புதன், 17 ஜூன், 2020

மருத்துவ கல்லூரிகளில் ஓபிசி இடஒதுக்கீடு - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

tamil.indianexpress.com : தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீடுக்கு வழங்கப்பட்ட இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிடக்கோரி வழக்கில் வரும் 22 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான இடங்களை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. இளங்கலை படிப்பில் ( எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ்.) 15% இடங்களும், முதுகலை படிப்பிற்கு ( எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்., மற்றும் டிப்ளமோ படிப்பு) 50% இடங்களையும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகிறது. இந்த இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மத்திய அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது.
இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் எஸ்.சி/எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் தவிர, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு முறையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாணவர் சேர்க்கை நடத்தப்படுவது கிடையாது. மற்ற அனைத்து இடங்களையும் பொதுப் பிரிவாக அறிவித்து, மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதனால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய சட்டப்பூர்வமான இடஒதுக்கீட்டு அடிப்படையிலான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்தது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இழைக்கப்பட்டு வந்த இந்த அநீதியை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு, திமுக, பாமக, மதிமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமானது, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வழக்கு தொடரப்படுகிறது.
அதில் திமுக, அதிமுக, மதிமுக, தி.க கட்சிகளின் சார்பில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவம், பல் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் பாமக சார்பில் தாக்கல் செய்த மனுவில், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய 27 % இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் 50 இடஒதுக்கீடு வழங்கும் வரை கலந்தாய்வு நடத்த கூடாது என தெரிவித்தார். திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மத்திய அரசு 50 சதவித இட ஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படவில்லை என மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது நீதிபதிகள் மத்திய அரசிடம் இது தொடர்பாக விளக்கம் பெற வேண்டும் என தெரிவித்தனர். இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள் அரசியல் கட்சிகள் சார்பில் தொடர்ந்த மனு குறித்து வரும் 22 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணை தள்ளிவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக