வியாழன், 11 ஜூன், 2020

திருவோடு மரம் - 2 . Calabash . இருமல் தொட்டு கான்சர் வரைக்கும் சர்வ ரோக நிவாரணியாக

Farm to Table -Rubasangary Veerasingam Gnanasangary :
திருவோடு மரம் - 2 Calabash Tree -  (சிங்களத்தில் Rum Gasa)
Calabash என்பது உண்மையில் சுரக்காய் ஆகும். Qar`ah yābisah (காய்ந்த காய்) என்னும் அரபு சொல்லில் இருந்தோ அல்லது karbuz (water melon - தர்பூசணி) என்னும் பாரசீக சொல்லில் இருந்தோ "Calabash" என்னும் சொல் வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஸ்பானிய மொழியில் சுரக்காயை "calabaza de botella" என்றே அழைக்கப்படுகிறது. Botella என்பது போத்தல்தான். லத்தீன் சொல் ஒன்றில் இருந்து மருவி பிரெஞ்சுக்கு வந்து பின்னர் ஆங்கிலத்தில் Bottle ஆகி தமிழில் போத்தல் ஆகியது. அமெரிக்க கண்டங்களில் புதிதாக கண்ட பூசணிக்காயையும் இந்த திருவோடு மரத்தையும் அதே பெயர் கொண்டே அழைத்தனர். பூசணியை "Calabaza" என்றும் இந்த மரத்தை árbol de calabaza (மர பூசணி) என்றும் அழைத்தனர்.
(எது உண்மையான பூசணி என்பதில் தமிழிலும் குழப்பம் உண்டு, அதை வேறு ஒரு பதிவில் பார்க்களாம்)

கலபாஷ் (Crescentia cujete) மரமானது மெக்சிக்கோ உட்பட மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் வெப்பமண்டலத்தை பூர்வீகமாகக் கொண்டது. கொய்யா மரங்கள் போன்று நடுத்தர வளர்ச்சி கொண்ட ஒரு மரமாகும். பூக்களை இரவு வேளைகளில் வெளவால் மகரந்த சேர்க்கை செய்யும். Basket Ball அளவுக்கு காய்கள் காய்க்கும்.
இதன் பழங்கள் சாப்பிடவே முடியாதளவுக்கு விரும்பத்தகாத சுவையைக் கொண்டது. நன்கு முற்றிய விளாங்காயையும் இறுமல் மருந்தையும் ஒன்றாக உட்கொண்டது போன்ற ஒரு ரெண்டும் சேர்ந்த கலவை. இது நச்சுத் தன்மையும் அதிக மருத்துவ குணங்களையும் கொண்டது. இதன் சதைகளை அவிப்பது கட்டாயமாகும்.
இந்த மரங்களை ஸ்பானியர்களும் போர்த்துக்கேயர்களும் பல்வேறு நாடுகளுக்கு அறிமுகப்படுத்தி உள்ளனர். கரீபியன் நாடுகள் எங்கும் இவற்றைக் காணலாம். அழகு செடியாக விரும்பி வளர்க்கப்படும் இந்த மரங்களை பிலிப்பீன்சில் சர்வ சாதாரணாமாக எங்கும் காண முடியும். இதை Miracle Tree என்றே அழைப்பார்கள். இதன் சாற்றை போத்தல்களில் அடைத்து இருமல் தொட்டு கான்சர் வரைக்கும் சர்வ ரோக நிவாரணியாக விற்பனை செய்கிறார்கள்.

பல்வேறு நாடுகளிலும் இதன் காய்கள், இலைகள் மற்றும் பட்டைகளை நாட்டு வைத்தியமாக பயன்படுத்தி வருகின்றனர். கருக்கலைகவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.. சுகப்பிரசவத்துக்கும் பயன்படுத்தி உள்ளார்கள். ஆனால் உண்மையிலேயே இந்தப் பழமானது கால் நடைகளுக்குக்கூட கருச்சிதைவு ஏற்படுத்த வல்லது.
மேலும் இந்த பழத்தின் ஓடுகளில் இருந்து இசைக்கருவிகள் தொட்டு உணவருந்தும் பாத்திரங்கள் கரண்டிகள் வரை தயாரித்துப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஜமேக்காவில் இயற்கை சார்ந்து வாழுதலை குறிக்கோளாக கடைப்பிடிக்கும் ரஸ்தாபாரி மதக் குழுவினர் மத்தியில் இதன் பாவனை அதிகமாகக் காணப்படுகிறது.
இதற்கு தமிழில் திருவோடு மரம் என்று பெயர்வரக் காரணமே சுரக்காய் போன்றே இதிலிருந்தும் சட்டிமுட்டிகள் பாத்திரங்கள் தாயாரிக்கப் படுவதானாலேயே. சிலர் நினைப்பது போன்று இதிலிருந்து எடுக்கப்படும் பாத்திரத்துக்கும் சங்ககால பிச்சை பாத்திரத்துக்கும் சம்பந்தம் இல்லை. தமிழ் நாட்டில் சிலர் பக்தி பெருக்கெடுத்து இந்த மரத்தை ஒரு அதிசய மரமாக கருதி இதனை தரிசிக்க செல்வதும் நடை பெறுகிறது.

திருவோட்டு மரம் -1

The world’s largest seed
இரு வெவ்வேறான மரங்கள் ஆனால் தமிழில் ஒரே பெயர் மற்றும் அதனால் வரும் குழப்பங்கள்.
Lodoicea (double coconut)
கடல்தென்னை (திருவோடு மரம்)
தமிழில் திருவோடு மரம் என்று இரு வெவ்வேறு மரங்களை அழைக்கிறார்கள். அவை பற்றிய தகவல்கள் படங்கள் என்று அதிகமாகவுள்ளதால் தனித்தனியே பதிவிடவேண்டியுள்ளது.
கடல்தென்னையில் ஆண் பெண் மரங்கள் என்று தனித்தனியே உண்டு. இருபது கிலோவரை எடையைக் கொண்ட இதன் விதைகளே உலகின் பெரியதும் கனமானதுமான விதையாகும். பத்து மீட்டர்கள் வரை நீளமாக வளரக்கூடிய இதன் இலைகளே உலகிலேயே மிகவும் நீளமான இலையுமாகும். விதைகள் முளைவிட இரெண்டு வருடங்கள்வரை எடுக்கும். வருடம் ஒன்றுக்கு மூன்று தொட்டு நான்கு இலைகளே விடும். காய்ப்பதற்கு இருபத்தைந்து வருடங்களும், காய்கள் முற்றுவதற்கு ஏழு வருடங்களும் தேவை.
கடலுள் விழும் காய்கள் மிதப்பதில்லை. கடலின் நீரோட்டத்தால் இழுத்துச் செல்லப்படுகிறது. நீண்ட காலத்துக்குப்பின்னர் பொச்சுமட்டை உக்கி விதை முளைவிடும் தருவாயில் கடலின்மேல் மிதக்க ஆரம்பிக்கிறது. அதை அவதானித்த கடலோடிகள் இதனுடைய மரம் கடலடியில் உள்ளது என்று நம்பினார்கள். அதனாலேயே பிரெஞ்சில் “coco de mer” (கடல் தேங்காய்) என்கின்ற பெயர் உருவானது.
இதற்கு மாலைதீவுத் தேங்காய் என்றும் பெயருண்டு. Lodoicea maldivica என்பதே அதன் விஞ்ஞான பெயர் ஆகும். பல நூற்றாண்டுகளாக செசெல்ஸ் தீவுகளில் இருந்து இந்து சமுத்திரத்தை சூழ்ந்துள்ள நாடுகளுக்கு இதன் விதைகள் இழுத்துச் செல்லப்பட்டிருந்தாலும் மாலைதீவிலேயே அதிகமாக கரை ஒதுங்கியுள்ளது. மாலைதீவைத் தாண்டி இதன் விதைகள் கடல் நிரோட்டத்தால் இழுத்துச் சென்றிருக்க முடியாது என்கின்ற ஒரு வாதமும் உண்டு.
நீண்டகாலமாக இது ஒரு விலை உயர்ந்த வர்த்தகப் பொருளாக இருந்து வந்துள்ளது. ஆனால், அதன் தாய்மரத்தை யாருமே பார்த்தது இல்லை. 1768 இல் செசெல்ஸ் நாட்டின் Praslin தீவில் வைத்து Barre என்பவரே இதுதான் அந்த விதைகளின் தாய்மரம் என்று சரியாக அடையாளம் கண்டார்.
தேங்காய் போன்று இதனையும் சமையலுக்கு பயன்படுத்த முடியுமாயினும் இதனுடைய சிரட்டைகள் மிகவும் உறுதியானவை. அதுமாத்திரம் அல்லாது இது ஒரு அரியவகை பொருளாக இருப்பதால் இதன் விலை மிகவும் அதிகம். இதன் சிரட்டையில் இருந்து விலை உயர்ந்த பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக மன்னர்கள் அதிக விலைகொடுத்து வாங்கியுள்ளனர். புராணக் கதைகளில் வரும் திருவோடும் இதனைக்கொண்டே தயாரிக்கப் பட்டதாக சிலர் எழுதிவருகின்றனர். ஆனால் அவர்களுக்கே சரியான விளக்கம் இருந்ததாக தெரியவில்லை. இஸ்லாமிய ஆன்மீக குழுவான சூபிக்களின் துறவிகள் உண்மையிலேயே பிச்சைப் பாத்திரமாக பயன்படுத்தி வந்ததற்கான ஆதாரங்கள் தாராளமாக உண்டு.
கடல்தென்னையையும் அதன் விதையையும் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு தடவை Royal Botanic Gardens (London, Kew) இல் பார்க்க முடிந்தது. பத்துக்கு மேற்பட்ட மரங்களை இலங்கை பேராதனை தாவரவியற் பூங்காவிலும் காணமுடியும்.
படம் : face2faceafrica.கொம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக