சனி, 2 மே, 2020

குழந்தைகள் சோடா பீமாக இருப்பதிலும் Popeyeயாக இருப்பதிலும் நம் பங்கு அதிக அளவு இருக்கிறது

சுமதி விஜயகுமார் : குழந்தைகள் பள்ளிக்கு அடுத்து அதிக நேரம்
செலவழிப்பது தொலைக்காட்சிகளில் தான். கார்ட்டூன்கள் என்றில்லை, திரைப்படங்கள், நகைச்சுவை காட்சிகள், நிகழ்ச்சிகள் என்று அனைத்தையும் பார்க்கிறார்கள். தொலைக்காட்சிகளுக்கு parental lock என்று ஒரு option இருந்தாலும், அந்த lockஐ எடுத்துவிட்டு நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு யாரும் அவர்களுக்கு சொல்லி தர தேவையில்லை. 10 வயது குழந்தைகூட செய்துவிடும்.
நம் நாட்டில் திரைப்படங்களுக்கு மட்டும் தான் பார்வையாளர்கள் சான்றிதழ் கொடுக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் நிகழ்ச்சிகள், செய்திகள் அல்லாத மற்ற நாடகங்களுக்கு கூட சான்றிதழ் கொடுக்கப்படுகிறது. சிறு குழந்தைகளை போட்டி என்ற பெயரில் ஆட/பாட வைப்பதெல்லாம் மிக மிக குறைவு. பொது அறிவு மற்றும் விளையாட்டு போட்டிகள் மட்டும் இருக்கும். தமிழ் தொலைக்காட்சிகளில் குழந்தைகள் ஆடுவதும் பாடுவதும் பார்க்கவும் கேட்கவும் இனிமையானது. ஆனால் வெற்றி இலக்கை நிர்ணயித்து அவர்களை ஒரு வித அழுத்தத்திற்கு உட்படுத்துவதும், பெற்றோர்களின் ஆசைக்காக குழந்தைகளை வற்புறுத்துவதும் ஏன் இன்னும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுவதில்லை என்று தெரியவில்லை.

சில வருடங்களுக்கு முன்பு வரை விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் தவறாமல் பார்த்து விடுவேன். ஒருமுறை ஜூனியர் சூப்பர் சிங்கர்க்கு SPB வந்திருந்தார். அனைத்து குழந்தைகளும் SPBயின் சிறந்த பாடல்களை தேர்ந்தெடுத்து பாடிக்கொண்டிருந்தார்கள். SPBயும் ரசித்து பார்த்து கொண்டிருந்தார். ஒரு குழந்தை 'சக்கர இனிக்குற சக்கர' பாடலை பாடியது. பாடல் முடிந்ததும் அந்த குழந்தையிடம் 'உனக்கு வேறு பாடல்கள் கிடைக்கவில்லையா?' என்ற தொனியில் கேட்டார். அந்த பாடலை பணத்திற்காக, புகழிற்காக இல்லை வேறு எதற்காகவும் இருக்கட்டும், அதை ரசித்து பாடியவர் SPB. அதை குழந்தைகள் முதல் முதியவர் வரை கேட்பார்கள் என்று தெரியும். அந்த பாடலை கேட்கலாம் ஆனால் பாடக்கூடாது என்பது எந்த விதத்தில் நியாயம். தொலைக்காட்சியில் போடப்படும் பாடல்களுக்கு என்று தனியாக தணிக்கை இருக்கிறதா என்ன. அவ்வளவு இரட்டை அர்த்த பாடல்களை அவர் பாடலாம் ஆனால் குழந்தைகள் பாடக்கூடாது என்றால் அவருக்கே தெரிந்திருக்கிறது அது தவறான பாடல் என்று. பிறகு ஏன் அந்த பாடலை பாட ஒப்புக்கொண்டார் என்பதை அவர் தான் தெளிவு படுத்த வேண்டும்.
கொரோனவினால் வீட்டில் அநேக நேரம் தொலைக்காட்சி ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. பல வீடுகளில் போல, பார்க்க ஆள் இருக்கிறதோ இல்லையோ தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும். குழந்தைகள் பள்ளி இல்லாமல் வீட்டில் இருப்பதால், குழந்தைகள் தொலைக்காட்சி ஒன்றில் தினமும் அனைத்து வயது குழந்தைகளுக்கும் அவர்கள் வயதிற்கேற்ப நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி கொண்டிருக்கிறார்கள். நேற்று என் வேலையை நிறுத்திவிட்டு நானும் கவினுடன் சேர்ந்து பார்த்தேன்.
ஆஸ்திரேலியாவின் அரசியலமைப்பு சட்டத்தை பற்றிய நிகழ்ச்சி. அதில் உள்ளவை மட்டுமில்லை, அதில் உள்ள குறைகள், குழப்பங்கள் என்பதை வல்லுநர்களை கொண்டு பேச வைத்தார்கள். பழங்குடியினருக்கு போதுமான உரிமைகள் வழங்காதது பற்றி குறைபட்டுக் கொண்டார்கள். அதற்கு மேலும் இன்னொன்றை ஆணித்தரமாக பதிய வைத்தார்கள். அரசு இயற்றும் சட்டங்கள் அனைத்தும் பொது மனிதர்களின் உரிமைகளை பறிப்பதற்காக தான் என்பதை மிக அழகாக விவரித்தார்கள். அதை ஒளிபரப்பிய அந்த குழந்தைகள் தொலைக்காட்சி ஆஸ்திரேலியா அரசுக்கு சொந்தமானது.
நான் குழந்தையாக இருந்தது முதல் இப்போது வரைக்கும் நான் பார்த்த அநேக குழந்தைகள் நிகழ்ச்சிகளிலும் வன்முறை இருக்கும். மிக சமீபத்திய உதாரணம் சோடா பீம் . பீம் உடுத்தி இருக்கும் ஆடையும் , அவன் நெற்றியில் இருக்கும் மத குறிப்பும் அப்போது எனக்கு விளங்கவில்லை. அதை தவிர்த்து பார்த்தாலும் , சண்டை போடுவது, லட்டு சாப்பிட்டால் பலம் வரும் என்பதெல்லாம் குழந்தைகளின் அறிவை முளையிலேயே கிள்ளி எரியும் செயல். Popeye என்ற ஒரு ஆங்கில கார்ட்டூன் வரும். அதில் Popeye கீரை சாப்பிட்டதும் பலம் பெறுவது போல் இருக்கும். அதை பார்த்து என் தம்பி சித்தியிடம் கீரை கேட்டு அடம்பிடிப்பான். குழந்தைகளுக்கு லட்டு தேவையா கீரை தேவையா என்பதை பெற்றோர்களே முடிவு செய்து கொள்ளட்டும்.
8 - 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு நல்லொழுக்கம் சொல்லிக் கொடுக்கும் ஆங்கில கார்ட்டூன்கள் ஏராளம். சிறிய வயதில் நாம் Moral Science படித்ததை போல. இப்போதெல்லாம் மார்க் மட்டும் எடுக்கும் திறமை இருந்தால் போதும். நல்லொழுக்கம் எல்லாம் முடிந்தால் அவர்களே கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் பாருங்கள் இந்தியாவில் தான் ஒழுக்கம் தளைத்தோங்குவது போல ஒரு புரிதல்.
நல்லொழுக்க கார்ட்டூன்களை பார்க்கும் குழந்தைகள் தான் தனக்கு தேவையானதை தானே நிர்ணயித்து கொள்கிறது. அடுத்தவர் கருத்துக்கும் உணர்வுக்கும் மதிப்பு கொடுக்கிறது. சோட்டா பீம் குழந்தைகள் இன்னும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று சொல்லி கொண்டிருக்கிறது.
நம் குழந்தைகள் சோடா பீமாக இருப்பதிலும் Popeyeயாக இருப்பதிலும் நம் பங்கு அதிக அளவு இருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக