வெள்ளி, 19 ஜூன், 2020

இந்திய மாநிலங்களுக்கு இணையான அதிகாரம் .... இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு - 6

   அமரர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் :
16-ந் திகதி டெல்லியில் 200-க்கும் மேற்பட்ட அகில உலக
அமரர் .நீலன் திருச்செல்வம்
பத்திரிகையாளர்களை கொண்ட ஒரு மகாநாடு கூட்டப் பட்டது. பல மணித்தியாலங்கள் அவர்கள் கேள்விகளுக்கெல்லாம் விடையளித்து எமது பிரச்சனையையும், அதற்கான பரிகாரத்தையும் பாரறியச் செய்ய ஒரு வாய்ப்பை இந்திய அரசே ஏற்படுத்தி கொடுத்தத. அப்பத்திரிகையாளர் மகாநாட்டுக்கு டாக்டர். நீலன் திருச்செல்வம் தலைமை தாங்கினார். அதே தினம் ராஜ்யசபையில் திருமதி இந்திரா காந்தி பேசும்போது இலங்கையில் இனக்கொலை (Genocide) நடப்பதாகக் கூறி உலகின் முன் இலங்கையை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினார். டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய அன்றே கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் திரு. ராஜாராம் தலைமையில் நான் ஆற்றிய உரை பொதுநல நாடுகளின் பாராளுமன்றக் குழுக்கள் எல்லாவற்றிற்கும், தமிழ்நாடு சட்டமன்ற குழுவின் சார்பில் அதன் தலைவர் என்ற முறையில், திரு. ராஜாராம் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டது. இப்படியே உலக நாடுகளுக்கெல்லாம் எம் நிலையை விளக்க நாம் எடுத்த முயற்சி, மக்கள் துன்பப்பட ஓடிப் பதுங்கும் செயலா, அல்லது துன்பம் துடைக்க இந்திய உதவியை, அதற்கு உலகின் ஆதரவை திரட்டும் முயற்சியா? என்பதை நம்மக்கள் நிச்சயம் அறிந்தே இருக்கின்றனர்.
பார்த்தசாரதி தூது:
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு ஓர் நிரந்தரத் தீர்வு காண்பதற்கு தன் நல்லெண்ணச்சேவையை வழங்க முன்வந்த திருமதி, இந்திராகாந்தி தாமதமின்றி அதற்குச் செயலுருக் கொடுத்தார். பழுத்தராஜதந்திரியான திரு. ஜி. பார்த்தசாரதி அவர்களை 1983 ஆகஸ்ட் 25-ந் திகதி கொழும்புக்கு அனுப்பினார். அவர் அங்கு சென்ற அடுத்த நாள் நாமும் கொழும்பு செல்ல வேண்டுமென்று பாரதப் பிரதமர் கேட்டுக் கொண்டார். நானும் திரு. சம்பந்தனும் சென்னையிலிருந்து செல்ல யாழ்பாணத்திலிருந்து தலைவர் திரு. மு. சிவசிதம்பரமும், வவுனியா, கிளிநொச்சி ஆகிய இடங்களிலிருந்து திரு. தா. சிவசிதம்பரம், திரு. ஆனந்த சங்கரி ஆகியோரும் கொழும்பு வந்து சேர்ந்தனர்.
கொழும்பிலிருந்த டாக்டர். நீலன் திருச்செல்வமும் சேர்ந்து, எம் எல்லோருடனும் பல மணித்தியாலங்கள் திரு. பார்த்தசாரதி விவாதித்தபின் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டது. இலங்கை, இந்தியாவைப் போன்ற பல மாநிலங்களைக் கொண்ட ஓர் ஐக்கிய ராஜ்ஜியமாக வேண்டு மென்றும் அதில் இந்திய மாநிலம் ஒன்றிற்கு இருக்கும் அதிகாரங்களைக் கொண்ட ஒரு தமிழ் மொழிவாரி மாநிலம் வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைத்து ஆக்கப்பட வேண்டுமென்றும், அந்த அதிகாரங்களை வரையறுத்துக் குறிப்பிட்டு அப்பத்திரம் தயாரிக்கப்பட்டது. சுதந்திரத் தமிழ் ஈழத்திற்குக் குறைந்த கோரிக்கையை நாம் முன்வைக்க முடியாதென்பதை நாம் தெளிவுபடுத்தினோம்.

அப்பத்திரம் எமது கருத்தாக இலங்கை அரசுக்குக் கொடுக்கப்படமாட்டாது, என்றும் அக்கருத்துக்களுக்கு யாரும் பொறுப்பேற்கத் தேவையில்லாத பத்திரம் (Non paper) என்றும் திரு. பார்த்தசாரதி விளக்கினார்.
நாலு ஆண்டுகளுக்கு முன் இந்திய சமாதான முயற்சியின் முதல் நடவடிக்கையாக அவர் தயாரித்த பத்திரத்தில் கூறிய திட்டமே இன்று இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையாக இருக்கிறது. ஆனால் அன்று இலங்கை அரசு அத்திட்டத்திற்கு வெகு தொலைவில் நின்றது. தமது முதல் முயற்சியில் தோல்வி கண்டு திரு. பார்த்தசாரதி இந்தியா திரும்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக