செவ்வாய், 9 ஜூன், 2020

சென்னை கூடுதலாக 1,500 படுக்கைகள்.. அரசு மருத்துவமனைகளில்

தினமலர் : சென்னையில் உள்ள,அரசு மருத்துவமனைகளில், கொரோனா
பிரிவுகளில், நோயாளிகள் கூட்டம் நிரம்பி வருவதால்,கூடுதலாக,1,500 படுக்கை வசதிகளை, மருத்துவமனைகள் ஏற்படுத்தி வருகின்றன.
சென்னையில், கொரோனாவால், 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்த நிலையில், 11 ஆயிரம் பேர் வரை சிகிச்சையில் உள்ளனர். இதில், கொரோனா முதல் நிலை பாதிப்புடைய, ஆபத்தில்லாத நோயாளிகள், 5,000க்கும் மேற்பட்டோர், கொரோனா தடுப்பு சிறப்பு மையங்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.நாள்பட்ட நோயாளிகள், முதியவர்கள் என, 6,000க்கும் மேற்பட்டோர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.

அதன்படி, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சைக்கு, 1,000 படுக்கை வசதிகள் உள்ளன; இவை நிரம்பியுள்ளன. ஸ்டான்லி, ஓமந்துாரார் அரசு மருத்துவமனைகளில் உள்ள, தலா, 500 படுக்கை வசதிகளும் நிரம்பியுள்ளன.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், 405 படுக்கை வசதிகளும் நிரம்பியுள்ளன.
அயனாவரம், இ.எஸ்.ஐ., மற்றும் கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில், 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


எழும்பூர் அரசு மகப்பேறு, திருவல்லிக்கேணி கஸ்துாரிபா,ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம்., ஆகிய, அரசு மகப்பேறு மருத்துவமனைகளில், 150க்கும் மேற்பட்ட கர்ப்பிணியர் மற்றும் பிரசவித்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சென்னையில் உள்ள, தனியார் மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சை பிரிவில், 1,435 படுக்கை வசதிகள் உள்ளன. இதில், 600க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்நிலையில், வரும், 15 நாட்களில், கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் என, சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

உத்தரவு


தற்போதே, சென்னையில் உள்ள, நான்கு பிரதான அரசு மருத்துவமனைகளும் நிரம்பி வரும் நிலையில், கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த, சுகாதாரத் துறை, மருத்துவமனை டீன்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதில், அவசர சிகிச்சை அல்லாத, பிற துறை கட்டடங்களையும், கொரோனா வார்டாக மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, தற்போது, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் மொத்தமாக, 3,000 படுக்கை வசதிகள் உள்ளன. அதில், அவசர சிகிச்சை அல்லாத பிரிவுகளை, கொரோனா சிகிச்சை பிரிவாக மாற்றி, கூடுதலாக, 500 படுக்கை வசதி ஏற்படுத்த, மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், 900 படுக்கை வசதிகள், கூடுதலாக ஏற்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
எழும்பூர் மற்றும் கஸ்துாரிபா காந்தி அரசு மருத்துவமனைகளில், 100 படுக்கை வசதி என, மொத்தம், 1,500 படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் உட்பட, சென்னையில் உள்ள, 70 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைத்து, படுக்கை வசதிகளை அதிகப்படுத்துவதற்கான முயற்சியிலும், சுகாதாரத் துறை ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி:
சென்னை அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா தடுப்பு மையங்களில், 5,000 படுக்கை வசதிகள் உள்ளன. மேலும், மாநகராட்சி கொரோனா தடுப்பு மையங்களில், 17 ஆயிரத்து, 500 படுக்கை வசதிகள் உள்ளன. சென்னையில் உள்ள, 70 தனியார் மருத்துவமனைகளும் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.

அந்த மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகளை, இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க, போதிய அளவில் படுக்கை வசதிகள் உள்ள நிலையில், பேரிடர் காலங்களில், தவறான தகவல்கள் பகிரப்படுகின்றன.
அதுபோன்ற தகவலை பதிவிட்ட, நடிகர் வரதராஜன் மீது, தொற்று நோய் தடுப்பு சட்டப்படி, நடவடிக்கை எடுக்கப்படும். அவர், சுகாதாரத்துறை செயலர், உயர் அதிகாரிகளை தொடர்பு கொள்ளாமல், குற்றம் சாட்டியுள்ளார்.

தடுப்பு மருந்து, தடுப்பூசி இல்லாத தொற்றால் பாதிக்கப்பட்டர்களில், 56 சதவீதம் பேரை குணப்படுத்தியுள்ளோம். எந்த பாதிப்பும், இறப்புகளும் மறைக்கப்படவில்லை. வெளிப்படையாக தெரிவித்து வருகிறோம்.கொரோனா பாதிப்பு துவங்கியதில் இருந்து, டாக்டர்கள், நர்ஸ்கள், அதிகாரிகள் குடும்பத்தை பார்க்காமல், இரவு, பகலாக மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர்.
அவர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வேண்டாம்; ஆதாரமற்ற விமர்சனங்களை தெரிவிக்காமல் இருந்தால் போதும்.அரசிடம், 3,520, 'வென்டிலேட்டர்' வசதிகள் உள்ளன. தற்போது, ஆறு கொரோனா நோயாளிகள் மட்டுமே, வென்டிலேட்டர் பயன்படுத்த கூடிய நிலையில் உள்ளனர்.
எனவே, ஆதாரமற்ற தகவல்களை பதிவிட்டு சந்தோஷப்படும் நேரமில்லை.
இனிவரும் காலங்கள் குறித்து, சுகாதாரத் துறை நிபுணர்களின் எச்சரிக்கையை எதிர்கொள்ளும் வகையில், அரசு தயார்படுத்தி வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.


கொரோனாவுக்கு சிகிச்சை இல்லையா?


தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும், காமெடி நடிகருமான வரதராஜன், கொரோனா குறித்து பேசிய, வீடியோ பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது.அதில், அவர் கூறியுள்ளதாவது:குடும்பத்திற்கு மிகவும் நெருங்கிய நண்பர், திடீரென இரண்டு நாள் காய்ச்சல், மூச்சு திணறலால் அவதிப்பட்டார். பரிசோதித்ததில், கொரோனா உறுதியானது. ஆனால், சென்னையில், எந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனையிலும், அனுமதிக்க மறுத்து விட்டனர். படுக்கை வசதி இல்லை எனக் கூறி விட்டனர்.

பிரமாண்ட நம்பிக்கையில், யாரும் வெளியே சுற்ற வேண்டாம். அவசியத்திற்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும். முககவசம் அணிந்து செல்லுங்கள். ரொம்ப அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வெளியே செல்லுங்கள்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.இதற்கிடையே, மீண்டும் ஒரு பதிவு வெளியிட்ட அவர், 'நண்பருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நண்பர்கள் குழுவில் பதிவிட்ட பதிவு, மற்ற குழுக்களில் பகிரப்பட்டது' என, விளக்கம் அளித்துள்ளார். - நமது நிருப

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக