வெள்ளி, 5 ஜூன், 2020

நடிகர் செந்தில் :கொரோனா கத்துக்கொடுத்த பாடம்... இயற்கை விவசாயம் செய்யப்போறேன்!

vikatan.com - கு.ஆனந்தராஜ் : `என்னை நடிகராத்தான் மக்களுக்குத் தெரியும்.
உண்மையில் நான் விவசாயி. எங்க குடும்பம் விவசாயக்குடும்பம். பல வருஷமா இயற்கை விவசாயம் செய்திருக்கேன். இந்த விஷயம் பெரிசா யாருக்குமே தெரியாது.
இப்போ விவசாய வேலைகள் குறைஞ்சிருக்குதே தவிர, அதை முற்றிலுமா கைவிடலை. திரும்பவும் விவசாயத்தில தீவிரமா இறங்கப்போறேன்." - யதார்த்தமாகப் பேசுகிறார் நடிகர் செந்தில்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கொடிகட்டிப் பறந்த செந்தில், தற்போது சென்னை சாலிகிராமத்தில் வசித்துவருகிறார். சத்தமில்லாமல் 23 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்திருக்கிறார். 2016-ல் சென்னையைத் தாக்கிய வர்தா புயலால், செந்திலின் ஐந்து ஏக்கர் விவசாய நிலம் பெரிதும் பாதிப்படைந்தது. தற்போது, மீண்டும் இயற்கை விவசாயத்தில் தீவிரமாக இறங்கப்போவதாகச் சொல்கிறார்.
``என் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி ஊர்ல முழுநேரமா விவசாயம் பண்ணிக்கிட்டிருந்தேன். சினிமாவுக்கு வந்தபிறகும் விவசாயத்தோட தொடர்பு இருந்துச்சு. 1990-களில் என் சினிமா பயணம் மிகச் சிறப்பா இருந்துச்சு. அந்தத் தருணத்துல சினிமாவுல சம்பாதிச்ச பணத்துல சென்னைக்குப் பக்கத்துல இருக்கிற படப்பையில அஞ்சு ஏக்கர் நிலம் வாங்கினேன். 1993-லிருந்து அங்கே இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். அதுவும் ஒருங்கிணைந்த பண்ணையம். ஆடு, மாடு, கோழி வளர்ப்போட விவசாயம் ஜம்முனு நடந்துச்சு. கால்நடைகளோட சாணத்தை மக்கவெச்சு செடிகளுக்கு உரமாப் போடுவேன். எந்த ரசாயன உரங்களையும் போட மாட்டேன். தோட்டத்துல ஒரு பெரிய கிணறு இருக்கு. அதுல எந்தக் காலத்துலயும் தண்ணி வத்தாது. இந்த கோடைக்காலத்துலகூட கிணத்துல தண்ணி இருக்கு. தொடக்கத்துல தக்காளி, வெண்டை, கத்திரி, பூசணி, புடலை, அவரை, சுரைக்காய்னு நிறைய காய்கறிகள், பூ வகைகள் சாகுபடி செஞ்சேன். மா, தர்ப்பூசணி, பப்பாளி, சப்போட்டா, எலுமிச்சை, கொய்யானு பழ மரங்களும் வச்சிருந்தேன். தென்னையும் உண்டு. வாரத்துக்கு ஒருமுறை அல்லது ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் அங்க போயிடுவேன். எங்க வீட்டுத் தேவைக்கான காய்கறி முழுமையா அங்கேயே கிடைச்சுச்சு. தோட்டத்துலயே தங்கறதுக்கு ஏதுவா ஒரு ஓட்டு வீடும் இருந்துச்சு. ஒரு கட்டத்துல என்னால நேரடியா களத்துல இறங்கி வேலை செய்ய முடியலே. வேலையாட்களை வச்சுத்தான் பாத்துக்கிட்டேன்" என்பவர், சிறப்பாக நடந்துவந்த விவசாயப் பணிகள் சரிவடைந்தது குறித்து ஆதங்கத்துடன் பேசினார்.
``காய்கறிகளோட சேர்த்து தேக்கு, வேம்புனு நிறைய மரங்களையும் வளர்த்தேன். எல்லாமே நல்லா பலன் கொடுத்துச்சு. திடீர்னு வேலையாட்கள் கிடைக்காமப் போயிட்டாங்க. வழக்கமா வர்றவங்க வேற வேற வேலைகளுக்குப் போகத் தொடங்கிட்டாங்க. அதை ஓரளவுக்கு சமாளிச்சேன். ஆனா, 2016ல வீசுன வர்தா புயலை தாக்குப்பிடிக்க முடியலே. என் தோட்டத்துல கடுமையான சேதம். புளியமரம், சப்போட்டா, தேக்கு, தென்னைன்னு எல்லா மரங்களும் வேரோட சாஞ்சிருச்சு.
செந்திலின் விவசாயத் தோட்டம்
செந்திலின் விவசாயத் தோட்டம்
புயலுக்குப் பிறகு ஒருநாள் தோட்டத்துக்குப் போனேன். ஆசையா வளர்த்து, செழிப்பா வளர்ந்து பலன்கொடுத்த மரங்கள் நிலத்துல சரிஞ்சு கிடந்துச்சு. அந்தக் காட்சியைப் பாக்கும்போது ரொம்பவே வேதனையா இருந்துச்சு. காய்கறிப் பயிர்களும் அழிஞ்சு போச்சு. மா மரங்கள் மட்டும்தான் தப்பிப் பிழைச்சது. அதுல சீசன் காலத்துல காய்கள் கிடைக்குது.
நடந்ததை நினைச்சு வருத்தப்படாம, அடுத்து செய்யவேண்டிய விஷயங்களைக் கவனிக்கலாம்னு நினைச்சேன். கீழ விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தலாம்னு ஆட்களை வரச்சொன்னேன். போதிய ஆட்கள் கிடைக்கலை. அதுமட்டுமில்லாம மரங்களை அப்புறப்படுத்த பல லட்சம் ரூபாய் செலவாகும்னு சொன்னாங்க. கூடவே சில பிரச்னைகளும் உருவாச்சு. ஒருகட்டத்துல, `காசே வேணாம்... சும்மாவே மரங்களை எடுத்துக்கோங்க'ன்னுகூட சொல்லிப்பார்த்தேன். அப்பவும் யாரும் முன்வரலை. அதனால அந்த மரங்களை இப்போவரை அப்புறப்படுத்த முடியலை. விழுந்த மாதிரியே எல்லா மரங்களும் நிலத்துல கிடக்குது.
கிணறு
கிணறு
புயல்ல தப்பிச்ச சில தென்னை மரங்களும் பட்டுப்போச்சு. புல், எருக்கஞ்செடி, முள் செடிகள் நிறைய வளர்ந்து தோப்பு முழுக்க காடு மாதிரி ஆகிடுச்சு. இந்தக் கோலத்துல என் தோட்டத்தைப் பார்க்க ரொம்பவே வருத்தமா இருக்கு. இப்போ ஒரு வேலையாள் மட்டும் தோட்டத்தைக் கவனிச்சுக்கிறார்" என்கிறார் தளர்வான குரலில்.
இப்போது மீண்டும் இயற்கை விவசாயத்தைத் தொடரவிருக்கிறார் செந்தில். அந்த ஆர்வத்தை கொரோனா லாக்டௌன் காலகட்டம் அவருக்கு உண்டாக்கியிருக்கிறது. அதுகுறித்துப் பேசுகையில், செந்திலின் குரலில் உற்சாகம் கூடுகிறது.
``வர்தா புயலில் தப்பிய மா மரங்கள் மட்டும் இப்போ பலன் கொடுக்குது. இப்பகூட அந்த மரங்கள்ல காய்கள் ஓரளவுக்கு காச்சிருக்கு. மத்தபடி வேறு விளைச்சல் எதுவும் அந்த தோட்டத்துல நடக்கலை. தோட்டத்துல மீண்டும் செழுமையை உருவாக்கணும்னு ஒவ்வொரு முறையும் மனசு நினைக்கும். ஆனா, அதைத் தொடரவே முடியலை.
இந்த கொரோனா சமயத்துல வீட்டைவிட்டு வெளியே போய் காய்கறிகள் வாங்கவே சிரமமாவும் பயமாவும் இருக்கு. `ஒருவேளை நம்ம நிலத்துல விவசாயம் தொடர்ந்து நடந்திருந்தா, காய்கறிகள் சுலபமா கிடைச்சிருக்கும். ஓய்வு நேரத்தையும் பயனுள்ள வகையில் செலவழிச்சிருக்கலாம்'னு இப்போ தோணுது.
தோட்டத்திலுள்ள வீடு
தோட்டத்திலுள்ள வீடு
கொரோனா முடிஞ்சதுமே தோட்டத்துல விழுந்து கிடக்கிற மரங்களை அப்புறப்படுத்தப்போறேன். தோட்டத்தைச் சமன்படுத்தி, மறுபடியும் காய்கறிகள், பழ மரங்களை வளர்க்கப்போறேன். மறுபடியும் இயற்கை விவசாயப் பணிகளில் ஈடுபட முடிவெடுத்திருக்கேன். விவசாயத்துக்கு புத்துயிர் கொடுத்தால்தான் எல்லோருமே நல்ல சாப்பாட்டை சாப்பிட முடியும். அதை இந்த கொரோனாவும் லாக்டௌனும் நல்லாவே புரிய வச்சிருச்சு..." என்றார் செந்தில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக