புதன், 10 ஜூன், 2020

சிவகுமாரை சீண்டி சீண்டி ஆதிக்க அசிங்கங்களை தூசிதட்டி, துவைத்து...துவசம் ..

சாவித்திரி கண்ணன் : இன்னும் என்னவெல்லாம் செய்வீர்களோ,செய்து பாருங்கள்!
ஆனால்,அந்த மனிதனை களங்கப்படுத்துவதாக நினைத்து கண்ணியப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்…! அவரை அவதூறு செய்யத் துணிந்த,மற்றும் தூண்டிவிட்ட ஆதிக்க சக்திகளின் கறைபடிந்த அசிங்கங்களை மக்கள் தற்போது தூசிதட்டி எடுத்து,துவைத்துப் போடுகிறார்கள்….!
ஆளாளுக்கு திருப்பதியிலும், இன்னும் பல கோயில்களிலும் தாங்கள் சந்திக்க நேர்ந்த அவலங்களையும்,பாகுபாடுகளையும் சொந்த அனுபவத்திலிருந்து பேசி கொந்தளிக்கின்றனர்….! அவர் என்ன இல்லாதையா சொல்லிவிட்டார்…? இன்னும் சொல்வதற்கு எவ்வளவோ இருக்கிறதே…!
யார் ஒருவரும் இயல்பாகக் கூட பேச முடியாதபடிக்கு எதற்கெடுத்தாலும், மிரட்டல்,வழக்கு, அவதூறுகள்.. என்பதாக சமூகத்தை சகிப்புத் தன்மையற்றதாகவும், மதவெறி,மற்றும் துவேச உளவியலுடன் வளர்த்தெடுக்க திட்டமிட்டு ஆதிக்க சக்திகள் இயங்கி கொண்டுள்ளனர்.
கோயில்களுக்கு மன அமைதி வேண்டி பக்தன் செல்கிறான்.அந்த வகையில் இந்த சமூகத்திற்கு கோயில் என்ற நிறுவனம் இன்றியமையாததாக உள்ளது! ஆனால்,அந்த கோயில்கள் என்பவை காலங்காலமாக பொருளாதார கேந்திரங்களாகவும், சமூக பாகுபாடுகளை நிலை நிறுத்திக் கொள்ளும் களமாகவும் இருப்பதை மக்கள் உணராமல் இல்லை.

காந்தியடிகளே தன் சுயசரிதையில் கோயில்களில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை எழுதியுள்ளார். 1902 ஆம் ஆண்டு காசி விஸ்வநாதர் கோயிலில் அதன் பூஜாரியான பண்டா, காந்தி தந்த ஒரு தம்பிடியை கேவலமாக கருதி தூக்கி எறிந்து நீ நரகத்திற்கு போவாய் என சபித்ததையும் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
1921 ஆம் ஆண்டு காந்தியடிகள் பூரி ஜெகன்நாதர் ஆலயத்திற்கு சென்றது குறித்து தமது நவஜீவன் பத்திரிகையில் எழுதியபோது, ‘’இந்தக் கோயிலில் உள்ள அர்ச்சகர்கள் பக்தர்களை அலற வைக்கிறார்கள், பாடாய்படுத்துகிறார்கள். ஜெகன்நாதர் எப்படி இந்த அக்கிரமங்களை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று எனக்குப் புரியவில்லை’’ என குறிப்பிட்டுள்ளார்.
ஆக,இது போல எண்ணற்ற பதிவுகள் உள்ளன.இது போன்ற குரல்களை உதாசீனப்படுத்தாமல்,ஆன்மீக தளங்கள் தங்கள் அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்வது தான் சிறப்பு.
நாடே கொரானாவால் அதகளப்பட்டுக் கொண்டுள்ளது. ஆனால்,திருப்பதி தேவஸ்தானம் என்ன சொன்னது? இரண்டரை மாதங்களாக கோயில் மூடப்பட்டதில் பெரிய அளவுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக புலம்புகிறது. இதனால்,ஊழியர்களுக்கு அதனால் சம்பளமே கொடுக்க முடியவில்லையாம்…..! இது தான் இவர்களின் யோக்கியாதம்சம்!
சிவகுமார் மற்றும் அவர் குடும்பத்தின் மீது ஆதிக்க சக்திகளுக்கு ஏன் இந்த தீரா வன்மம்?
அவர் நாத்திகரல்ல! அரசியல் ஆதாயத்திற்கு பேசுபவருமல்ல! ஆனால்,மனதில் பட்ட உண்மைகளை மறைக்காமல் பேசுகிறார் அல்லவா? அது தான் பிரச்சினை!
அவர் மாகாபாரதம்,இராமாயணம் ஆகியவற்றைப் பேசினார்.அதில் மனிதம் தான் தூக்கலாக வெளிப்பட்டது. இவை பற்றி இது வரை நமக்கு ஆதிக்க சக்திகள் ஏற்படுத்தி வைத்திருந்த மதிப்பீடுகளை அவர் துணிந்து கேள்விக்குள்ளாக்கினார்…! பல மாயைகளை, மயக்கங்களை தவிடு பொடியாக்கினார். ஒரு மாற்றுப் பார்வையில், இவற்றிலிருந்து நாம் உள்வாங்க வேண்டிய வாழ்வியலை எடுத்துச் சொன்னார்! அவை மக்களிடம் மாபெரும் வரவேற்பையும் பெற்றுவிட்டது! பொறுத்துக் கொள்வார்களா அவர்கள்…?
இவற்றையெல்லாம் அவர் ஏதோ எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செய்யவில்லை.அவை தொடர்பான அனைத்து புத்தகங்களையும் ஆழ்ந்து வாசித்து பலதமிழ் அறிஞர்களுடன் மனம்விட்டு விவாதித்து,தனக்கென்று ஒரு மதிப்பீட்டை உருவாக்கிக் கொண்டார். அவருடைய மெனக்கிடல்களைக் கண்டு நான் பல நேரங்களில் பிரமித்திருக்கிறேன்.
மகாபாரதத்திற்கும்,இராமாயணத்திற்கும் தயாராகும் முன்பு எத்தனையோ முறை என்னை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். அன்றன்னைக்கு அவர் படித்து உள்வாங்கியதை, அனுபவித்ததை என்னைப் போன்றவர்களிடம் பகிர்வதில் அவருக்கு ஒரு அப்படி ஒரு சந்தோசம்,மன நிறைவு! எனக்கும் படிப்பதிலும், கேட்பது இன்பமன்றோ…!
தற்போது இளைய தலைமுறைக்கு திருக்குறளை கொண்டு செல்ல இரண்டாண்டுகளாக ஒரு தவயோகி போல தன்னை தயார்படுத்தி வருகிறார்.
மீண்டும் சொல்வேன் – அவர் பேசும் அறம் தான் இந்த ஆதிக்க சக்திகளுக்கு பிரச்சினையே..! மேலும் அதை பேசுவதற்கு அவர் முற்றிலும் தகுதியுடையவராகவும் இருக்கிறார் என்பது தான் அவர்களின் ஆத்திரத்திற்கு காரணமே! ஆனால்,அவர் பேசியது ஒரு துளி தான்! கண்ணியம் கருதியும்,சமூக நல்லிணக்கம் கருதியும் அவர் தவிர்த்த செய்திகளும்,சம்பவங்களும் அனேகம் என்பதை நான் அறிவேன்.
மதுவுக்கு எதிராக உறுதியாக குரல் கொடுக்கும் ஒரே சினிமா கலைஞன் அவர் தான். மதுப் போராளி சசிபெருமாள் ஐயா 33 நாட்கள் உண்ணாவிரதமிருந்த போது, நான் அழைத்தவுடன் நேரடியாக களத்திற்கு வந்து தன் ஆதரவை நல்கினார்.மேலும் அவர் காந்திய அமைப்புகளோடும்,ஆன்மீக அமைப்புகளோடும் நெருக்கமான தொடர்பில் உள்ளவர்!
சிவகுமார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் வேரூன்றி ஆழமரமென விழுதுகள் பரப்பி நிற்பவர். காந்தியையும்,காமராஜரையும் ஆத்மார்த்தமாக நேசிப்பவர். எம்.ஜி.ஆர்.சிவாஜி, கலைஞர், ஜெயலலிதா..ஆகிய தலைவர்களிடம் நன்மதிப்பை பெற்றவர்!
கண்ணதாசன்,ஜெயகாந்தன்,கி.ராஜநாரயணன்,கோவை ஞானி..உள்ளிட்ட ஏராளமான எழுத்தாளர்கள், மேதைகள் தொடங்கி என்னைப் போன்ற பத்திரிகையாளனின் எழுத்துகள் வரை வாசித்து நட்பு பாராட்டி வருபவர்! அவர் தனிமனிதரல்ல,தமிழ்ச் சமூகத்தின் தனிச் சிறப்பு வாய்ந்த கலைஞன்!
ஒரு சமூகம் தன்னை சுயமாக உணரத் தொடங்கினால் ஆதிக்க சக்திகளுக்குத் தான் எத்தனை பதட்டம்?அதற்கு சிறிய அளவில் துணைபோகக் கூடியவர் யாராயிருந்தாலும் அப்படிப்பட்டவர்களை அவர்கள் சும்மா விடுவதில்லை.
இதோ,இப்போதும் உத்திரபிரதேசத்தில் தலித் ஒருவர் மறுக்கப்பட்ட சிவன் கோயிலுக்குள் நுழைந்து வழிபட்டார் என்று கண்டம்துண்டமாக வெட்டி கொல்லப்பட்டுள்ளார். இன்னும் இது போன்ற பாகுபாடு தொடர்வதை தடுப்பது குறித்து சிந்திப்பது தான் ஆரோக்கியமாக இருக்குமே தவிர, சிவகுமார் மீது அதுவும் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னால் அவர் பேசியதை தற்போது எடுத்து வைத்து பாய்வதில் என்ன இருக்கிறது?
சாவித்திரி கண்ணன்
மூத்த பத்திரிகையாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக