வெள்ளி, 12 ஜூன், 2020

இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையல்ல

இடஒதுக்கீடு, அடிப்படை உரிமையல்ல
தினமலர் : மருத்துவப் படிப்புகளில், தமிழகத்தில் உள்ள, 'சீட்'களில், 50 சதவீதத்தை, ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு இடஒதுக்கீடு செய்யக் கோரும் வழக்கில், 'இடஒதுக்கீடு உரிமை என்பது அடிப்படை உரிமை அல்ல' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது .
மருத்துவப் படிப்புகளுக்காக, 'நீட்' எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வை நடத்தாமல் இருப்பதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள்,
பல்வேறு வழக்குகளை தொடர்ந்து வருகின்றன. இருப்பினும், 'நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய முடியாது' என, உச்ச நீதிமன்றம் உறுதிபட கூறியுள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க., - தி.மு.க., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டிருந்தது.

மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:மருத்துவம் உட்பட அனைத்து கல்விகளிலும், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு, 50 சதவீத இடஒதுக்கீடு செய்யும் வகையில், தமிழக அரசால், 1994ல் சட்டம் கொண்டு வரப்பட்டது.
தேசிய அளவிலான ஒதுக்கீடு என்ற முறை கொண்டு வரப்பட்ட பின், மருத்துவக் கல்வியில் இளநிலை, முதுநிலை, டிப்ளமா படிப்புகளில், ஓ.பி.சி., பிரிவினருக்கு குறைந்த அளவு வாய்ப்பே கிடைத்து வருகிறது. இது, ஓ.பி.சி., பிரிவினருக்கு, 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் தமிழக சட்டத்துக்கு எதிரானது.மருத்துவக் கல்விக்கு, நீட் எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட பின், ஓ.பி.சி., பிரிவினருக்கான இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை.
இந்த இடஒதுக்கீட்டை பின்பற்றாததற்கு உரிய சட்ட விளக்கத்தையும், மத்திய அரசு தரவில்லை.'மருத்துவக் கல்விக்கான இடங்களை நிரப்பும்போது, மாநில இடஒதுக்கீட்டு கொள்கைகளை பின்பற்ற வேண்டும்' என, இந்திய மருத்துவக் கவுன்சில் கூறுகிறது. ஆனால், அது பின்பற்றப்படவில்லை.

ஓ.பி.சி., பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீடு அளிக்காதது, அரசியல் சானத்தின், 14 மற்றும் 15ம் பிரிவுகளின் கீழ் அடிப்படை உரிமையை மீறும் செயலாக அமைந்து விடுகிறது.
அதனால், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்வியில் இளநிலை, உயர்நிலை, டிப்ளமா படிப்புகளில், தமிழகம் வழங்கிய, 'சீட்'களில், 50 சதவீதம், ஓ.பி.சி., பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.இதை, 2020 - 2021 கல்வியாண்டில் செய்யும்படி, உத்தரவிட வேண்டும். அதுவரை, மருத்துவக் கல்விக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எல்.நாகேஸ்வர ராவ், கிருஷ்ணா முராரி, ரவீந்திர பட் அடங்கிய, உச்ச நீதிமன்ற அமர்வு கூறியதாவது:
பின்தங்கிய மக்கள் மீது, அரசியல் கட்சிகளுக்கு உள்ள அக்கறை குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். இடஒதுக்கீடு உரிமை என்பது, அடிப்படை உரிமை அல்ல. நீங்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்காக வழக்கு தொடர்ந்துள்ளீர்கள். தமிழகத்துக்கான, 50 சதவீத இடஒதுக்கீடு குறித்தே கேள்வி எழுப்பிஉள்ளீர்கள்.
இது, அரசியல் சாசனத்தின், 32வது பிரிவின்படி அடிப்படை உரிமையை மீறியதாக எடுத்துக் கொள்ள முடியாது. அதனால், இந்த வழக்கை விசாரிக்க முடியாது. விரும்பினால், நீங்கள் உயர் நீதிமன்றத்தை நாடலாம்.இவ்வாறு அமர்வு கூறியது. அதையடுத்து, அனைத்து மனுக்களும் திரும்ப பெறப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக