திங்கள், 15 ஜூன், 2020

12 நாள் ஊரடங்கு; எதற்கு அனுமதி, எதற்கு விலக்கு?

12 நாள் ஊரடங்கு; எதற்கு அனுமதி, எதற்கு விலக்கு?மின்னம்பலம் : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட 12 நாள் ஊரடங்கில் எந்தெந்த செயல்பாடுகளுக்கு அனுமதி, எந்தெந்த செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு விவரங்களை வெளியிட்டிருக்கிறது.
அதன்படி கீழ்க்கண்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுடன் தளர்வுகள் அளிக்கப்படுகிறது :
அரசு அலுவலகங்கள் 33% பணியாளர்கள்
மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள்.
வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது. எனினும், அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டும் வாடகை, ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.

மாநில அரசுத் துறைகள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்படும். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச்செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத்துறை, கருவூலத்துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை போன்ற துறைகள் தேவையான பணியாளர்களுடன் செயல்படும்.
மத்திய அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவார்கள். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் மத்திய அரசு அலுவலகங்கள் தேவையான பணியாளர்களுடன் பணிபுரிய அனுமதிக்கப்படும்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வரத் தேவையில்லை. அதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முன்கூட்டியே பெற்றுக் கொள்ள வேண்டும்.
வங்கிகள் 33 சதவீத பணியாளர்களோடு 29.6.2020 மற்றும் 30.6.2020 ஆகிய நாட்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் (ஏடிஎம்) அது சம்மந்தப்பட்ட வங்கிப்பணி மற்றும் போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும்.
பொது விநியோக கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். பொது விநியோகத் திட்டத்திற்கு தொடர்புடைய இந்திய உணவுக் கழகம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகள் மற்றும் அதைச்சார்ந்த போக்குவரத்து அனுமதிக்கப்படும்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பொது விநியோகக் கடைகள் இயங்காது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, அரசு அறிவித்த நிவாரணங்கள் அக்கடைப் பணியாளர்களால் நேரடியாக வழங்கப்படும்.
காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை
காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியுடன் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அதே போல் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் பொதுமக்கள், வாகனங்களை பயன்படுத்தாமல் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே, அதாவது 2 கி.மீ தொலைவிற்குள் மட்டும் சென்று, பொருட்களை வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது. தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைக்கு அனுமதி வழங்கப்படும். அப்பொருட்களை வழங்கும் ஊழியர்கள், தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிடம் இருந்து அடையாள அட்டை பெற்று பணியாற்ற வேண்டும்.
முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள், வீட்டில் தங்கியிருக்கும் முதியோர், நோயாளிகளுக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்.
அம்மா உணவகங்கள் மற்றும் ஆதரவற்றோருக்காக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும்.
பொது மக்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம்.
மேற்கண்ட 12 நாட்களுக்கு பணியிட வளாகத்திலேயே தங்கியிருந்து பணிபுரியும் தொழிலாளர்களைக் கொண்ட கட்டுமானப் பணி அனுமதிக்கப்படும்.
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொழிலாளர்களுக்கு ஒரு முறை வெப்ப பரிசோதனை செய்து, மேற்கண்ட 12 நாட்களுக்கு தொழிற்சாலை வளாகத்திலேயோ, அதன் அருகிலேயோ, அவர்கள் தங்கவைக்கப்பட்டு பணிபுரிய அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல், பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியிலிருந்து மற்ற இடங்களுக்குச் சென்று பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஒரு முறை தெர்மல் பரிசோதனை செய்து, தொழிற்சாலை வளாகத்திலேயோ அல்லது அதன் அருகிலேயோ தங்கி பணிபுரிய அனுமதிக்கப்படும். இந்த 12 நாட்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்து தினந்தோறும் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றுவர
அனுமதிக்கப்படமாட்டாது. எனினும், தொடர் செயல்பாடுகள் உள்ள மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.
இந்த ஊரடங்கின் போது சரக்கு போக்குவரத்துக்குக்கும், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் எவ்வித தடையும் கிடையாது.
இ பாஸ் உண்டா?
சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்ல, தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இ-பாஸ் அனுமதி வழங்கப்படும்.
வெளி மாநிலத்தில் இருந்து வருகின்ற ரயில்களுக்கும், விமானங்களுக்கும், அதேபோல வெளி நாட்டில் இருந்து வருகின்ற விமானங்களுக்கும், கப்பல்களுக்கும் தற்போதுள்ள நடைமுறையே தொடரும்.
இரு நாள் முழு ஊரடங்கு
21.6.2020 மற்றும் 28.6.2020 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கண்ட எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். (அதாவது, 20.6.2020 அன்று நள்ளிரவு 12 மணி முதல் 22.6.2020 காலை 6 மணி வரையிலும், எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். அதேபோன்று, 27.6.2020 அன்று நள்ளிரவு 12 மணி முதல், 29.6.2020 காலை 6 மணி வரையிலும் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்). இவ்விரு நாட்களிலும், பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக்
கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது.
கட்டுப்பாட்டுப் பகுதிகளில், எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் காலத்தில் இது மிகவும் தீவிரமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும். இந்தப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு ஒரு நாளைக்கு இருமுறை தெளிக்கப்படும்.
-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக