செவ்வாய், 23 ஜூன், 2020

இந்திய - சீனா ராணுவ கமாண்டர்கள் 11 மணி நேர பேச்சுவார்த்தை!

tamil.oneindia.com - /veerakumaran: டெல்லி: இந்தியா மற்றும் சீன நாட்டைச் சேர்ந்த ராணுவ கமாண்டர் மட்டத்திலான பேச்சுவார்த்தை, திங்கள்கிழமையான நேற்று 11 மணி நேரம் தொட்ரந்து நடைபெற்றது. இந்த நிலையில், இந்திய ராணுவ தளபதி முகுந்த் நரவனே இன்று லே பகுதிக்கு விரைகிறார்.
லடாக் கிழக்கு பகுதியில் சீனா ராணுவத்தை குவித்து இந்திய
நிலப்பரப்பிற்குள் ஊடுருவியதால், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர். அப்போது ஏற்பட்ட கை கலப்பு மற்றும் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர்.
பேச்சுவார்த்தை
முன்னதாக, ஜூன் 6ம் தேதி, 14 கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் மற்றும் சீன தெற்கு சிஞ்சியாங் ராணுவ மாவட்டத்தின் தளபதி மேஜர் ஜெனரல் லின் லியு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
பழைய நிலை திரும்ப வேண்டும்
ஏப்ரல் மாதம், எந்த நிலை இருந்ததோ, அதே நிலை, எல்லையில் நிலவ வேண்டும். சீன படைகள் வாபஸ் போக வேண்டும் என்று, இந்தியா அப்போது வலியுறுத்தியது. ஆனால், இதன்பிறகு 15ம் தேதிதான், இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. எனவே, சீனா அழைப்புவிடுத்தும், அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு இந்திய தரப்பு செல்லவில்லை.

இரவு வரை பேச்சுவார்த்தை
இந்த நிலையில், நேற்று காலை மீண்டும், ஹரிந்தர் சிங் மற்றும் லின் லியு ஆகிய இருவரும் ஆலோசனை நடத்தினர். திங்கள்கிழமை இரவு 10:30 மணி வரை பேச்சுவார்த்தை தொடர்ந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இரு தளபதிகளுடன், அவரவர் படைகளின் முக்கியஸ்தர்கள் சிலரும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.




பேச்சுவார்த்தை

சீன பகுதியில் உள்ள சுஷுல்-மோல்டோ பாயிண்ட் பகுதியில், இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங், சீன ராணுவம் (பி.எல்.ஏ) "திட்டமிட்டு இந்திய வீரர்களை தாக்கியது" என்ற பிரச்சினையை எழுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் சீனத் தரப்பு அளித்த பதில் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.




ராணுவ தளபதி வருகை

ராணுவ தளபதி வருகை

ராணுவத் தளபதிகளின் பேச்சுவார்த்தை சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற நிலையில், இன்று லே பகுதிக்கு ராணுவ தலைமை ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே வருகை தருகிறார். 14 கார்ப்ஸ் அதிகாரிகளுடன், எல்லையிலுள்ள நிலைமை மற்றும் சீன ராணுவத்துடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்ய உள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக