செவ்வாய், 9 ஜூன், 2020

தமிழக கொரோனா உயிரிழப்புகள் மர௦க்கப்படுகிரது?

மரணக் கணக்கு மறைக்கப்படுகிறதா? அறப்போரின் ஆவணப் புகார்!மின்னம்பலம் : தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளையும், ஒவ்வொரு நாளும் ஏற்படும் உயிரிழப்புகளையும் தினந்தோறும் ஒரு நாள் கூட விடாமல் பட்டியல் போட்டு வெளியிட்டு வருகிறது தமிழக அரசு. சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் ஆகியோரின் பத்திரிகையாளர் சந்திப்புகள் மூலமாகவோ அல்லது செய்திக் குறிப்புகள் மூலமாகவோ வெளியிடப்படுகின்றன.
இந்நிலையில், இந்த தினசரி புள்ளி விவரங்களில் இறப்புக் கணக்குகள் குறைத்துக் காட்டப்படுகின்றன என்று அறப்போர் இயக்கம் ஒரு வீடியோவை தனது ஃபேஸ்புக் தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், “கொரோனா தொற்று காரணமாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மே 28 ஆம் தேதி 50 வயதுடைய ஆண் ஒருவர் இறந்துவிட்டார். இதற்கான ஆவணத்தில் மரணத்துக்கான காரணம் என்ற இடத்தில் கொரோனா பாசிடிவ் என்று எழுதி மருத்துவமனையின் ஆர்.எம்.ஓ. கையெழுத்திட்டிருக்கிறார். ஆனால் ஜூன் 8 ஆம் தேதி வரையிலான அரசின் புள்ளிவிவரப் பட்டியலில் ஸ்டான்லி மருத்துவமனையில் இறந்த 50 வயது ஆண் பற்றிய விவரங்கள் இடம்பெறவில்லை.

இதேபோல ஸ்டான்லி மருத்துவமனையில் மே 31 ஆம் தேதி கொரோனாவால் 69 வயது ஆண் ஒருவர் இறந்துவிட்டார். இவரது மார்ச்சுவரி கார்டிலும் இறப்புக்குக் காரணம் கொரோனா பாசிடிவ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த இறப்பு விவரமும் அரசின் வெளியீட்டில் வரவில்லை. இவர்களின் இறப்பு விவரத்தை அரசு வெளியிடாதது ஏன் என்பதை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், துறைச் செயலாளர் பீலா ராஜேஷும் சொல்லுவார்களா? தமிழக அரசு கொரோனா இறப்பு விவரங்களை முழுமையாக வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த ஆவணங்கள் மூலம் அந்த சந்தேகம் வலுவாகிறது.
தமிழகத்தில் கொரோனா நோய்க்கு எதிராக தடுப்புப் பணிகளிலும் சிகிச்சைப் பணிகளிலும் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைத்துத் தரப்பினரையும் அறப்போர் இயக்கம் மதிக்கிறது. அவர்களின் பணியை போற்றுகிறோம். அதேநேரம் இந்த சந்தேகங்களுக்கு அரசு பதிலளிக்க வேண்டும்” என்று அந்த வீடியோவில் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள் அறப்போர் நிர்வாகிகள்.
அரசு பதில் தருமா? அல்லது அறப்போர் மீது வழக்கு வருமா?
-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக