புதன், 3 ஜூன், 2020

ஜெ. அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை: .... முழு விபரம்

மின்னம்பலம் :மாவட்டச் செயலாளர்கள் கூட்டங்களின்போதும், தனிப்பட்ட
முறையில் மாவட்டச் செயலாளர்களிடம் பேசும்போதும் திமுக தலைவர், ‘நிவாரண உதவிகள் வழங்கும்போது ரொம்ப கவனமா இருங்க. சமூக இடைவெளியோட நிகழ்ச்சிகளை நடத்துங்க. கிளவுஸ், மாஸ்க் எல்லாம் போட்டுக்கங்க’ என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்.
ஐபேக்கை எதிர்த்து அன்பழகன் பேசிய மே 16 ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட, ஜெ. அன்பழகனைப் பார்த்த ஸ்டாலின், ‘என்ன முகத்துல கொப்புளமா இருக்கு?’ என்று கேட்க. ‘வெப்பக் கட்டிண்ணே’ என்று பதில் சொல்லியிருக்கிறார் அன்பழகன். உடம்பைப் பாத்துக்கங்க என்று அப்போதும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அன்பழகனிடம் தனியாகப் பேசும்போதும், ‘ஏற்கனவே உங்களுக்கு ஆபரேஷன் நடந்திருக்கு. அதனால நீங்க ஊரடங்கு நேரத்துல பாத்து நடந்துக்கணும்’ என்றும் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். ஏற்கனவே சுமார் இருபது வருடங்களுக்கு முன் கல்லீரல் தொடர்பான அறுவை சிகிச்சையை அமெரிக்காவில் செய்துகொண்டார் அன்பழகன்.

இதை மனதில் வைத்துதான், பொது இடங்களில் கவனமாக இருக்கும்படி அவருக்கு அறிவுரை கூறியிருந்தார் ஸ்டாலின்.
ஸ்டாலினிடம் தலையாட்டிக் கொண்ட அன்பழகன் மாவட்டம் முழுதும் கொரோனா நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் தீவிரமாகவே இருந்திருக்கிறார். பகுதிச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், மாவட்ட அளவிலான அணி நிர்வாகிகளிடமெல்லாம் பேசி அந்தந்த பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்தார். இந்த நிலையில் ஜூன் 3 ஆம் தேதி கலைஞர் பிறந்தநாளை ஒட்டியும் சென்னை மேற்கு மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஒரே நாளில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேருக்கு ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கியதில் ஜெ. அன்பழகனுக்கு முக்கியப் பங்கிருக்கிறது.
இந்த நிலையில்தான் சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் கொரோனா தாக்கி அனுமதிக்கப்பட்டிருக்கிறார் திமுக மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. இதுகுறித்து இன்று பிற்பகல் வென்டிலேட்டரில் ஜெ. அன்பழகன் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். மேலும் விசாரித்ததில் கூடுதல் தகவல்களை இப்போது தருகிறோம்.

நேற்று (ஜூன் 2) காலை 11.30க்கு திமுக எம்பி ஜெகத்ரட்சகனைத் தொடர்புகொண்ட அன்பழகன், ‘அண்ணே உடம்பு சரியில்லை. உங்க ரேலா மருத்துவமனைக்குதான் போலாம்னு பார்க்குறேன்’ என்று கூறியுள்ளார். ஏனெனில் ஏற்கனவே அன்பழகனுக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை செய்தது டாக்டர் ரேலா. பல நாடுகளில் முக்கிய மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சையில் புகழ்பெற்றவர் டாக்டர் ரேலா. சில வருடங்களுக்கு முன் ரேலா பெயரிலேயே, குரோம்பேட்டையில் ரேலா இன்ஸ்டிடியூட் என்ற மருத்துவமனையைத் தொடங்கினார் ஜெகத்ரட்சகன். அதனால்தான் தனக்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்திருந்த டாக்டர் ரேலாவிடமே சிகிச்சை எடுத்தால் சரியாக இருக்கும் என்று ஜெகத்ரட்சகனிடம் பேசியிருக்கிறார் அன்பழகன். ஜெகத்ரட்சகனும் உடனடியாக இதுகுறித்து ரேலா மருத்துவமனைக்குப் பேசியுள்ளார்.
மேலும், இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடமும் போனில் தகவல் தெரிவித்துள்ளார் அன்பழகன். ஜூன் 3 ஆம் தேதி கலைஞரின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் இருக்கும் நிலையில், தான் மருத்துவமனைக்கு செல்லும் விவரத்தை ஸ்டாலினிடம் அன்பழகன் கூற, ‘நீங்க உடனே ஆஸ்பத்திரி போங்க. நான் ஜெகத்ரட்சகன்கிட்ட பேசுறேன்’ என்று சொன்ன ஸ்டாலின், அன்பழகனுக்கு சிகிச்சை அளிப்பது பற்றி அக்கறையோடு பேசியிருக்கிறார்
நேற்று பகலிலேயே ரேலா மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார் அன்பழகன். மூச்சுத் திணறல் இருந்ததால் கொரோனா டெஸ்ட் எடுத்திருக்கிறார்கள் மருத்துவர்கள். நேற்று மாலையே மூச்சுத் திணறல் அதிகமானதும் உடனடியாக வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் அன்பழகனுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையின் முடிவு நேற்று இரவு கிடைத்திருக்கிறது. அதில் கொரோனா பாசிட்டிவ் என்று வந்திருக்கிறது.
ஏற்கனவே கல்லீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர் என்பதாலும் 62 வயது ஆனவர் என்பதாலும் மற்ற சோதனையும் எடுத்துப் பார்த்திருக்கிறார்கள் மருத்துவர்கள். அதில் சிறுநீரகத்திலும் பிரச்சினை இருப்பது தெரியவந்திருக்கிறது. சிகிச்சைகள் தொடர்ந்துகொண்டிருந்த நிலையில் நேற்று இரவு கொஞ்சம் சீராகிக் கொண்டிருந்த உடல் நிலை, இன்று (ஜூன் 3) காலை மோசமடைய ஆரம்பித்துள்ளது.
“அறிகுறிகள் எதையும் பெரிதாக வெளிக்காட்டாமல் சீரியஸாகும் வரைக்கும் கொரோனா வைரஸ் மறைமுகமாகவே இருக்கிறது. இப்படித்தான் ஜெ. அன்பழகனுக்கும் ஏற்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா தொற்று தாக்கியும் கூட உடனடியாக பெரியளவில் எந்த அறிகுறியும் தென்பட்டிருக்கவில்லை. ஏற்கனவே கல்லீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர், இப்போது சிறுநீரகங்களும் பழுதாகியுள்ளன. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்கிறார்கள் மருத்துவமனை வட்டாரத்தில்.
ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் அவரது தம்பி, குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக