையினர் கூடுதல் மன அழுத்தத்தில் இருந்தால் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அப்போது அரசு சார்பில் தமிழக முதன்மை செயலாளர் ஆஜராகிக் கூறும்போது, சட்டத்துறைச் செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டு காவல்துறையினருக்கான வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.இதையடுத்து நீதிபதிகள் இவ்விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்திகள் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பரப்பப்படுகின்றன என்றும் ஒவ்வொருவரும் இதனைத் தவிர்க்க முயல வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
இவ்வழக்கில் உரிய நீதி வழங்கப்படும் என்றும் நீதிமன்றத்தை யாரும் குறைவாக மதிப்பிட வேண்டாம் என்றும் தெரிவித்து வழக்கை ஜூன் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். முன்னதாக ஜெயராஜூவின் மகள் பெர்சி, இவ்வழக்கில் ‘உரிய நீதி வழங்கப்படும்’ என்று நீதித்துறை மீது நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக