வியாழன், 25 ஜூன், 2020

திணறும் திமுக.. யார் சொல்வதை கேட்பது.. "இவரா.. அவரா".. அதிருப்தியில் சீனியர்கள்..!

 Hemavandhana  - /tamil.oneindia.com :  சென்னை: சீனியர்கள், நிர்வாகிகள், ஐடிவிங் என்பதையும் தாண்டி, பிகேவுக்கு முக்கிய விஐபியுடன் மோதல் போக்கு உருவாகி உள்ளதாம்.. அதனால் கட்சிக்குள்ளேயே பிரசாந்த் கிஷோருக்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பி அறிவாலயத்தை சூடாக்கி உள்ளதாக கூறப்படுகிறது! எப்படியாவது இந்த முறை ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற தீவிரத்திலும், வேகத்திலும் உள்ளார் திமுக தலைவர்.. இதற்காகவே வியூக புலியை ஒப்பந்தம் செய்து அழைத்து வந்தார்
அத்துடன், தமது ட்விட்டர் பக்கத்தில், பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் இணைந்து திமுக பணியாற்றும் என்றும் அறிவித்தார்.. ஸ்டாலினின் இந்த அறிவிப்பு விவாத பொருளானது. "இந்து விரோத கொள்கை, பிரிவினைவாதம், விஞ்ஞான ஊழலின் ஊற்றுக்கண் என பல பேர்பெற்ற தலைவர்களால் கட்டமைக்கபட்ட  ஒரு சர்வாதிகாரியாக ஸ்டாலின்  இருந்தும் கட்டுப்படுத்த வழியின்றி புதிய முயற்சியாய் பிராமணர் பிகேயார் காலடியில் சரணடைவது தொண்டர்கள் மேல் உள்ள அவநம்பிக்கை தான் காரணமா?" என தமிழக பாஜக ட்வீட் போட்டு கேள்வி எழுப்பியது. எதிர்க்கட்சி என்பதால் பாஜக இப்படித்தான் பேசும் என்று நினைத்தால், திமுகவுக்குள்ளேயே புகைச்சல் ஆரம்பமானது. 
வரப்போகிற சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்ளலாம் என்று வியூகம் அமைத்து களமிறங்குவார்கள் என்று பார்த்தால், களையெடுப்பை கையில் எடுத்தது முக்கிய நிர்வாகிகளுக்கு தூக்கி வாரிப்போட்டது.. 
 
யாராக இருந்தாலும் களையெடுப்பு என்பதை கையில் எடுக்க வேண்டும் என்று பிகே வலியுறுத்தவும் மூத்த தலைகளுக்கு டென்ஷன் எகிறிவிட்டது. அடுத்ததாக, இந்துக்களுக்கு ஆதரவான கட்சி என்று வெளிப்படுத்தும் எண்ணம் பிகேவின் திட்டமாக உள்ளதை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.. 
 
எல்லாவற்றிற்கும் மேலாக கூட்டணி வேண்டாம், தனித்தே போட்டியிடலாம் என்று பிகே ஆலோசித்ததும் சீனியர்களுக்கு பிடிக்கவில்லை என்று ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டது. 
 
ஆக மொத்தம் பிகே-வை நியமனம் செய்ததில் இருந்தே ஏகப்பட்ட கசமுசாக்களும், அதிருப்திகளும் எழுந்தவாரியாகவே இருந்தது.
இதற்கு நடுவில் திமுகவின் ஐடி விங்-குடன் கருத்துமோதல் பிகேவுக்கு எழுந்தது.. பிகே டேட்டா கேட்டபோதுகூட, "நாங்க வேணாம், ஆனா நாங்க ரெடி பண்ணியிருக்கிற டேட்டா மட்டும் உங்களுக்கு வேணுமா" என்று அவர்கள் தங்களின் டேட்டாக்களை தர மறுத்தாகவும் செய்திகள் கசிந்தன. இது எல்லாம் திமுக தலைமைக்கு தெரிந்தும், அனைவரையும் பொறுமை காக்க சொன்னாரே தவிர, பிகேவுக்கு எதிரான எந்த நிலைப்பாட்டையும் அவர் முன்னெடுக்கவில்லையே என்ற முணுமுணுப்புகளும் எழுந்தபடியே உள்ளன
 
இதனிடையே கொரோனா பரவவும், "ஒன்றிணைவோம் வா" திட்டத்தை கையில் எடுத்தனர்.. உண்மையிலேயே நல்ல திட்டம் இது.. மக்களையும் திரும்பி பார்க்கவும் வைத்தது.. கட்சியையும் தாண்டி அனைத்து தரப்பையும் இழுத்தது.. நல்ல பெயரையும் திமுகவுக்கு மிக வேகமாக பெற்று தந்தது.. அதிமுகவுக்கே சற்று கலக்கத்தை தந்த சபாஷ் திட்டம் இது என்றுகூட சொல்லலாம்.. 
 
அந்த வகையில் பிகே-வை நாம் பாராட்டவும் செய்யலாம்... ஆனால் ஜெ.அன்பழகன் மறைவு அனைத்து பெயரையும் குலைத்து விட்டது.. தொற்று பரவியதாக எழுந்த குற்றச்சாட்டுகளாலேயே அந்த செயல் திட்டத்தை நிறுத்தி வைத்து விட்டது திமுக. 
 
அண்ணா நகரில் உள்ள ஐ- பேக் ஆபீசும் மூடப்பட்டு விட்டது. இப்போது பிகே-வால் புது பஞ்சாயத்து ஆரம்பமாகி உள்ளது.. 
 
கட்சியில் உள்ள சில சீனியர்கள், மாவட்டஙகளில் உள்ள முக்கிய நிர்வாகிகள், கட்சியின் ஐடிவிங் இவர்களுடன் மோதல் முடிந்து இப்போது சபரீசனுடன் லேசான மோதல் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.. 
 
கொஞ்ச நாளாகவே 2 பேருக்கும் கருத்து மோதல் வலுவாக உள்ளதாம்.. இதற்கு காரணம், பல சீனியர்களுக்கு இந்த முறை வாய்ப்பளிக்க தேவையில்லை என்கிற ஒரு பகீர் முடிவை எடுத்துள்ளதுதானாம். பிகேவை பொறுத்தவரை 65 வயசு தாண்டிய சீனியர்களுக்கு வாய்ப்பு தரக்கூடாது, திறமையான, படித்த, இளைஞர்களை களமிறக்க வேண்டும் என்பதுதான் அவரது விருப்பம்.. 
 
முக்கியமாக இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று பார்க்கிறார்.. அப்போதுதான் சுறுசுறுப்பாக கட்சி இயங்கும் என்று நினைக்கிறார். ஆனால், பிகேவின் இந்த முடிவுதான் சபரீசனுக்கு பிடிக்கவில்லை என்கிறார்கள்
l
ஆனால், "சீனியர்களை ஒதுக்கக்கூடாது, அவர்களின் அனுபவங்களும், தேர்தல் வியூகங்களும் கட்சிக்கு பலம் வாய்ந்தது.. அவைகளை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும், அவர்களை ஒதுக்குவது சரியில்லை" என்பது சபரீசனின் எண்ணமாக உள்ளது... அந்த 65 வயசு லிஸ்ட்டில் சபரீசனுக்கு நெருக்கமான சீனியர்களும் உள்ளார்களாம்.. இந்த சமாச்சாரம்தான் இருவருக்குள்ளும் இடிக்கிறது. இதில் என்ன முடிவு எடுக்கப்படுமோ தெரியவில்லை.. அதனால் அறிவாலய சீனியர்கள் சற்று டென்ஷனாகவே உள்ளனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/dmk-party-senior-leaders-disappoint-with-prashant-kishore-389263.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக