திங்கள், 1 ஜூன், 2020

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும்?

BBC : கொரோனா வைரஸ் இதுவரை 70க்கும் மேலான நாடுகளில் பரவியுள்ளது. இது மேலும் பரவும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இப்போது வரை கொரோனா வைரஸ் வராமல் தடுப்பதற்கான மருந்து ஏதும் தயாராகவில்லை. ஆனால் இந்த நிலை எப்போது மாறும்?
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து எப்போது வரும்? ஆராய்ச்சியாளர்கள் தடுப்பு மருந்து உருவாக்கிவிட்டனர். அதை விலங்குகள் மேல் பரிசோதிக்கவும் தொடங்கிவிட்டார்கள். அது வெற்றி பெற்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் மனிதர்களிடம் பரிசோதனை நடத்துவது தொடங்கும்.
இந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்குள் ஆராய்ச்சியாளர்கள் இதை உருவாக்கிவிட்டாலும் அதன் பிறகு அதை பெருமளவில் தயாரிக்கும் பெரிய பணி இருக்கிறது.
அதாவது அடுத்த ஆண்டு பாதியில்தான் மருந்து தயார் நிலையில் இருக்கும்.
இவை எல்லாம் எதிர்பார்ப்புகள் மட்டுமே. இந்த தடுப்பு மருந்துகளை உருவாக்க புதிய செயல்முறையை பின்பற்றுவதால் அனைத்தும் சரியானதாக செல்லும் எனக் கூற முடியாது. ஏற்கனவே நான்கு வகையான கொரோனா வைரஸ்கள் உள்ளன. அவை அனைத்தும் சாதாரண சளியைதான் உருவாக்கும். ஆனால் இவை எதற்கும் தடுப்பு மருந்து இல்லை.
இது எல்லா வயதினரையும் காப்பாற்றுமா? இந்த தடுப்பு மருந்து வெற்றிகரமாக செயல்படுவதற்கான வாய்ப்பு வயோதிகர்களிடம் குறைவாகவே இருக்கும். இதற்கு தடுப்பு மருந்தை குறை சொல்ல முடியாது. வயோதிகர்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு இந்த மருந்துகளை ஏற்று வினை புரியும் அளவுக்கு வலுவாக இருக்காது.

எல்லா மருந்துகளுக்கும் ஏதாவது ஒரு பக்க விளைவு இருக்கும். ஆனால் ஆராய்ச்சியில் இருக்கும் ஒரு மருந்து என்ன பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று நம்மால் கூற முடியாது.
தடுப்பு மருந்து தயாராகும் வரை என்னென்ன சிகிச்சை வழங்கப்படும்?

தடுப்பு மருந்து, வைரஸ் பரவுவதைத் தடுக்கும். இப்போது அவ்வாறு பரவுவதைத் தடுக்க சுகாதாரம் பேணுவது மட்டுமே ஒரே வழி.
பெரும்பாலான மக்களுக்கு கொரோனா வைரசின் பாதிப்பு லேசானதாக மட்டுமே இருக்கும். வைரஸ் தொற்றை குணப்படுத்துவதற்கான சில மருந்துகள் நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய மருந்துகள் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வேலை செய்யும் என்று உறுதியாகக் கூற முடியாது.

தடுப்பு மருந்து எப்படி தயாரிக்கப்படும்?

வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை தீங்கற்ற முறையில் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு அடையாளம் காட்டும் பணியை தடுப்பு மருந்துகள் செய்கின்றன. அதன் மூலம் நோய் எதிர்ப்பு அமைப்பு அதை படையெடுப்பாளர்களாக அடையாளம் காண்டு அதனுடன் எப்படிப் போராடுவது என்பதைக் கற்கும்.
உண்மையான நோய்க் கிருமிகள் எப்போதாவது உடலைத் தாக்கும்போது, அந்த தொற்றினை எப்படி எதிர்த்துப் போராடுவது என்பது உடலுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும்.
நோய்க்குக் காரணமாகும் வைரசைக் கொண்டே தடுப்பு மருந்துகளை உருவாக்கும் முறையே பல பத்தாண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
தட்டம்மை, பொன்னுக்குவீங்கி, மணல்வாரி (மீசல்ஸ், மம்ப்ஸ், ரூபெல்லா) போன்ற நோய்களுக்கான தடுப்பு மருந்துகள், அவற்றுக்கு காரணமான வைரஸ்களின் வீரியம் குறைந்த வடிவத்தைக் கொண்டே தயாரிக்கப்பட்டன.
ஃப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகள், அந்த நோய்க்கிருமிகளின் பரவலாக தாக்கும் வகைகளை எடுத்துக் கொண்டு அவற்றை முற்றிலும் செயலிழக்க வைத்து உருவாக்கப்படுகின்றன.

ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பில் புதிய மற்றும் அதிகம் ஆராயப்படாத ப்ளக் அண்ட் ப்ளே தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்படவுள்ளன. ஏனென்றால் கொரோனாவின் மரபணுக் குறியீடு, சார்ஸ்-கோவ்-2, நமக்குத் தெரியும். தற்போது அந்த வைரஸ் உருவாகும் முறை நமக்குத் தெரிந்திருக்கிறது.
இதனால் சில ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவைரஸின் மரபணுக் குறியீட்டை எடுத்து பாதிப்பு இல்லாத மற்ற வைரஸ்களுக்குள் செலுத்துகின்றனர்.
அப்படி செய்தால் ஒருவரை நாம் பாதிப்பு எதுவும் இல்லாத வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக்கலாம். அதை எதிர்ப்பு சக்தி எளிதில் வென்றுவிடும்.
வேறு சிலர் டிஎன்ஏ அல்லது ஆர்என்ஏ-வில் சிறிது சிறிதாக கொரோனாவின் மரபணுக் குறியீட்டை ஏற்றி அதற்கான தடுப்பு திறனை நம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பிலேயே உருவாக்குகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக