சனி, 2 மே, 2020

H1B விசா விதிகளில் தளர்வு: அமெரிக்கா!

H1B விசா விதிகளில் தளர்வு: அமெரிக்கா!மின்னம்பலம் : H1B விசா வைத்துள்ளவர்களுக்கும், அமெரிக்க குடியுரிமைக்காக விண்ணப்பித்து உள்ளவர்களுக்கும் கருணை காலத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புவதும், ஊதிய குறைப்பு செய்வதும் தொடர்ந்து அமெரிக்காவில் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் அமெரிக்காவில் குடியுரிமை வாங்குவதற்காக முயற்சித்து வருகிறார்கள். இவற்றில் இரண்டு லட்சம் பேர் H1B விசா மூலம் அந்த நாட்டில் தங்கி உள்ளனர்.

H1B விசா பொதுவாக அவர்களின் வேலை பார்க்கும் நிறுவனம் கொடுக்கும் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் வேலை பார்க்கும் நிறுவனம் அமைந்துள்ள இடம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஊதியக் குறைப்பு மற்றும் வேலையை விட்டு நீக்குவது ஆகிய காரணங்களால் இன்னும் சில நாட்களில் அதிகாரபூர்வமாக அமெரிக்காவில் தங்கும் வாய்ப்பை இழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அளவிற்கு கீழ் ஊதியம் குறைக்கப்பட்டால் அல்லது வேலையில் இருந்து நீக்கப்பட்டாலும் அவர்களுக்கு 60 நாட்கள் புதிய வேலையை கண்டுபிடிப்பதற்காக கொடுக்கப்படும். ஆனால் தற்போது வைரஸ் பாதிப்பினால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் இதற்கு வாய்ப்பில்லாமல் உள்ளது. எனவே நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலையில் பலர் இருந்து வருகின்றனர். இந்நிலையில் H1B விசா வைத்திருப்பவர்கள் மற்றும் குடியுரிமைக்காக விண்ணப்பித்து இருப்பவர்களிடம் ஆவணங்களைகேட்டு பெறுவதில் 60 நாட்கள் மேலும் வழங்கி இன்று அமெரிக்கா அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்க தூதரகம் கேட்டிருக்கும் ஆவணங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் அளிப்பதற்கும், ஆவணங்களை அனுப்புவதற்கும் மேலும் 60 நாட்கள் விசா வைத்திருப்பவர்களுக்கு கிடைத்துள்ளது.
The US Citizenship and Immigration Services (USCIS) அறிவிப்பின் படி, விசா வைத்துள்ளவர்கள் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறுதி நாட்களுக்கு பிறகு 60 நாட்களுக்குள் ஆவணங்கள் அனுப்பப்பட்டால் எந்த நடவடிக்கையும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்திய தூதரகம் அமெரிக்காவிலுள்ள இந்தியர்கள் யாரெல்லாம் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்ட பின் இந்தியாவிற்கு திரும்புவதற்கு விருப்பத்துடன் இருக்கிறார்கள் என்று கேட்டு வருகிறது. ஏப்ரல் 10ஆம் தேதி இந்திய அரசாங்கம் வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை வைரஸ் பாதிப்பின் நிலையைப் பொறுத்து திருப்பி அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
- பவித்ரா குமரேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக