வெள்ளி, 19 ஜூன், 2020

எல்லை மோதல்: மோடியின் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

மின்னம்பலம் :பிரதமர் நரேந்திர மோடி
தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. லடாக்கிலுள்ள இந்திய- சீன எல்லையில் ஜூன் 16ஆம் தேதி இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் இந்தியச் சீன எல்லை பிரச்சனை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று (ஜூன் 19) அனைத்து கட்சிக் கூட்டம் நடந்தது. இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள் துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 20 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

தமிழகத்திலிருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டம் ஆரம்பித்ததும் அனைத்து தலைவர்களும் எல்லைப் பாதுகாப்புப் பணியில் பலியான 20 வீரர்களுக்கு எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் கல்வான் பள்ளத்தாக்கு விவகாரத்தில் இந்தியா எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். எல்லையில் உள்ள நிலைமை குறித்து வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது. இன்று அதுதொடர்பாக பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இறுதியாக எடுக்கப்படும் முடிவு குறித்து பிரதமர் மோடி உரையாற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக