செவ்வாய், 23 ஜூன், 2020

பிரதமர் இந்திரா காந்தி ஜே ஆர் ஜெயவர்தனாவோடு பல மணித்தியாலங்கள் ஆலோசனை .. இலங்கை - இந்தியா ஒப்பந்தம் வந்த வரலாறு .. 7

திரு.அ. அமிர்தலிங்கம : உலக நாடுகளில் இலங்கைத் தமிழர் பிரச்சனை:
நாம் டெல்லி திரும்பியபோது மேற்கு நாடுகளுக்குச் சென்று இலங்கையில் நடக்கும் இனக்கொலையை நாம் விளக்க வேண்டுமென்று திருமதி காந்தி கூறிய ஆலோசனையை ஏற்று, நான் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நோர்வே, அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளுக்குச் சென்றேன்.
அந்த நாடுகளின் வெளிநாட்டு அமைச்சுகளோடு, அரசியல் தலைவர்களோடு உரையாடினோம். ஐ. நா. சபைக்குத் திருமதி காந்தி சென்றிருந்தார். அங்கு எல்லா நாட்டுத் தலைவர்களோடும் எமது பிரச்சனையை அவர் எடுத்துப் பேசினார்.
அவருடன் ஐ. நா. சபைக்குச் சென்றிருந்த திரு.பார்த்தசாரதியின் அழைப்பின் பேரில் நானும் நியூயோர்க்கில் அவர்களோடு சேர்ந்தேன்,
இந்தியத் தூதுக் குழுவில் இடம் பெற்றிருந்த தமிழ் நாட்டு அமைச்சர் திரு. எஸ். இராமச்சந்திரன் ஐ.நா. சபையில் எமது நிலையை எடுத்து விளக்கினார். இந்த நாலு ஆண்டுகளில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் எத்தனை நாடுகளுக்கு எத்தனை பயணங்களை மேற்கொண்டு அரசியல் தலைவர்களோடு, பத்திரிகை, வானொலி, தொலைகாட்சி ஆகிய மக்கள் தொடர்புச் சாதனங்களோடு, மனித உரிமை இயக்கங்களோடு தொடர்பு கொண்டனர். பல்கலைக்கழகங்கள் கருத்தரங்குகள், மாநாடுகள் ஆகியவற்றில் எத்தனை தடவை உரையாற்றினர் என்பதை உணர்ந்தால் எமது மக்கள் துன்பப்பட நாம் உறங்கிக் கொண்டிருந்தோம் என்று எவராவது
கூறத்துணிவார்களா?

எமது குரல் கேட்காத நாடில்லை.
எமது செய்திகளைத் தாங்காத பத்திரிகைகள் இல்லை,
என்று கூறக்கூடிய அளவுக்கு எமது துன்பம் தீர்க்க உலக நாடுகளின் ஆதரவைப் பெற முயன்றோம். நாம் மட்டும்தான் இத்துறையில் உழைத்தோம் என்று நான் கூறவில்லை. வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம் மக்கள் பலர் இத்துறையில் பெருமுயற்சி செய்தனர். எம்மை அழைத்து தம் நாட்டு அரசுகளோடு உரையாடச் செய்தனர்.

1985-ம் ஆண்டு என்னை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்திருந்த தமிழ்ச் சங்கத்தலைவர் பேராசிரியர் சி. ஜே. எலியசர் கூறினார்.
இதுவரை எமக்குத் திறவாத பல கதவுகள் நீங்கள் வந்தபின் திறந்தன, என்று, தமிழில் மாத்திரம் பிரசுரங்களை வெளியிட்டு, நம்மவர்கள் மத்தியில் அவற்றை நாம் பரப்ப வில்லை. அந்நிய அரசுகளோடு, வெளி நாட்டு நிறுவனங்களோடுதான் எமது பிரச்சாரம் அவசியமென்று நாம் கருதினோம். இந்த நோக்கத்தோடு நாம் வெளியிட்ட பிரசுரங்களும் ஆங்கிலத்திலேயே அமைந்தன.


அட்டவணை 'இ' (ANNEXURE 'C')

ஐ. நா. சபையிலிருந்து திரும்பிய திரு. பார்த்தசாரதி மீண்டும் கொழும்பு சென்றார். திரு. ஜயவர்த்தனாவை சற்று இளக வைத்தார். எம்மை டெல்லி திரும்புமாறு அழைத்தார்.
பொதுநல நாடுகளின் ஆட்சித் தலைவர்களின் மகாநாட்டுக்கு டெல்லி வந்த திரு. ஜயவர்த்தனாவோடு திரு. பார்த்தசாரதியும் திருமதி. இந்திராகாந்தியும் பல தடவை பேசினர். நம் எல்லோருடனும் பல மணித்தியாலங்கள் ஆலோசனை நடத்தினர்.
இறுதியில் 1983 டிசெம்பர் 1-ந் திகதி காலை 8.30 மணிக்கு சப்தார் ஜங்றோட்டிலுள்ள தமது வீட்டிற்கு எம்மை அழைத்த பாரதப் பிரதமர் கூறினார்:
 ''இந்தத் திட்டத்தை சர்வகட்சிக் கூட்டத்தில் தான் எப்படியாவது ஏற்கச்செய்து. நடைமுறைப் படுத்துவதாக ஜயவர்த்தனா எனக்கு உறுதி  தந்திருக்கிறார். வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பை நீங்கள் சர்வகட்சிக் கூட்டத்தின் முன் வைத்து வாதாடினால் தான் எதிர்க்கப் போவதில்லை என்றும், அங்கு ஏற்றுக்கொள்ளப்படும்
சூழ்நிலை வந்தால் தானும் ஏற்றுக்கொள்வதாகவும் சொல்கிறார். என் சொல்லை ஏற்று அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை
நீங்கள் கொடுக்க வேண்டும். சர்வகட்சிக் கூட்டத்திற்குச் செல்ல வேண்டும்" என்ற திருமதி காந்தியின் இந்த வேண்டுகோளுக்கு இணங்கி நாம் சர்வகட்சிக் கூட்டத்திற்குக் கொழும்பு சென்றோம்.
தான் ஏற்ற அட்டவணை 'இ''யை, நடைமுறைப்படுத்துவேன் என்று பாரதப் பிரதமருக்கு வாக்குறுதி தந்த பத்திரத்தைப் புத்தமத குருமாரும், தன் சொந்தப் பிரதமரும் எதிர்த்தபோது திரு.ஜெயவர்த்தனா அதைக் காற்றில் பறக்கவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக