வியாழன், 25 ஜூன், 2020

கொலை வெறியர்களாக உருவெடுத்த தமிழக போலீஸ் . தூத்துக்குடி .. சாத்தான் குளம் ...

சாவித்திரி கண்ணன் : ''சார்,கையில பேப்பர் வச்சு இருக்கீங்க..இன்னைக்கு என்ன செய்தி வந்திருக்கு?''
காலையில் இளநீர் குடிக்கப் போன இடத்தில் பையன் கேட்டான்!
’’சாத்தான்குளங்கிற ஊர்ல மொபைல் கடையை கூடுதலான நேரம் திறந்து வச்சதுக்காக அப்பா,புள்ளை ரெண்டு பேரையும் போலீஸ் லாகப்புல வச்சு கொன்னுட்டாங்களாம்பா!’’
’’அய்யோ, கடையை மூடாம வச்சதுக்கா கொன்னுட்டாங்க…’’ அதிர்ச்சி தாங்காமல் கேட்டான் அந்த இளைஞன்!
’’டேய் பார்த்துடா..,போலீஸ் வந்து மூடுன்னா..,அடுத்த நிமிஷமே சரிங்க ஐயா ன்னுட்டு பவ்வியமா சட்டுபுட்டுனு எல்லாத்தையும் எடுத்துவச்சு குளோஸ் பண்ணிடு,கொலைகாரப் போலீசு பயலுவ…ஜாக்கிரதை’’ என்றார் பக்கத்தில் இளநீர் குடிக்க வந்த பெரியவரான அந்த வாடிக்கையாளர்!
’’ஆமாங்கய்யா! நான் எந்த பேச்சும் வச்சிக்க மாட்டேன்..ஏன்னா அவனுங்க சரியான காட்டானுங்க…அவங்க அதிகாரம் தான் அவங்களுக்கு முக்கியம்..அத்தொட்டு பணிவா போயிடுவேன்! அவங்க சாரயக் கடைக்குத் தான் பாதுகாப்பு கொடுப்பாங்க….ஆனா, எங்கள மாதிரி இளநீர் விக்கிறவங்களத் தான் டார்ச்சர் பண்ணுவாங்க…’’ என்று புலம்பித் தள்ளினான்!

இது போலீஸ் குறித்த மக்களின் மனநிலைக்கு ஒரு சான்று!
அதுவும் கொரானா காலத்துல அவங்க சகலத்தையும் கட்டுப்படுத்துபவர்களாக தங்களை நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க…! விட்டால்,அந்த சூரியன் கூட எந்த நேரம் மேலெழும்பி வரணும்,எந்த நேரம் கீழே இறங்கணும்னு கண்டிஷன் போடவும் தங்களுக்கு அதிகாரம் இருக்கிறதாக நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க! அது தான் விபரீதம்!
ஏப்ரல் மாதம் மதுரையில் ஒரு இறைச்சிகடை திறக்கப்பட்டதுன்னு சொல்லி ஒரு பெரியவரை கீழே தள்ளி சாகடித்தார் ஒரு போலீஸ்காரர்!
தமிழகம் முழுக்க பல சந்தைகளில் காய்கறி,பழ தள்ளு வண்டிகளை அப்படியே கீழே கவுத்தி அழித்த சம்பவங்கள் அனேகம்!
ஊரடங்கின் தொடக்கத்தில் காய்கறி ஏற்றிவரும் லாரிகளை,குட்டியானை வேன்களை தடுத்து, திருப்பிவிட்டதோடு டிரைவர்களையும் தாக்கினார்கள். விவசாயப்பணிகளுக்கு கூலிக்குச் சென்றவர்களை தடுத்து உதைத்து அனுப்பினார்கள்! அதனால், விவசாயிகள் கடும் இழப்புகளையும் மன உளைச்சல்களையும் சந்தித்தனர்.
அவ்வளவு ஏன்? பேப்பர் போடும் பையன்களை எவ்வளவு விரட்டி அடித்து துன்புறுத்தினார்கள்! ஊடகத் துறையின் கடும் எதிர்ப்பால் பின்பு அடங்கினார்கள்.
நள்ளிரவில் டியூட்டி முடித்துவிட்டு திரும்பிய டாக்டர் ஒருவர் அடிவாங்கினார்! அவர் தன்னை டாக்டர் என்று சொன்ன பின்பு,’’யோவ் இதை முதலில் சொல்ல வேண்டியது தானே’’ என்றார் அந்த போலீஸ்! ஆனால்,அவரை சொல்லக் கூட நேரம் தராமல் எடுத்த எடுப்பில் அடித்துவிட்டு, இப்படி எந்தக் குற்றவுணர்வும் இன்றி பேசினார்!
நடுவீதியில் அனைவரையும் தோப்புக்கரணம் போடவைப்பது, தண்டிப்பது..என அனைத்துவித மனித உரிமை மீறல்களையும் நடத்தினர்.
மிகச் சமீபத்தில் கூட ஒரு மின்வாரிய ஊழியர் ஒருவர் அடையாள அட்டை காண்பித்தும் கூட,அவரை பணிக்கு செல்லவிடாமல் தடுத்து நையப்புடைத்து விட்டனர்!
கொரானா எனும் நோய்தொற்றால் வேலை இழப்பு,வருமானம் இழப்பு, பசி,வறுமை,மன உளைச்சல் என பலவித துயரங்களுக்கு ஏற்கனவே ஆளாகியுள்ள மக்களை போதாக் குறைக்கு போலீசும் கொடுமைபடுத்தினால் மக்கள் என்ன தான் செய்வார்கள்?
சம்மந்தப்பட்ட சாத்தான்குளம் சம்பவத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன்!
கூடுதலான நேரம் கடைதிறந்திருந்தது என்ன பஞ்சமா பாதகமா? கொடுங்குற்றமா?
‘’அஞ்சு நிமிஷம் டைம் தர்றேன் கடையை மூடிவிடு’’ என முதலில் ஒரு வாய்ப்பளித்திருக்கலாம்! அதற்குள் கடையை மூடாவிட்டால் வழக்கு போட்டு அபராதம் விதிக்கலாம்!
ஏன் இதற்கு உயிர்பலி வாங்க வேண்டும்? தந்தை,மகன் இருவரையும் கொன்று குடும்பத்தையே நிர்கதியாக்கிவிட்டது கொடுமையிலும் கொடுமையல்லவா?
உங்களுக்கு தான் அபராதம் வசூலிப்பது அல்வா சாப்பிடுவது போலாச்சே..! இந்த கொரானா காலத்தில் 6,57,112 பேர் மீது வழக்குகள் போட்டு,5,26,426 வாகனங்களை பறிமுதல் செய்து, மக்களை வருத்தி சுமார் 15 கோடி ரூபாயை வசூலித்து இருக்கிறீர்களே! அதுவும் சில வாகனங்களை அபராதம் கட்டினாலும் முப்பது நாட்கள், நாற்பது நாட்கள் என பிடித்துவைத்து பலரது பிழைப்பையே சீரழித்தீர்களே…!
கொரானா என்பதாக ஒரு ஆழமான அச்சத்தை மக்கள் மனதில் விதைத்து, மக்கள் உயிரை காப்பாற்றத் தான் காவல்துறையும்,அரசின் மற்ற துறைகளும் கடும் நடவடிக்கை எடுக்கிறார்கள்…என்று உங்கள் அராஜகத்திற்கு எல்லாம் வியாக்கியானம் தந்து கொண்டிருந்தீர்கள்! ஆனால்,அது உயிரை பறிக்கவும், வாழ்க்கையை சிதைக்கவுமாக போய்க் கொண்டிருக்கிறது என்பது செல்வராஜ்,பினீக்ஸ் குடும்ப பேரிழப்பின் மூலம் நிருபணமாகிவிட்டது.
கொரானா தொற்று அபாயத்தையும் பொருட்படுத்தாமல், இந்த அநீதிக்கு நியாயம் கேட்டு பெருந்திரளாக வீதிக்கு வந்து இரவுபகலாக போராட்டம் நடத்திய தூத்துக்குடி மக்களின் மனித நேயத்திற்கும்,அறச் சீற்றத்திற்கும் தலை வணங்குகிறேன்!
இப்படிச் சில காவல்துறையினர் செய்யும் அராஜகத்தை தொடரவிடுவதால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் கெட்ட பெயர் வருகிறது. இந்த மாதிரி நேரங்களில் சம்மந்தப்பட்ட காவலர்களை காப்பாற்றுவதன் மூலம் காவல்துறை மீதான இமேஜை பாதுகாப்பதாக நினைக்கிறார்கள்! ஆனால் அத்துமீறியவர்கள் தண்டிக்கப்பட்டால் தான் இதற்கு விடிவு பிறக்கும்!
இனியாவது போலீசுக்கு ஒரு லகான் போட்டு நிதானப்படுத்த வேண்டும்! மனித நேயக்கல்வி வகுப்புகளை அவர்களுக்கு கட்டாயப்படுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக