திங்கள், 4 மே, 2020

வீதிக்கு வரும் குடும்பங்களும் வானத்தில் பூ தூவும் மத்திய் துக்ளக் அரசும்

சாவித்திரி கண்ணன் : இன்னும் என்னென்ன நடக்குமோ..?
வீட்டு வாடகை கொடுக்கமுடியாமல் வீதிக்கு வரும் குடும்பங்கள் அதிகரித்துக் கொண்டுள்ளன!பத்து  நாட்களுக்கு முன்பு ’எண்ணங்களின் சங்கமம்’ பிரபாகர் அவர்கள் இது போல வீதிக்கு வந்த ஒரு குடும்பத்தை மீண்டும் மறுவீட்டில் வீட்டில் குடியேற்றிய ஒரு சம்பவத்தை கவனப்படுத்தினார்!
தற்போது கரூரில்! இது போல வெளியேற்றப்பட்ட ஒரு குடும்பம் தெருவிற்கு வந்து தவித்து,அவமானப்பட்டு மீண்டும் காவலர்கள் தலையீட்டால் குடியேற்றப்பட்டுள்ளது குறித்த செய்தி நெஞ்சை பதறவைத்தது!
வறுமையால் வரும் அவமானங்கள் பலவற்றை வாழ்க்கை நெடுகிலும் பார்த்தவன் நான்….!
மனைவி,குழந்தைகளுடன் நடுரோட்டிற்கு மூட்டை,முடிச்சுகளுடன் வந்து செய்வதறியாது திகைக்கும் அவலம் கொடிதினும் கொடிது! இதை பார்க்க,பார்க்க கண்ணில் என்னையும் அறியாமல் நீர் ஆறாய் வடிகிறது.
வெளியுலகிற்கு தெரியாமல் வீட்டு உரிமையாளரின் சுடு சொற்களைத் தாங்கிக் கொண்டு, அடுத்த வேலை உணவிற்கு என்ன செய்வது?,
பசித் தீயை எப்படி அணைப்பது? குடும்பத்தின் மானத்தை எப்படிக் காப்பது?..என்ற நிலையில் லட்சோப லட்சம் குடும்பங்கள் இன்று தவித்துக் கொண்டுள்ளன!

என் சக்திக்குத் தக்கவகையில் சாலையில் பசியோடு பார்க்க நேர்பவர்களுக்கு சட்டென்று கையில் இருப்பதை தந்து வருகிறேன்..! எவ்வளவோ நல்லிதயங்கள் நாளும்,பொழுதும் ஓடி,ஓடிச் சென்று உதவியவண்ணம் உள்ளது ஆறுதல் தந்தாலும்..இவை யாவுமே சிறு துளி தான்!
கொரானாவைக் காட்டிலும் மிகக் கொடிதான பசி,வறுமை,அவமானம் பிடுங்கித் திங்க செய்வதறியாது திகைத்தும் நிற்கும் மக்கள் இருக்கும் ஒரு தேசத்தில் வானில் பூமழை பொழிய வைக்கும் கோமாளித்தனங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறதே…என்ன கொடுமை!
கொரானாவோடு போராடும் டாக்டர்களுக்கு பணியின் போது பாதுகாப்பு கவசங்கள் கூடத் தரத் துப்பில்லாமல் வானில் இருந்து பூமழை பொழிந்து வாழ்த்துவதில் என்ன பயன்?
கொரோனா விரைவில் முடிவுக்கு வருமா தெரியவில்லை! இல்லையெனில்,கையாளாகாத அரசுகளால், சிறுகச் சிறுக பசி,பட்டினியில் மக்கள் மடிய நேரும். இதை கண்டு வருந்தி, நாம் குற்றவுணர்வால் குன்றிப் போவதை விடவும்,இந்த பூவுலகு பூகம்பத்தல் குலுங்கி, புதையுண்டால் கூட, அது மிக நன்று!

1 கருத்து:

  1. தாய் தவிட்டு பிச்சைக்கு அலைந்ததாம், புள்ளை தொங்க தொங்க தங்கத்தில் கேட்டுச்சாம் என்ற ஒரு பழமொழி உண்டு.

    இந்த் விளக்கு பிடிக்குறது கை தட்டுறது பூ போடுறதை எல்லாம் விட்டு... ஏழைங்க வீட்டுல உலை வைக்க ஏதாவது வழிப்பண்ணா நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு