வெள்ளி, 5 ஜூன், 2020

ஜெ.அன்பழகன்... கொரோனா தொற்று... இப்போது எப்படியிருக்கிறார்

ஜெ.அன்பழகன்vikatan.com- அ.சையது அபுதாஹிர் : கொரோனா தொற்றுக்கான அறிகுறி அவருக்கு இருந்துள்ளதால் உடனடியாக அதற்கான சோதனையும் நடந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே  அன்பழகனுக்குக்  கல்லீரல் பிரச்னை ஏற்பட்டு  வெளிநாட்டுக்குச் சென்று அறுவை சிகிச்சையும் செய்துவந்துள்ளார். தி.மு.க வின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளருமான ஜெ.அன்பழகனுக்குக் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு உடல்நிலை குறைபாட்டினால் குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கபட்டுவருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

கொரோனா தொற்று தமிழகத்தில் பரவியதும் தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க அந்தக் கட்சியின் தலைமை உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கிவந்தார் அன்பழகன். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அவருக்குத் திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. சிறுநீரகப் பகுதியில் வலி ஏற்பட்டதால் உடனடியாக ஜெகத்ரட்சகனைத் தொடர்புகொண்டு “உங்களது ரேலா மருத்துவமனையில் எனக்குச் சோதனை செய்ய வேண்டும்” என்று கடந்த 2-ம் தேதி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
மருத்துவமனையில் இவருக்குச் சோதனை செய்தபோது சிறுநீரகத்தில் சிறிய பாதிப்பு இருப்பதையும் அறிந்துள்ளனர். மேலும் கொரோனா தொற்றுக்கான அறிகுறி அவருக்கு இருந்துள்ளதால் உடனடியாக அதற்கான சோதனையும் நடந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே அன்பழகனுக்குக் கல்லீரல் பிரச்னை ஏற்பட்டு வெளிநாட்டுக்குச் சென்று அறுவை சிகிச்சையும் செய்துவந்துள்ளார். அதற்கான மருந்துகளை இப்போது வரை சாப்பிட்டு வருகிறார். இப்போது சிறுநீரகத்திலும் பிரச்னை ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவக்குழு அன்பழகனை ஐ.சி.யூ வார்டில் சேர்த்துள்ளது.



கடந்த மாதம் 29-ம் தேதி வரை பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துவந்துள்ளார் அன்பழகன். கொரோனா தொற்று உறுதி செய்த பிறகு அவரது வீட்டில் உள்ளவர்களும், அவரது தம்பியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்” என்கிறார்கள் அன்பழகனுக்கு நெருக்கமானவர்கள்.
அன்பழகனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட தகவல் தெரிந்த பிறகு நேற்று ஸ்டாலின், ஜெகத்ரட்சகன் மற்றும் மருத்துவர் ரேலா ஆகியோரிடம் நேரடியாக விவரங்களைக் கேட்டுள்ளார். “தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது” என்பதை மட்டும் மருத்துவர் ரேலா அப்போது ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார். ஜெகத்ரட்சகனிடம், “நான் ஏற்கெனவே அன்புவிடம் சொன்னேன். 'உடல்நிலையைப் பாரத்துக்கொள்' என்று. அவன் கவனிக்கவில்லை. அன்புவை எப்படியும் மீட்டுக் கொண்டுவாருங்கள். எனது நீண்ட நாளைய நண்பன் அன்பு” என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார் ஸ்டாலின்.



ஜெ.அன்பழகன்- ஸ்டாலின்



ஜெ.அன்பழகன்- ஸ்டாலின்
கடந்த சில நாள்களுக்கு முன்பாகவே அன்பழகனுக்குக் காய்ச்சல் இருந்துள்ளது. காய்ச்சலுக்கான மருந்து எடுத்துக்கொண்டதும், சரியாகியுள்ளது. அப்போதே கொரோனா சோதனை செய்யச் சொல்லியுள்ளனர் அவருக்கு நெருக்கமானவர்கள். ஆனால், காய்ச்சல் சரியாகிவிட்டது என அமைதியாக இருந்துள்ளார். அதே போல் அன்பழகனின் தம்பிக்கும் கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் சில நாள்களாக இருந்துள்ளது. அதற்கான சிகிச்சையை ஆரம்பத்தில் இருவருமே எடுத்துக்கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். சிறுநீரகத்தில் பாதிப்பு இருப்பதால், இப்போது அன்பழகன் உடல்நிலை கடும்பாதிப்பைக் கண்டுள்ளது. இப்போது அன்பகழனுடன் தொடர்பில் இருந்தவர்கள் தாமாகத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். எம்.பிக்கள் மற்றும் சில கட்சி நிர்வாகிகளும், அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முதல்நாள் வரை தொடர்பில் இருந்துள்ளார்கள். அவர்களும் இப்போது அச்சத்தில் இருக்கிறார்கள்.




அன்பழகன் உடல்நிலை குறித்து முதல்வர் அலுவலகத்திலிருந்தும் விசாரணை நடந்துள்ளது. கொரோனா தடுப்புச் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ரேலா மருத்துவமனைக்குத் தொடர்புகொண்டு அன்பழகனுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளின் விவரங்களையும் கேட்டுள்ளார்கள். சிறுநீரகப் பிரச்னையும், கல்லீரல் பாதிப்பும் இருப்பதால், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு, வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சையளிக்கும் தகவலை மருத்துவமனை தரப்பு சொல்லியிருக்கிறது. அதற்கு அரசு தரப்பிலிருந்து எந்த உதவியும் செய்யத் தயாராக இருப்பதாகச் சொல்லியுள்ளனர்.

அமைச்சர் விஜயபாஸ்கரும் மருத்துவர் ரேலாவிடம் அன்பழகன் உடல்நிலை குறித்துப் பேசியிருக்கிறார். அன்பழகனின் உடல்நிலை குறித்து விசாரிக்க ஸ்டாலின் மருத்துவமனைக்கு வரவிரும்பியுள்ளார். ஆனால், இப்போதுள்ள நிலையில் பார்க்க வருவது உகந்ததல்ல, என்று மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். அரசு தரப்பிலிருந்தும் தொடர்ந்து அன்பழகனின் உடல்நிலை குறித்த ஆவணங்களைப் பெற்றுள்ளார்கள். அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தடுப்பு சிகிச்சைகளை அரசு தரப்பிலிருந்து செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக