வியாழன், 18 ஜூன், 2020

மிரட்டும் கொரோனா... விரட்டும் வி.ஐ.பி-க்கள்!

எடப்பாடி பழனிசாமிஸ்டாலின் விகடன் : ஆர்.பி. அ.சையது அபுதாஹிர் ந.பொன்குமரகுருபரன் : . மூலிகைக் குளியல்... அசத்தும் எடப்பாடி! - மகனுடன் உடற்பயிற்சி... உடலினை உறுதிசெய்யும் ஸ்டாலின்! - அறைக்குள் முடங்கிய ரஜினி, கமல்
தமிழகத்தின் தலைமைச் செயலகம் தொடங்கி அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வரை கொரோனாவுக்கு பேதம் இல்லை.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரிட்டன் சுகாதார அமைச்சர் மேட் ஹான்காக், இளவரசர் சார்லஸ், இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சர் யாக்கோவ் லிட்ஸ்மேன், கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி என வி.வி.ஐ.பி-க்களையும் விட்டுவைக்கவில்லை கொரோனா. தமிழகத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் உயிரையே பறித்திருக்கிறது கொரோனா. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வான பழனி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்.

‘சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்’, ‘மாஸ்க் போடுங்கள்’ என்றெல்லாம் பொது மக்களுக்குச் சொல்லும் இந்த வி.ஐ.பி-க்களில் பலரும் களத்தில் சுழலத் தவறுவதில்லை. அதேபோல, மிரட்டும் கொரோனவைத் தங்களை அண்டவிடாமல் தினம் தினம் விரட்டியடிப்பதில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான ஆயுதத்துடன் சுழலவும் தவறுவதில்லை.
இதோ... முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் தொடங்கி நடிகர்கள் வரை தமிழகத்தின் வி.ஐ.பி-க்களில் பலரும் ‘கொரோனா’வுக்கு எதிராக வகுக்கும் வியூகங்களும், ஏந்தும் ஆயுதங்களும்...

மூலிகை சூப்... மூலிகைக் குளியல் - அசத்தும் எடப்பாடி!

வெற்றிலைப் பெட்டிபோல முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசம் பனைவோலைப் பெட்டி ஒன்று இருக்கிறது. உள்ளே சுத்தமான பனைவெல்லம், பனங்கற்கண்டு இருக்கும். அவ்வப்போது ஒன்றிரண்டு எடுத்து வாயில் போட்டு மெல்வார் முதல்வர். அடிப்படையிலேயே ஆரோக்கியம் பேணும் மனிதர் எடப்பாடி. வழக்கமாக அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்பவர், கொரோனா காலத்தில் 15 நிமிடங்கள் கூடுதலாக நடைப்பயிற்சி செய்கிறார்.
சமூக இடைவெளியில் முதல்வர் படு கண்டிப்பு. சென்னையிலிருந்து சேலம் திரும்பியவர், தன் மகன் மிதுனைக்கூட அருகே நெருங்கவிடுவதில்லையாம். தினசரி இரு வேளை கபசுரக் குடிநீர் அருந்துகிறார். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்து இரண்டு கோர்ஸ் (15 நாள்களுக்கு ஒரு முறை தொடர்ந்து மூன்று நாள்கள்) முடித்துவிட்டார் என்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி
சென்னை அண்ணாநகரிலுள்ள சித்தா மருத்துவக் கல்லூரி அளித்திருக்கும் மெனு கார்டின்படி முதல்வருக்கு உணவு வழங்கப்படு கிறது. கற்பூரவல்லி தொடங்கி முடக்கத்தான் வரை மூலிகை சூப் மெனுவில் உண்டு. தவிர, இரண்டு வேளை இதமான சூட்டில் மூலிகைக் குளியல்.
சில நாள்களுக்கு முன்னர் முதல்வரின் அறையைச் சுத்தப்படுத்தும் பெண்மணிக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துவிட்டது. முதல்வர் அலுவலக வீடியோகிராபர் ஒருவருக்கும் கொரோனா பாசிட்டிவ். இருவரையும் சிகிச்சைக்கு அனுப்பிவிட்டார்கள். முதல்வர் அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்குமே 14 நாள்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்கின் றனர். முதல்வருக்கும் பரிசோதனை உண்டு.
சமீபத்தில் சேலத்தில் முதல்வரின் வீட்டில் அவரைச் சந்திக்கச் சென்றார் தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட கே.பி.ராமலிங்கம். வாசலிலேயே வேட்டியை மடித்துக்கட்டச் சொல்லி, மஞ்சள் கலந்த தண்ணீரில் முழங்கால், முழங்கை வரை கழுவிய பிறகு, கைகளிலும் கால்களிலும் சானிடைஸர் தெளித்தே அவரை உள்ளே அனுப்பியிருக்கிறார்கள். அறைக்குள் நுழைந்தவரை அறையின் மறுகோடியில் அமர்ந்து வரவேற்றிருக்கிறார் முதல்வர். சுமார் 15 அடி இடைவெளி. முகக்கவசம் அணிந்தே இருவரும் பேசியிருக்கிறார்கள்!
முதல்வருக்கு எப்போதுமே சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் இல்லை. அவ்வப்போது பல்வலி, அஜீரணப் பிரச்னைகள் மட்டும் வருவதுண்டு. தேனாம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனைக்குப் பல் சிகிச்சைக்குப் போவார். அஜீரணப் பிரச்னைக்கு கோவையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அப்போதிலிருந்து அந்தப் பிரச்னைகளும் அவருக்கு இல்லை.
ஸ்டாலின்
முதல்வரை கவனிக்க சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் பொது மருத்துவ இயக்குநர் டாக்டர் ஹரிஹரன் தலைமையிலான டீம் தயாராக இருக்கிறது. அரசு முறை சுற்றுப் பயணங்களில் இவர்களும் உடன் செல்கிறார்கள்.

மகனுடன் உடற்பயிற்சி... உடலினை உறுதிசெய்யும் ஸ்டாலின்!

ஊரடங்கு காலம் முழுவதும் ஆழ்வார்பேட்டை செனடாப் சாலை இல்லத்தில் இருந்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். ஆனால், ஜெ.அன்பழகன் மறைவு ஸ்டாலின் குடும்பத்தினரை அதிர்ச்சி யடைய வைத்துவிட்டது. ‘படிதாண்டக் கூடாது’ என்பது கிச்சன் கேபினெட்டின் கண்டிப்பான உத்தரவாம். தவிர்க்க முடியாத சிறு வேலைகளுக்கு வெளியே போகத் தயாரானால்கூட மகன் உதயநிதி குறுக்கே வந்துவிடுகிறாராம்.
தினகரன் - கனிமொழி
தினகரன் - கனிமொழி
வழக்கமாக தினமும் அதிகாலை 5:30 மணிக்கு எழும் ஸ்டாலின் 6 மணிக்கு அடையாறில் பிரபல ஹோட்டலுக்குச் சென்று ஃபில்டர் காபி அருந்துவார். அதன் பிறகு ஐ.ஐ.டி-யில் நடைப் பயிற்சி. இப்போது இந்த இரண்டுமே மிஸ்ஸிங். வீட்டில் என்னதான் காபியைச் சுவையாக போட்டுத் தந்தாலும் ‘‘என்னத்த காபியோ... அங்கே மாதிரி இல்லை!” என்று கிச்சன் தலைவியைக் கலாய்ப்பதில் தொடங்குகிறதாம் ஸ்டாலினின் அன்றைய தினம். பிறகு வீட்டிலேயே இருக்கும் ஜிம்மில் உதயநிதியுடன் சேர்ந்தே உடற்பயிற்சி செய்கிறார். ட்ரெட் மில்லில் அரை மணி நேரம் ஓட்டம். இப்போது உதயநிதி அட்வைஸில் தம்புல்ஸும் எடுக்கத் தொடங்கியிருக்கிறாராம். அதன் பிறகு மேலும் அரை மணி நேரம் யோகா, மூச்சுப்பயிற்சி.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தினமும் கபசுரக் குடிநீர் குடிக்கிறார். ‘ஆர்சனிகம் ஆல்பம்’ ஆயுர்வேத மருந்தை இரண்டு கோர்ஸ் முடித்திருக்கிறாராம். உணவுகளில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. எப்போதும்போல காலை இட்லி, தோசை. மதியம் பெரும்பாலும் கொஞ்சமேனும் மட்டன் அல்லது மீன் எடுத்துக்கொள்கிறார். மதியம் ஒரு மணி நேரம் தூக்கம் உண்டு. மாலை மீண்டும் குளியல். பிறகே உறக்கம்.

“அக்கா ரொம்பவே ஆக்டிவ்!”

“ரொம்பவே ஆக்டிவ்வா இருக்காங்க அக்கா!” என்கிறார்கள் தி.மு.க மகளிர் அணியினர். சென்னை சி.ஐ.டி காலனி யிலுள்ள கனிமொழியின் அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்குகிறது. இதுவரை சுமார் 500 புலம்பெயர்ந்த தொழிலாளர் களை சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல ஏற்பாடு செய்திருக் கிறார். தினமும் காலை அரை மணி நேரம் அலுவலகம் வந்து அன்று வந்திருக்கும் கோரிக்கை கள், எடுத்த நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கிறார்.
அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையே கருஞ்சீரகக் குடிநீர் அருந்துகிறார். அவ்வப்போது வெற்றிலை, இஞ்சி, மிளகு, கல் உப்பு கலந்து கொதிக்கவைத்த தண்ணீரையும் குடிக்கிறார். மகனுடன் ஒன்றாகச் சமைப்பது, அரசியல் பேசுவது, கருணாநிதி வசனத்தில் வந்த பழைய படங்களைப் பார்ப்பது எனப் பொழுதை நிறைவாகக் கழிக்கிறார் கனிமொழி.

பாக்கெட்டில் சானிடைஸர்

தலைமைச் செயலாளரான சண்முகம் படு உஷாராக இருக்கிறார். “தூங்குறப்பகூட மாஸ்க்கை கழட்டறாரான்னு தெரியலைங்க சார்!” என்கின் றனர் தலைமைச் செயலகப் பணியாளர்கள். பாக்கெட்டிலேயே மினி சானிடைஸர் வைத்திருக் கிறார். ஒவ்வொரு ஃபைலையும் எடுக்கும் முன்னரும், கையெழுத்துப் போட்ட பிறகும் சானிடைஸரால் கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்கிறார். யார் வந்தாலும் சமூக இடைவெளி கட்டாயம். அதேசமயம் அதி முக்கியத் தேவையிருந்தால் மட்டுமே நேரில் அனுமதி.
வீட்டிலும், தனது அலுவலக அறைக்கு வந்து போகும் பணியாளர்கள் இந்த கொரோனா சீஸனில் அவர்களது வீடு தவிர வேறெங்கும் செல்லக் கூடாது என்று உத்தரவிட்டிருக் கிறாராம். தினமும் கபசுரக் குடிநீர் அருந்துகிறார். எதிர்ப்பு சக்திக்காக கோவையிலிருந்து வரவழைக் கப்பட்ட ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்.
ரஜினி - கமல்
ரஜினி - கமல்

காலை எழுந்ததும் இஞ்சிச் சாறு!

ஊரடங்குக்கு முன்பு பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டதால், சென்னை அண்ணாநகர் வீட்டைவிட்டு அதிகம் வெளியே வருவதில்லை வைகோ. காலையில் வெறும் வயிற்றில் இஞ்சிச் சாறு அருந்துகிறார். வீட்டிலேயே அரை மணி நேரம் உடற்பயிற்சி. இயற்கை உணவுகள், ஆரோக்கியமான தானியக் கஞ்சி, அவ்வப்போது பழச்சாறு எடுத்துக்கொள்கிறார். கட்சி நடவடிக்கை களில் மகனை முன்னிலைப்படுத்தி விட்டு, நிறைய புத்தகங்கள் படிக்கத் தொடங்கிவிட்டாராம் வைகோ!

வரலாறு படிக்கும் டி.டி.வி!

புதுச்சேரி ஆரோவில் அருகேயுள்ள பண்ணை வீட்டிலிருக்கிறார் அ.ம.மு.க-வின் டி.டி.வி.தினகரன். வீட்டுக்குள் கட்சி ஆட்கள் உட்பட வெளியாட்கள் வர அனுமதி இல்லை. காய்கறி, கீரை உட்பட எந்தவொரு பொருளையும் வராண்டாவிலேயே வைத்து மஞ்சள் தண்ணீரில் அலசி, வெயிலில் அரை மணி நேரம் உலர்த்திய பிறகே வீட்டுக்குள் கொண்டுவருகிறார்களாம். வரலாற்றுப் புத்தகங்களை அதிகமாக வாசிக்கிறார். மகள் ஜெயஹரிணியுடன் அதிக நேரம் செலவழிக்கிறார்.
அஜித் - விஜய்
அஜித் - விஜய்

பண்ணை வீட்டில் ப.சிதம்பரம்

மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டெல்லியில் இருந்தார். பிறகு உள்நாட்டு விமான சேவை தொடங்கியதும் சென்னைக்கு வந்தார். அவரை விமான நிலையத்தில் பரிசோதித்து, ‘14 நாள்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியது அதிகாரிகள் குழு. அதன்படி, தனது சென்னை நுங்கம்பாக்கம் வீட்டில் 14 நாள்கள் தனிமையில் இருந்தார்.
14 நாள்கள் முடிந்த பிறகு சென்னையிலிருந்து கிளம்பி சிவகங்கை மாவட்டம், மானகிரி பண்ணை வீட்டுக்கு வந்தவர், அங்கும் தன்னை யாரும் சந்திக்க வேண்டாம் என்று உத்தர விட்டிருக்கிறார். அறுபது ஏக்கர் பரப்பளவுள்ள பண்ணை வீட்டில் ஓரிரு பணியாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு தனிமையில் பொழுதைக் கழிக்கிறார் ப.சிதம்பரம்.

டி.ஜி.பி மெஸ்ஸில் தூக்கம்... குடும்பத்தினர் ஏக்கம்!

தமிழக சட்டம் - ஒழுங்குப் பிரிவு டி.ஜி.பி-யான திரிபாதி பணி முடிந்தால் நேராக வீட்டுக்குச் செல்வதில்லை. எழும்பூரிலுள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகள் மெஸ்ஸுக்குப் போகிறார். அங்கே அவருக்குத் தற்காலிகமாக ஒதுக்கப்பட்டுள்ள அறையில் குளிக்கிறார். பிறகுதான் வீட்டுக்குப் போகிறார். சிலசமயம் இரவு லேட்டாகிவிட்டால் மெஸ்ஸிலேயே தங்கிவிடுகிறார். இதனால், குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் இவரைப் பார்க்காமல் ஏக்கம்கொள்கிறார்களாம். தமிழக காவல்துறையில் சுமார் 900 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களில் 700 பேர் சென்னை மாநகர போலீஸார் மட்டுமே. டி.ஜி.பி அலுவலகப் பணியாளர்களில் பத்துப் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். தினமும் இவர்களின் உடல்நிலையைக் கேட்டறிகிறார் டி.ஜி.பி.

ஷூ, பெல்ட், தொப்பிக்கும் சானிடைஸர்!

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தினமும் களப்பணியாற்றுகிறார். ஒரு நாளைக்குக் குறைந்தது 15 முறை கை கழுவுகிறார். வெளியில் போய்விட்டு வந்தால் ஷூ, பெல்ட், தொப்பி அனைத்துக்கும் சானிடைஸர் அடிக்கிறார். விஸ்வநாதன் அறைக்கு யாராவது வந்து சென்றால், அந்த இருக்கையை கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்துகிறார்கள். 16 மூலிகைகள் அடங்கிய ‘கபவாதக் குடிநீர்’ என்கிற கஷாயத்தை தினமும் அருந்துகிறார். நெல்லிக்காய், ஆரஞ்சு ஜூஸ், கீரை ஆகியவை இவரது சாப்பாடு மெனுவில் கட்டாயம் இருக்கின்றன.

வீட்டுக்குள் முடங்கிய ரஜினி!

லாக்டெளனின் ஆரம்ப கட்டத்தில் சகஜமாக இருந்தார் ரஜினி. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என நெருங்கிய நண்பர்களை போயஸ் கார்டனுக்கு வரவைத்துச் சந்தித்தார். நோய்த் தொற்று தீவிரமானதும், வீட்டைவிட்டு வெளியேவருவது, வீட்டுக்குள் மற்றவர்களை அனுமதிப்பது என இரண்டையுமே முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டார் ரஜினி. ஏற்கெனவே உடலில் அறுவை சிகிச்சைகள் நடந்திருப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் மிகவும் கவனமாக இருக்கும்படி ரஜினியை டாக்டர்கள் அறிவுறுத்தியிருக் கிறார்கள். ‘அண்ணாத்தே’ தயாரிப்பாளர்களான சன் டி.வி தரப்பிடமும் ஜனவரிக்கு மேல்தான் ஷூட்டிங் வர முடியும் என்று சொல்லிவிட்டாராம் ரஜினி.

ஹோட்டல் அறையில் முடங்கிய கமல்!

தனது நீலாங்கரை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதிலிருந்தே கடந்த நான்கு ஆண்டுகளாக எம்.ஆர்.சி நகரில் ஒரு ஹோட்டலிலுள்ள, ஒரு பெரிய அறைதான் கமல்ஹாசனின் வாசஸ்தலமாகிவிட்டது. கடந்த மார்ச் இரண்டாம் வாரத்திலேயே ராஜ்கமல் மற்றும் மய்யம் அலுவலகப் பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி அறிவுறுத்திவிட்டார். ஹோட்டலின் 5-வது மாடியில் இருந்துகூட கமல் வெளியே வருவதில்லை என்கிறார்கள். எல்லாமே ஆன்லைன் வீடியோ மீட்டிங்குகள்தான். ஏற்கெனவே காலில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டு, பிளேட் அகற்றப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக பிஸியோதெரபி செய்துவந்தார் கமல். சில வாரங்களாக அதுவும் நிறுத்தப்பட்டிருக்கிறது.

‘எஸ்கேப்’ நயன்தாரா

நடிகை நயன்தாரா சென்னை எக்மோர் மியூசியம் அருகேயுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் வசித்துவந்தார். சமீபத்தில் சென்னையில் தொற்று தீவிரமானவுடன் இருவரும் சென்னைக்கு வெளியே கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள ஒரு வீட்டுக்கு இடம் மாறியிருப்பதாகச் சொல்கிறார்கள். கிரேட் எஸ்கேப்!
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
நயன்தாரா - விக்னேஷ் சிவன்

‘தள்ளிப்போன’ மாஸ்டர்!

நடிகர் விஜய் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள காணத்தூர் வீட்டில் இருக்கிறார். மகன் ஜேசன் சஞ்சயும் கனடாவி லிருந்து சென்னை வந்துவிட்டார் என்கிறார்கள். வீட்டுக்குள் வெளியாட்கள் நுழையத் தடை. ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப் பாளரும் நெருங்கிய உறவினருமான சேவியர் பிரிட்டோவை மட்டுமே லாக்டெளன் நேரத்தில் சந்தித்திருக்கிறார் விஜய். தீபாவளிக்கு திட்டமிடப்பட்ட ‘மாஸ்டர்’ ரிலீஸ் பொங்கலுக்குத் தள்ளிப் போயிருக்கிறாதாம்!

‘தலை’ காட்டாத தல!

திருவான்மியூரிலுள்ள வீட்டில் அப்பா, அம்மா மற்றும் குடும்பத்தினருடன் வசித்துவருகிறார் அஜித். மே முதல் வாரத்தில் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாததால், மருத்துவமனைக்கு மனைவி ஷாலினியுடன் சென்றுவந்தார். அதன் பிறகு அவர் வெளியே தலைகாட்டுவதில்லை. அஜித்துக்கு உடலில் பல்வேறு அறுவைச் சிகிச்சைகள் நடந்திருப்பதால், டாக்டர்கள் அவரை, `வெளியே வர வேண்டாம்’ என அறிவுறுத்தியிருக்கிறார்கள். ‘வலிமை’ படத்தின் ஷூட்டிங்கையும் இந்த ஆண்டு இறுதிவரை வேண்டாம் என்று சொல்லியிருக்கிறாராம் அஜித்.
ஹலோ, எடப்பாடி சாரா... கொரோனாவை எப்ப சார் விரட்டுவீங்க?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக