ஞாயிறு, 3 மே, 2020

எடப்பாடியுடன் போட்டி போடும் கனிமொழி..

டிஜிட்டல் திண்ணை:  எடப்பாடியுடன் போட்டி போடும் கனிமொழிமின்ன்கம்பலம் : “கொரோனா உலகம் முழுதும் பொருளாதாரத்தைப் புரட்டிப் போட்டு வருகிற நிலையில், அது தோன்றிய சீனாவிலும் பல அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்று இன்னும் சில ஆண்டுகள் கழித்தே முற்றிலும் அகற்றப்படும் என்ற நிலை உலகின் பல நாடுகளில் நிலவும் நிலையில், சீனாவில் கொரோனா தொற்று நிரந்தரமாக தங்கியிருக்கும் என்று பல நாடுகளும் அஞ்சுகின்றன.
இதன் விளைவாக சீனாவில் அதிக முதலீடு செய்துள்ள நாடுகளான ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை சீனாவில் இருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளன. இதை தக்க சமயமாகக் கருதி பிரதமர் மோடி அந்த தொழிற்சாலைகளை இந்தியாவுக்குள் கொண்டுவருவதற்கு பலத்த முயற்சிகளை செய்து வருகிறார்.

இது ஒருபக்கம் என்றால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கடந்த 23 ஆம் தேதி இதுகுறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் ஆலோசித்தார். அதன் பின் தொழில் துறை அமைச்சர் சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம், தொழில் துறைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோருடனும் முறைப்படி ஆலோசித்தார்.
அப்போது இரண்டாம் முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற தமிழகக் குழுவில் இடம்பெற்ற அப்போதைய தொழில்துறைச் செயலாளர் ஞானதேசிகன் எழுதிய கோப்புகள் ஆராயப்பட்டன. கோப்புகளைத் தாண்டி ஞானதேசிகனுக்கு அந்த பயணத்தின்போது கிடைத்த நேரடி அறிமுகங்கள் மூலம் இப்போது தொழில் முதலீடுகளை ஈர்க்க முயற்சி செய்ய முடியுமா என்றும் ஆராயப்பட்டது. இதன் அடிப்படையில் தலைமைச் செயலாளர் இந்த விவகாரத்தில் இப்போது அண்ணா மேலாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவராக இருக்கும் ஞானதேசிகனின் சப்போர்ட்டைக் கேட்டிருப்பதாகவும் அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்லுகிறார்கள்.
இந்நிலையில்தான், ‘தமிழ்நாட்டில் ஏற்கனவே அதிக முதலீடுகளைச் செய்துள்ள நாடுகளைச் சார்ந்த தொழில் நிறுவனங்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தி, அவர்கள் பிற நாடுகளிலிருந்து இடமாற்றம் செய்யும் தொழிற்சாலைகளை இங்கு ஈர்த்து, நம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் பணிகளை முடுக்கிவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு இடம் பெயரும் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் துவங்க ஈர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்புக் குழுவை முதல்வர் அமைத்துள்ளார்’ என்று அறிக்கை வெளியிட்டது தமிழக அரசு.
‘கொரோனாவால ஏற்கனவே நம்ம பொருளாதாரம் சிதைஞ்சு போச்சு. நம்ம ஆட்சிக்குள்ள ஒரு பத்து புதிய தொழிற்சாலையாவது இந்த வகையில தமிழ்நாட்டுக்குள்ள கொண்டுவந்துட்டோம்னா நல்லா இருக்கும். அதனால அதுக்கான ஏற்பாடுகளைப் பண்ணுங்க. எனக்கு ஒரு டீடெயில் ரிப்போர்ட் கொடுங்க. தேவைப்பட்டா ஜூனுக்குப் பிறகு வெளிநாட்டுப் பயணம் கூட போயிட்டு வாங்க’ என்று தலைமைச் செயலாளரிடம் கூறியிருக்கிறார் முதல்வர்.
முதல்வர் இப்படி ஒரு வேட்டைக்காகத் தயாராகிக் கொண்டிருக்க திமுகவின் மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி, சீனாவில் இருந்து வரும் தொழிற்சாலைகளை தூத்துக்குடியில் அமைப்பதற்காக தீவிர முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் சில நாட்களுக்கு முன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய கனிமொழி எம்பி, ‘தற்போதைய தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் அமைப்பதற்கான ஏராளமான நிலம், அருகேயே துறைமுக வசதி, விமான நிலைய வசதி என்று காஞ்சிபுரத்துக்கு சற்றும் குறையாத வசதிகளை தூத்துக்குடி கொண்டிருக்கிறது. எனவே தூத்துக்குடியில் புதிய தொழிற்சாலைகளைக் கொண்டுவர நடவடிக்கை எடுங்கள். புதிய தொழிற்சாலைகள் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தால் தென் மாவட்ட இளைஞர்கள் சென்னை, வெளிமாநிலம் என்று இடம்பெயர வாய்ப்பிருக்காது. தொழில் வளமும் வேலைவாய்ப்பும் பெருகும், இதனால் சமுதாய ரீதியிலும் தென் மாவட்டம அமைதியை நோக்கித் திரும்பும்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
இவ்வாறு எடப்பாடியும் கனிமொழியும் தத்தமது வகைகளில் தமிழகத்துக்குத் தொழிற்சாலைகளை அமைக்கப் போட்டிபோட்டு போராடி வருகிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக