புதன், 10 ஜூன், 2020

இந்தியா - சீனா எல்லை பிரச்சனை: லடாக் எல்லையில் வாழும் மக்களின் நிலை என்ன? BBCGroundReport


ஆமீர் பீர்சாதா, பிபிசி செய்தியாளர் - ரிங்ச்சேன் அங்கமோ சுமிக்சன், சுயாதீன பத்திரிகையாளர் :
BBC :கிழக்கு லடாக்கில் இந்தியா - சீனா இடையே கடந்த சில வாரங்களாக ராணுவப் பதற்றம் நிலவி வந்தப் பகுதியில் உள்ள பல நிலைகளில் இருந்து இரு நாட்டு ராணுவங்களும் பின்வாங்கியுள்ளன. இந்தியா - சீனா இடையே ராணுவ மட்டத்திலான இரண்டாவது பேச்சுவார்த்தை இந்தவாரம் தொடங்கவுள்ள நிலையில் இது நிகழ்ந்துள்ளது. இதனால், இப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவி வந்த பதற்றம் சற்று தணிந்திருப்பதாகத் தோன்றுகிறது.
இந்தப் பதற்றத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ, பிரதேசக் கட்டுப்பாடு, எல்லை சார்ந்த பிரச்சனைகள் ஒருபுறம் முன்னெழுந்தாலும், மறுபுறம் மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே வாழும் மக்கள் வாழ்வில் ஏற்பட்ட நிச்சயமின்மையும், பதற்றமும் பெரிதும் பதிவாகவில்லை.
இந்த ராணுவப் பதற்றம் எல்லையோர மக்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? அவர்களுக்கு ஏற்பட்ட நடைமுறைப் பிரச்சனைகள் என்னென்ன? இருநாட்டுப் பிரச்சனையில் அவர்கள் நிலை என்ன? இந்தக் கேள்விகளை அலசுகிறது களத்தில் இருந்து திரட்டப்பட்ட இந்த செய்திக் கட்டுரை.

லடாக்கில் இந்திய சீனப் படைகளிடையே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த அதே நாளில் மற்றொருபுறம் இப்பகுதியில் வாழும் மக்களிடையே பதற்றம் நிலவியது.
இரண்டு தரப்புக்கும் இடையிலான பிரச்சனை பெரிதானால், லடாக் பகுதி சீனாவின் கட்டுபாட்டிற்குள் சென்ற பிறகுதான் இது முடிவடையும் என்று அப்பகுதி மக்கள் அஞ்சினார்கள்.

அதற்கேற்றாற்போல் மே 5ஆம் தேதி முதல் லடாக்கின் பல பகுதிகளில் இந்திய - சீனப் படைகள் நேருக்கு நேர் மோதும் நிலை ஏற்பட்டது.
இரண்டு நாட்டு படை அதிகாரிகளும் இரு தரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் கிழக்கு லடாக் எல்லை பிரச்சனையை சுமூகமாக தீர்த்துக்கொள்ளத் தயாராக இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை (மே 7) இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியா- சீனா:மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், சீனப்படைகள் பிரச்சனைக்குரிய பகுதியில் பெருமளவு கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளன. தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது என்று தெரிவித்தார்.



இதற்கு முன்பு 'லைன் ஆஃப் ஏக்சுவல் கன்ட்ரோல்' எனப்படும் மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டி இரு படைகளுக்கு இடையே சின்ன சின்ன மோதல்கள் நடந்ததாக செய்திகள் தெரிவித்தன. பாங்காங் ஏரி மற்றும் கல்வான் ஆறு இருக்கும் பகுதிகளில் எல்லை தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இந்த பகுதி கடல் மட்டத்தில் இருந்து 4,350 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதனால் அங்கே கடும் குளிராக இருக்கும்.
இரு நாட்டுப் படையினரும் இங்கு முகாமிட்டிருந்தனர். தங்கள் பகுதியில் எதிர்த் தரப்பு ஊடுருவிவிட்டதாக இரு தரப்புமே புகார்கள் கூறியதாக செய்தி முகமைகள் தெரிவிக்கின்றன.
இந்திய- சீனஎல்லையில் வாழும் மக்கள்
இந்தியா மற்றும் சீனா இடையே நீண்ட எல்லைப் பகுதி உள்ளது. எல்லையில் இருக்கும் பல பகுதிகளை இரு நாடுகளுமே தங்கள் பகுதி என சொந்தம் கொண்டாடுகின்றன.
இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் அளித்த சமீபத்திய நேர்காணலில் இரு நாடுகளும் செய்துகொண்டுள்ள எல்லை வரையறைகள் வேறு வேறாக உள்ளன. மேலும் அடிக்கடி இந்திய- சீன படைகள் நேருக்கு நேர் மோதும் நிலை வரும்போது அமைதியான முறையில் அது கையாளப்பட்டது எனக் கூறியுள்ளார்.
இரு நாடுகளின் எல்லைக்கோடுகள் சரிவர நிர்ணயிக்கப்பட வில்லை. இரு நாடுகளுக்கு இடையில் ஏரிகள், ஆறுகள் மற்றும் பனி மலைகள் உள்ளன. இவை இரு நாடுகளின் ராணுவ வீரர்களைப் பிரிக்கின்றன. ஆனால் இவர்கள் நேருக்கு நேர் மோதும் நிலைகளும் உருவாகின்றன.
இப்போது கிழக்கு லடாக் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்காங் ஏரியில் வந்துள்ள இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சனை, அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு வருங்காலம் பற்றிய கவலை ஏற்படுத்தியுள்ளது.
"இங்கே வாழும் இந்த கிராம மக்களின் நிலையை நினைத்தால் கவலையாக இருந்தது. ஏனென்றால் இந்திய-சீன படைகளுக்கிடையே பிரச்சனை நடந்த இடத்திலிருந்து 2-3 கீலோமீட்டர் தொலைவிலேயே இவர்கள் வசிக்கின்றனர்", என்கிறார் லடாக் தன்னாட்சி மலைப்பகுதி வளர்ச்சிக் குழு உறுப்பினரும் கல்வித் துறையின் செயல் கவுன்சிலருமான கோன்சோங் ஸ்டென்ஸின்.
கடந்த மாதத்திலிருந்து, எல்லைப்பகுதிகளில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் அதிகமாக இருந்தன. பொதுவாக அப்பகுதியில் இந்தோ திபெத் எல்லை போலீஸ் படையினரே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில், 2016ஆம் ஆண்டு இந்திய - சீன ராணுவத்தினர் கூட்டுப் பயிற்சி மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட படம்.
ஆனால் சமீபத்திய பதற்றத்திற்கு பிறகு இந்திய ராணுவத்தினர் அங்கே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

உள்ளூர் மக்களின் அச்சம்

கோன்சோக் ஸ்டென்ஸின் கூற்றுபடி, இந்த பகுதியில் படைகளின் நடவடிக்கை சற்று அதிகமாக உள்ளது. 1962ல் நடந்த இந்திய- சீன போருக்கு பிறகு இது போன்றவற்றை எப்போதும் அந்த மக்கள் பார்த்ததில்லை என்கிறார் அவர்.
அந்த கிராமத்தின் தலைவர் சோனம் ஆங்சுக் கூறுகையில், "நாங்கள் தினமும் 100 முதல் 200 வாகனங்கள் போய்வருவதைப் பார்க்கிறோம். ராணுவ வாகனங்களின் இத்தகைய அசாதாரண போக்கை பார்க்கும் போது எங்களுக்கு அச்சம் ஏற்படுகிறது", என்றார்.
"இதற்கு முன்பும் இந்திய - சீனப் படைகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அப்போதெல்லாம் இப்படிப்பட்ட அசாதாரண சூழ்நிலை இருந்ததில்லை", எனவும் கூறினார்.
பைங்காங் மற்றும் ஃபோப்ராங் ஊராட்சித் தலைவராக இருக்கிறார் ஆங்சுக். இந்த ஊர்கள் மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு மிக அருகில் உள்ளன.
கிழக்கு லடாக் எல்லையோர கிராமங்களுக்கு உள்ளூர் சபை உறுப்பினரான ஜம்யாங் சேரிங் நம்க்யால் சபை உறுப்பினர் குழுவுடன் வந்தார்.
தங்கஸ்தே தொகுதி உறுப்பினரான தஷி யாக்ஸியும் இந்த குழுவில் ஒரு நபர்.
"பைகாங்க் ஏரியின் மற்றொரு கரையில் இருக்கிறது மனேராக் கிராமம். எல்லைப்பகுதி மூடப்பட்டால் ஏற்படும் சிரமங்கள் குறித்த அச்சத்தில் இருந்தார்கள் அந்த கிராம மக்கள்", என அவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.


படத்தின் காப்புரிமை Str
"தினசரி வேலைகள் நடந்து கொண்டிருந்தாலும் மக்களின் வாழ்வில் இதன் விளைவுகளை பார்க்க முடிகிறது. முதலில் கொரோனா வைரஸ், தற்போது சீனப் படையெடுப்பு என ஆங்காங்கே பேசப்படுகிறது. தினசரி வாழ்க்கை போய்க்கொண்டிருந்தாலும் மக்கள் மனதில் இதைப் பற்றிய பயம் இருக்கத்தான் செய்கிறது", என அவர் கூறினார்.

புல்வெளியை கைப்பற்றிய சீனா

கல்வான் பள்ளத்தாக்கில், மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் வாழும் பெரும்பாலான மக்கள் நாடோடிகள். கால்நடைகளை சார்ந்தே அவர்கள் வாழ்கின்றனர்.
லடாக் பகுதியை பனிப் பாலைவனம் என்று கூறுவர். அங்கே சாதாரண நாட்களிலேயே கால்நடைகளை மேய்க்க புல்வெளி தேடுவது சிரமம். அப்படியிருக்க இந்த கால்நடைகள் நம்பியிருக்கும் புல்வெளியில்தான் இரு நாடுகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
சீனர்கள் இந்த புல்வெளியை ஒவ்வொரு ஆண்டும் கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றி கொண்டே உள்ளதால் தங்கள் கால்நடைகள் மேய்வதற்கான புல்வெளி சுருங்கி கொண்டே போகிறது என அந்த மக்கள் கவலையில் உள்ளனர்.
"எங்கள் புல்வெளியில் நிறைய பகுதியை சீனர்கள் கைப்பற்றி விட்டனர். மீதம் இருக்கும் புல்வெளியை அவர்கள் கைப்பற்றி விடுவார்களோ என்ற அச்சம் இருக்கிறது. அவ்வாறு கால்நடைகளுக்குத் தேவையான புல்வெளி முழுவதையும் அவர்கள் கைப்பற்றிவிட்டால் எங்கள் வாழ்வாதாரமே பாதிக்கும். மேலும் இங்கு வாழ வேறு எந்த காரணமும் இல்லாமல் போகும்", என்கிறார் கோன்சோக் ஸ்டெஸின்.
"இதற்கு முன்னால் அங்குலம் அங்குலமாக, ஒவ்வொரு அடியாக கைப்பற்றி கொண்டிருந்தவர்கள் தற்போது கிலோமீட்டர் கணக்கில் கைப்பற்றத் தொடங்கியுள்ளனர்.இதனால் இங்கு வாழ்வது சிரமமாகிவிட்டது", என கோர்ஸாக் பகுதி கவுன்சிலரான குர்மேட் டோர்ஜி கூறியுள்ளார்.
"எங்கள் மாடுகள், குதிரைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவோம். ஆனால் அவை திரும்பி வராது. அவைகளை தேடி நாங்களும் செல்ல முடியாது", என்கிறார் சுமுர் கிராமத் தலைவர் பத்மா இஷே. 2014ல் கிட்டத்தட்ட 15 குதிரைகள் காணாமல் போயுள்ளன.
இங்கே நிலப்பகுதி ஏதும் கைப்பற்றப்படவில்லை என்கிறது பாதுகாப்பு அமைச்சகம். ஏதும் கைப்பற்ற பட வில்லை. ஏனென்றால் இந்தியா - சீனா இடையே எல்லை நிர்ணயிக்கப்படவில்லை.
புல்வெளி சுருங்கி வருவது உண்மைதான் என்கிறார் பாதுகாப்பு அமைச்சகத்தில் இருக்கும் ஒருவர்,


படத்தின் காப்புரிமை AAMIR PEERZADA / BBC
ஆனால் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க இந்தியாவும் சீனாவும் தங்கள் பகுதிகளை பாதுகாத்துக் கொள்கின்றன என்கிறார்கள் அதிகாரிகள்.

ஒரு தொலைபேசி அழைப்புக்கு 70 கிலோமீட்டர் பயணம்

இந்த பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவை கிடைப்பது கடினமான ஒன்று. தூரத்தில் இருக்கும் சில இடங்களில் பிஎஸ்என்எல் சேவை மட்டும் கிடைக்கும். ஆனால் கடந்த வாரம் அதுவும் துண்டிக்கப்படவே , மக்கள் மனதில் அச்சம் ஏற்பட்டது.
எல்லையோரப் பகுதிகளில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் முதலில் வெளி உலகை தொடர்பு கொள்ள முடியாதபடி தொலைத்தொடர்பு சேவையை துண்டிப்பார்கள். இது எங்களுக்கு ஒரு சிரமம். எங்கள் பகுதியில் மட்டும்தான் பிஎஸ்என்எல் சேவை கிடைக்கும். இது 6 வருடத்திற்கு முன்னர் தொடங்கப்பட்டது என்கிறார் சோனம் ஆங்சுக்.
நியோமா மற்றும் துர்பக் பகுதியில் மே12 அன்று தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டது, பின்னர் நிர்வாகத்திடம் புகார் செய்தவுடன் மே 15 அன்று மீண்டும் இணைப்பு கொடுக்கப்பட்டது. பின்னர் ஜூன் 3 அன்று சேவை துண்டிக்கப்பட்டது என்கிறார் உள்ளூர் கவுன்சிலர் தாஷி யாக்ஸி.
லடாக் எல்லைப் பகுதியில் செல்ஃபோன் சேவை மிக குறைவாகவே வந்துள்ளது. கடந்த சில வருடங்களாக பிஎஸ்என்எல் நிறுவனம் கிராமங்களுக்கு தொலைத்தொடர்பு சேவையை கொண்டு சேர்க்கிறது. ஆனால் உலகத்தோடு இந்த எல்லைப்பகுதிகளை இணைக்க முடியவில்லை.
எங்களிடம் தொலைத்தொடர்பு சாதனம் இல்லை. அப்படியிருந்தாலும் நாங்கள் எப்படி தொடர்பு கொள்ள முடியும். ஒரு அழைப்புக்காக 70 கிலோமீட்டர் தொலைவில் கோர்ஸோகுக்கு செல்ல வேண்டியிருக்கும். சில நேரங்களில் அங்கும் தொடர்பு கிடைக்காது என பத்மா இஷே கூறுகிறார்.




இந்திய - சீன எல்லை பேச்சுவார்த்தை: பின்வாங்கும் இருநாட்டு ராணுவங்கள்
மேலும் அவர், கடந்த வருடம் வரை எங்களிடம் டிஜிட்டல் சேட்டலைட் ஃபோன் டெர்மினல் எனப்படும் டிஎஸ்பிடி இருந்தது. ஆனால் அதுவும் சமீபத்திய மோதலால் மூடப்பட்டுவிட்டது. கடும் குளிரின்போது நாங்கள் செயற்கைகோள் தொலைபேசியை பயன்படுத்துவோம். ஆனால் அதற்கு மிகவும் அதிகம் செலவு ஆனதால் மூடப்பட்டது என்றார்.

இந்திய ராணுவத்தின் மீதான மக்களின் பார்வை

எப்போதெல்லாம் இந்த பகுதியில் பதற்றம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் உதவி செய்வதில் இந்திய ராணுவம் முன்னால் இருக்கும் என்கின்றனர் உள்ளூர் மக்கள்.
1962ன் போரின்போது நாடோடிகளான நாங்கள்தான் இரண்டாவது வழிகாட்டிப் படையாக இருந்தோம் என கோன்சோக் கூறுகிறார்.
"ராணுவ வீரர்களுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில், நாங்கள் அவர்களுக்கு உதவுவோம். காயமடைந்த வீரர்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வோம். அவர்களுக்கு உணவு அளிப்போம்", என்கிறார் சோனம் ஆங்சுக்.
உள்ளூர் மக்கள் தேவைப்படும் நேரத்தில் உதவ முன் வருவர் என்கிறார் கோன்சோக்.
"ராணுவத்துடன் கிராமத் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பங்கேற்ற ஓர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஆட்கள், வண்டிகள் மற்றும் பிற பொருட்கள் தேவைப்பட்டாலும் நாங்கள் உதவ தயாராக இருப்பதாக ராணுவத்திடம் தெரிவித்தோம்", என அவர் கூறினார்.
லடாக் பகுதியில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது மிகவும் கடினம். மலையின் உயரத்தில் வண்டிகள் செல்வது முடியாத விஷயம். ஆனால் உள்ளூர் மக்கள் அங்கே செல்ல பல வழிகளைக் கையாள்வார்கள்.
ஆனால் இந்த முறை அவர்கள் மிகவும் அச்சம் கொண்டுள்ளனர். எனென்றால் தொடர்புக்கான சாதனம் எதுவும் அவர்களிடம் இல்லை.
இதற்கு முன்பும் பலமுறை இப்பகுதியில் இந்தியா சீனா இடையே பதற்றம் ஏற்பட்டதுண்டு. ஆனால், அதெல்லாம் இந்த முறை சென்றது போல மிக நீண்டு சென்றதில்லை.
கொரோனா பிரச்சனை காரணமாக இந்தமுறை சீனா மீது இப்பகுதியில் கோபம் பெருகியுள்ளது. கால்நடைகளை சார்ந்து வாழும் உள்ளூர் மக்களுக்கு இது வாழ்வியல் பிரச்சனையும் ஆகும்


  • கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக