ஞாயிறு, 24 மே, 2020

வி.பி. துரைசாமிக்கு ஆளுநர் பதவி - ஸ்டாலினை அதிரவைக்கும் அமித் ஷா

டிஜிட்டல் திண்ணை: வி.பி. துரைசாமிக்கு ஆளுநர் பதவி - ஸ்டாலினை அதிரவைக்கும் அமித் ஷா மின்னம்ல்பம்:   மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.
“திமுகவின் மாவட்டச் செயலாளர்கள், எம்,பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (மே 24) காணொலிக் காட்சி முறையில் அவசரமாக நடக்கிறது. திமுக நிர்வாகிகளைப் பல இடங்களில் எடப்பாடி அரசு கைது செய்து வருவது குறித்து இந்தக் கூட்டம் கூட்டப்படுவதாக ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நேற்று அதிகாலை ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதை அடுத்து நேற்று பிற்பகல் திமுகவிடம் இருந்து கூட்ட அறிவிப்பு வந்திருக்கிறது. ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்படாவிட்டால்கூட இந்தக் கூட்டம் நடந்திருக்கும் என்கிறார்கள். ஆமாம்... வி.பி.துரைசாமி பாஜகவுக்குச் சென்ற நிலையில் மேலும் சில திமுக நிர்வாகிகளை பாஜக இழுப்பதற்கு ஆயத்தமாகி வருகிறது என்று தகவல்கள் பரவிய நிலையில் அதுபற்றிய ஒரு கூட்டத்துக்குத்தான் திட்டமிட்டிருந்தார் ஸ்டாலின். இடையே ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுவிட்டதால் அதை ஒட்டிய கூட்டமாகவும் இது மாறியிருக்கிறது.

மின்னம்பலத்தில் பல மாதங்களாகவே திமுகவை நோக்கிய பாஜகவின் ஆபரேஷனை அவ்வப்போது விரிவான தெளிவான செய்திகளாகக் கொடுத்து வந்திருக்கிறோம். 2019 செப்டம்பர் 3ஆம் தேதி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில், திமுக புள்ளிகளுக்கு பாஜக வலைஎன்ற செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதில், ‘தமிழகத்தில் பாஜகவைக் காலூன்ற வைப்பதற்காகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் அதன் அகில இந்திய தலைவர் அமித் ஷா. எதிரியை பலவீனப்படுத்துவதன் மூலம் தான் பலமாவது என்பது அரசியலின் அடிப்படை சூத்திரங்களில் ஒன்று. அந்த வகையில் தமிழ்நாட்டில் சக்தி வாய்ந்த கட்சிகளாக இருக்கும் திமுக, அதிமுக ஆகிய இரண்டுமே பாஜகவின் வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள்தாம். எதிரிகளை பலவீனப்படுத்துதல் என்ற வகையில் இப்போது கூட்டணிக் கட்சியாக இருக்கும் அதிமுகவின் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் பற்றி முழு விவரங்களும் பாஜகவின் கையில் இருக்கின்றன. அதனால்தான் பாஜகவுக்கு எதிராக வாய் திறக்க முடியாமல் அவர்கள் அடக்கி வாசிக்கிறார்கள். அதேநேரம் திமுக இப்போது தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருப்பதால் பாஜகவை எதிர்த்து பலமாக முழக்கமிட்டு வருகிறது. திமுகவை பலவீனப்படுத்துவது குறித்து பல்வேறு திட்டங்களை வைத்திருக்கிறது பாஜக. அதில் ஒன்றுதான் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு அரசியல் ரீதியாக அல்லாமல் வேறு வகைகளில் வழக்குகள் மூலம் நெருக்கடி தருவது என்ற முடிவு. ஆனால், தலைவர் மீது கைவைக்கும் அதேநேரம், திமுகவின் பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் முக்கியப் பிரமுகர்களை நோக்கி கவனம் திருப்பியிருக்கிறது பாஜக.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக அபார வெற்றி பெற்றதில் இருந்தே, திமுகவின் அனைத்து எம்.பி.க்களின் ஜாதகத்தையும் கலெக்ட் செய்யச் சொல்லி உத்தரவிட்டிருந்தார் அமித் ஷா. கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி மின்னம்பலத்தில் இதுகுறித்து செய்தி வெளியானது. அரசியல் ஜாதகம் என்றால்... அவர்கள் ஒவ்வொருவரும் எந்தக் கட்சியிலிருந்து அரசியல் வாழ்வைத் தொடங்கினார்கள், கட்சி மாறுவதில் அவர்களின் வரலாறு என்ன, அவர்களின் ஆரம்பக்கால தொழில் என்ன, இப்போதைய தொழில் என்ன, இதன் மூலம் எகிறிய சொத்து மதிப்பு என்ன, இன்னும் குறிப்பாக கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பவர்கள் யார், வலை விரித்தால் விழக் கூடியவர்கள் யார் என்பன போன்ற விவரங்களைத்தான் அமித் ஷா அறிக்கையாகக் கேட்டிருந்தார். அந்தத் தகவல் திரட்டும் பணி முடிந்து அமித் ஷாவின் மேஜைக்குத் தகவல்கள் சென்றுவிட்டன. திமுக எம்.பி.க்களின் அரசியல் ஜாதகத்துக்குள் அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் அவரவருக்கான உட்கட்சி அரசியல் எதிரிகள் யார் என்ற பட்டியலும் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆக, திமுகவில் சீனியர்களாக இருந்து அல்லது கடுமையான உழைப்பாளிகளாக இருந்தும்கூட கட்சித் தலைமையால் பதவி அளிக்காமல் ஒதுக்கப்பட்டவர்களைத்தான் பாஜக குறி வைக்கிறது. அந்தந்த மாவட்டங்களில் நல்ல செல்வாக்கு இருந்தும்கூட தலைமையால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் திமுகவில் அநேக மாவட்டங்களில் இருக்கிறார்கள். அவர்களை நோக்கித்தான் இப்போது பாஜகவின் தூண்டில் வீசப்படுகிறது. மேலும், திராவிடக் கொள்கையில் பிடிப்பாக இருப்பவர்களையே தங்கள் கட்சிக்குக் கொண்டுவர தீவிரம் காட்டுகிறது பாஜக. அப்போதுதான், ‘இவர்களே பாஜகவுக்குப் போகிறார்கள் என்றால் நாமும் போகலாம்’ என்று மற்ற கட்சியினரையும் யோசிக்கவைக்கும் என்பதே இதற்கான பின்னணி’ என்று அந்த டிஜிட்டல் திண்ணை செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது அதுதான் இப்போது வி.பி.துரைசாமி மூலம் தொடங்கியிருக்கிறது. வி.பி.துரைசாமி அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர். கடந்த முறை ராஜ்யசபா எதிர்பார்த்தார் கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது பாஜகவில் இணைந்திருக்கிறார். துரைசாமி நாமக்கல்லில் மாவட்ட அரசியலே செய்வதில்லை. அவர் சென்னைவாசியாக இருந்து உயர்மட்ட அரசியல் செய்துகொண்டிருக்கிறார். ஆனால் அந்தியூர் செல்வராஜ், அருந்தியர் மக்களோடு நேரடித் தொடர்பில் இருப்பவர் என்றும் கள அரசியல் செய்பவர் என்றும் சொல்லிதான் ஸ்டாலின் அவரை எம்.பி ஆக்கினார். இந்த நிலையில் வி.பி.துரைசாமியை திமுகவில் இருந்து நீக்குவதற்கு முன்னமே அவசர அவசரமாக அவரை சேர்த்துக் கொண்டிருக்கிறது பாஜக. இவ்வளவு முக்கியத்துவத்தை வி.பி.துரைசாமிக்கு எதற்காக கொடுக்கிறது பாஜக?
விமானப் போக்குவரத்து தொடங்கியதும் டெல்லி சென்று அமித் ஷாவை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் வி.பி.துரைசாமி. இது தொடர்பாக அமித் ஷாவிடம் போனில் அவர் பேசியபோது, தனது தேர்தல் பயணம் பற்றியும், தொடர்ந்து கட்சிக்காக உழைத்து கடன்காரனாக இருப்பது பற்றியும், இவ்வளவு உழைத்தும் திமுகவில் சாதி ரீதியாக தான் ஒதுக்கப்பட்டது பற்றியும் கூறியிருக்கிறார். அப்போது அமித் ஷா, ‘உங்களை மாதிரி அனுபவமுள்ள, படித்த பிரமுகர்கள்தான் பாஜகவுக்குத் தேவை. நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள். நீங்கள் டெல்லி வந்துவிட்டு சென்னை திரும்பும்போது விமான நிலையமே ஸ்தம்பிக்கும் வகையில் மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கும் வகையில் உங்களுக்கு ஒரு பெரிய பதவி வழங்கப்படும்’ என்று உற்சாகப்படுத்தியிருக்கிறார் அமித் ஷா. இதையெல்லாம் தங்கள் வட்டாரத்தில் சொல்லிக் கொண்டிருக்கும் வி.பி.துரைசாமியின் உறவினர்கள், ‘வி.பி.துரைசாமிக்கு ஆளுநர் பதவி தருவதாகச் சொல்லியிருக்காங்க. அதிலும் குறிப்பா கர்நாடக ஆளுநர் பதவி தருவதா சொல்லியிருக்காங்க’ என்று உற்சாகத்தோடு பகிர்ந்துகொண்டுள்ளனர்.இந்தத் தகவல்கள் ஸ்டாலினுக்கும் சென்றடைந்திருக்கிறது. அடுத்தடுத்து திமுக மீது தொடுக்கப்படும் இத்தகைய தாக்குதல்கள் பற்றி விவாதிக்கவும் நிர்வாகிகளோடு இணக்கத்தை அதிகப்படுத்தவுமே மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக