செவ்வாய், 16 ஜூன், 2020

லாபம் ஈட்டும் நேரமா இது..?" - மத்திய அரசைக் கடுமையாகச் சாடிய சோனியா காந்தி

sonia gandhi letter to modi on fuel price hikeநக்கீரன் : ஊரடங்கால் அவதிப்படும் மக்களிடம் இருந்து லாபமீட்டும் நோக்கில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது தவறானது எனக்கூறி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
ஊரடங்கால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ள இந்தச் சூழலில், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி கடந்த 10 நாட்களாக இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. கடந்த 10 நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை சுமார் ஐந்து ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் 80 ரூபாயை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, விலை உயர்வை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.


சோனியா காந்தி எழுந்தியுள்ள அந்தக் கடிதத்தில். "கரோனா வைரஸுக்கு எதிரான இந்தப் போரில், நமது தேசம் எப்போதும் இல்லாத வகையில் சமூக, பொருளாதார, சுகதாாரச் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. மார்ச் மாதத்திலிருந்து இந்தக் கடினமான சூழல் நீடித்து வருவதை நினைத்து நான் மிகவும் மனம் வருந்திக் கொண்டிருக்கிறேன். ஆனால், மத்திய அரசு இதுகுறித்து எந்த முழுமையான உணர்வும் இல்லாமல், 10 முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது.

நாடு முழுவதும் மக்கள் அச்சமுடன் கூடிய கடினமான சூழலை எதிர்நோக்கி வரும்போது, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி உயர்வை உயர்த்தும் இந்தத் தவறான ஆலோசனை மூலம் கூடுதலாக ரூ.2,60 லட்சம் கோடி வருவாயை ஈட்ட மத்திய அரசு நினைக்கிறது. ஆனால், ஏற்கெனவே பல்வேறு கடினமான சூழலைச் சந்தித்து வரும் மக்களுக்கு இந்த விலை உயர்வு மேலும் சுமையை அதிகரிக்கும். இந்த விலை உயர்வு முறையானதும் அல்ல, நியாயமானதும் அல்ல. இந்த நேரத்தில் மக்களின் சுமைகளை, துன்பங்களைப் போக்க வேண்டியது அரசின் கடமையாகும். அதைவிடுத்து மக்களை மேலும் கடினமான சூழலில் தள்ளக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக