திங்கள், 11 மே, 2020

செல்வி கைது ..சித்திரவதை .. கொலை . அவர் செய்த குற்றம் .. மனித நேயம்! .புலிகளின் மற்றொரு கொடுரம்

  1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து செல்வி புலிகளால் கைது செய்யப்பட்டார்.
செல்வி உருவாக்கிய படைப்புக்களும் கருத்துக்களும் விடுதலைப் புலிகளை நோகடித்து விட்டதாகவும் அதற்கான தண்டனையாகவே செல்வி கைது செய்யப்பட்டதாகவும் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
உதாரணத்திற்கு தமிழ் மக்களின் விடுதலையை உத்தரவாதப் படுத்தப்போகும் ஒரு இயக்கத்தினுள் சுதந்திரம் இருக்கிறதா என்று செல்வி கேள்வி எழுப்பினார்.
புலிகள் செல்வியை ஒழித்துக்கட்டுவதற்கு முடிவெடுத்து இருந்ததாகவே செய்திகள் தெரிவித்திருந்தன. ஆனால் மற்றுமொரு மனித உரிமைவாதியான ரஐனி திராணகமவைப் போன்ற அதே தன்மையான ஒரு சூழ்நிலைக்கு செல்வியின் நிலமையும் இட்டுச் செல்லாதவாறு இருக்கும்படியாக புலிகள் வேறு முடிவை எடுத்தனர். அதுவே கைது செய்தலாக முடிவுற்றது.
செல்வியின் இருப்பிடத்திலிருந்து செல்வியின் கையெழுத்துப் பிரதிகள் குறிப்புக்கள் கடிதங்கள் புத்தகங்கள் அனைத்துமே அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டது.

செல்வி வவுனியாவில் உள்ள சேமமடு என்னும் கிராமத்தில் பிறந்தவர். யாழ் பல்கலைக்கழகத்தில் நாடகம் அரங்கியலும் என்ற பட்டப்படிப்பின் இறுதியாண்டு மாணவி. அத்தோடு இவர் நாடக நெறியாளரும் நடிகையுமாவார். ‘தோழி’ இதழின் ஆசிரியரும் கூட.
செல்வி தன் நாடகங்களினாலும் கவிதைகளினாலும் குறுகிய காலத்திலேயே மதிப்பிடக்கூடிய படைப்பாளியாக விளங்கினார். புலிகளுக்கு ஆதரவாக இருப்பதை விடுத்து சுயேற்சையாக சுதந்திரமாக இயங்குவதற்கு பல்கலைக்கழக சக மாணவர்களை செல்வி ஊக்குவித்தார் . அவர் கவிஞராகவும், நாடகாசிரியராகவும் பணியாற்றியவர். பாலஸ்தீன கைதிகள் பற்றிய நாடகமொன்றையும் அவர் இக்காலத்தில் செய்திருந்தார். விடுதலைப் புலிகள் உள்ளிட்ட சில இயக்கங்களின் மனித உரிமை மீறலை விமர்சிக்கின்ற நாட க மொன்றை அரங்கேற்றத் தயராகிக் கொண்டிருக்கையிலேயே அவர் கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
தமது படைப்புகளுக்கூடாக பெண் விடுதலை கருத்துக்களை பரப்பியவர். சிறந்த பெண்ணியவாதியான செல்வி யாழ் பெண்கள் ஆய்வு வட்டம், யாழ் பல்கலைக்கழக மாணவ அவை மற்றும் இலக்கியவட்டத்தின் உறுப்பினராகவும் இருந்தார். பல்கலைக்-கழத்தில் பெண்கள் இயக்கத்தில் தீவரமாக செயற்பட்டிருந்தார்.
வடக்கில் நடந்த யுத்தத்தின் போது பாதிப்புக்கும், குண்டுத் தாக்குதலுக்கும் உள்ளானவர்களுக்கு நிவராண உதவிகளை செய்வதில் ஈடுபட்டிருந்தார்.. யாழ்ப்பாணத்தில் அல்லல்படும் தாய்மார்களுடன் முன்னின்று செயல்பட்டதினால் அவர் சமூகத்திற்கு நன்கு அறியப்பட்டவராக இருந்தார். பூரணி பெண்கள் இல்லத்தின் செயல்பாட்டாளர்களில் ஒருவராகவும் முக்கிய பங்கை வகித்தார்.
ஈழத்து பெண் கவிஞர்களின் கவிக்குரலாக வெளியிடப்பட்ட 'சொல்லாத சேதிகள் ' என்ற தொகுப்பில் செல்வியின் கவிதைகள் வெளிவந்துள்ளன. அத்தோடு செல்வியின் கவிதைகளும் சிவரமணியின் கவிதைகளும் சேர்ந்த தொகுப்பொன்றை தாமரைச் செல்வி பதிப்பகம் தமிழகத்தில் வெளியிட்டிமிருந்தது. செல்வியின் கவிதைகள் தமிழகத்திலுள்ள சிறு பத்திரிகைகளான மனஓசை, மண் அரங்கேற்றம் இவை தவிர ஓசை, நான்காவது பரிமாணம், சரிநிகர், திசை போன்ற இதழ்களிலும் வெளிவந்துள்ளது. சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்புக்களிலும் இடம்பெற்றுள்ளன.
செல்வியின் விடுதலையைக்கோரி சர்வதேச மனித உரிமை அமைப்பான Amnesty International பலவாறு முயன்றது. தனது இதழான Focus செல்வியைப் பற்றி 1994ம் ஆண்டு மார்ச் இதழில் விடுதலையைக் கோரி எழுதியது. புலிகள் எதற்கும் செவி சாய்க்கவில்லை.
இந்த இக்கட்டான காலகட்டத்தில்தான் உலகப் புகழ்பெற்ற ‘Poetry International Award’ கவிதைக்கான சர்வதேச விருது செல்விக்கு வழங்கப்பட்டது. International PEN என்று அழைக்கப்படும் சர்வதேச கவிஞர்கள் எழுத்தாளர்கள் நாவலாசிரியர்கள் கூட்டமைப்பான (Poets Essayists and Novelists) PEN அமைப்பு கார்ல்ஸ் வொர்த்தியால் தொடங்கப்பட்டதாகும்.
இவ் விருதானது தங்களுடைய நம்பிக்கைகளுக்காகவும், இலட்சியத்திற்காகவும், எழுத்துத்தளத்திலும், கலைத் தளத்திலும், படைப்புக்களை உருவாக்கியவர்களுக்கு வழங்கப்படுவதாகும்.
செல்வி ஈழத்தின் நெருக்கடியான போராட்ட சூழ்நிலையில் இத்துறைகளில் சேவை புரிந்தமைக்காக இவ் விருது வழங்கப்பட்டது.
செல்வி உயிருடன் இருப்பதாக நம்பி வந்த அவருடன் நெருங்கிய அனைவருமே மனந் தளர்ந்து போயிருந்தனர் . அவரது தாயார் உட்பட எந்த உறவினரும் அவரை சென்று பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அவர் தேகாரோக்கியம் குன்றிய நிலையில் இருப்பதாக அஞ்சுகிறோம் என்று றொட்டர்டாம் போயற்றி இன்டர்நெஷனல் 1994இல் அறிக்கை வெளியிட்டது.
1992இல் எழுதுவதற்கான சுதந்திரம் எனும் விருது 'PEN' எனும் சர்வதேச அமைப்பின் விருது செல்விக்கு கிடைத்தது. இவ்விருதினை அதற்கு முன்னரே வழங்கத் தீர்மானித்திருந்தபோதும் இவ்விருதின் மூலம் சிறைவைக்கப்பட்டிருக்கும் அவருக்கு ஏதும் ஊறு நேரக்கூடும் என்றும் விருதினை அறிவிக்க வேணடாம் என்று செல்வியின் நண்பர்கள் பலர் அறிவித்திருந்ததாக ' PEN' அமைப்பின் தலைவர் எட்மண்ட் கீலி அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தார்.
ஆனாலும், அவரது நிலை அல்லது அவரது இருப்பிடம் பற்றிய எதுவித தகவலையும் காணவில்லையென்பதால் விருதினை பகிரங்கப்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டதாக 1992இல் 'PEN 'அமைப்பின் தலைவர் அறிவித்திருந்தார்.
சர்வதேச கவிதை அமைப்பு 1994க்கான International betry Sbciety award எனும் விருது வழங்கப்பட்டது. இது மானுட சுதந்திரத்திற்காகவும், அடிப்படை உரிமைக¬ளுக்காகவும் குரல் கொடுத்த ”சுதந்திரம் மறுக்கப்பட்ட” கவிஞர்களுக்காக வழங்கப்படுகின்ற விருதாகும்.
இவ்விருது வழங்கப்பட்டபின் விடுதலை செய்யப்பட்ட சர்வதேச கவிஞர்களைப் போலவே செல்வியும் விடுதலை செய்யப்படவேண்டுமென இவ்வமைப்பு கேட்டுக்கொண்டது.
இவ்விருது பற்றிய அறிவித்தலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
“மரணத்தையோ அல்லது சிறைவாசத்தையோ கவிஞர்கள் எதிர்கொண்ட போதும், அவர்கள் மனிதனது மொழியை பேசுகிறார்கள். கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு உருக்கொடுக்கிறார்கள். மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் அதற்கு போராடுவதற்கும் உலகம் தழுவிய முயற்சிகள் இருந்த போதிலும், மனிதனுடைய கௌரவத்தை நேர்மையாக பகிரங்கப்படுத்தும் குரல்களுக்கான அவமதிப்பும், கவிதைக்கான அவமதிப்பும் என்பது மனித வாழ்வுக்கேயான அவமதிப்பாக அநேகமாக வெளிப்படுகின்றது “.
இந்த பிரசுரத்தின் இறுதிவரிகள் இவ்வாறு நிறைவுபெறுகின்றன. "மனித உயிருக்கும் உடலுக்கும் மரியாதை குன்றிப்போதல் மேலோங்கிவரும் இவ் உலகில், பலியாகிப்போன இன்னல்களுக்குள்ளான சகல கவிஞர்களையும் இன்னும் நூற்றுக்கணக்கான அறியப்படாத தனிநபர்களையும் அங்கீகரிக்கும் அதே நேரத்தில், இந்த வருடத்திற்கான விருதினை தமிழ் கவிஞையான செல்விக்கு வழங்குவதற்கு இவ் அமைப்பின் தலைமைப்பீடம் தீர்மானித்துள்ளது."
இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு முதன்முறையாக வழங்கப்பட்ட விருதான இதனை பெற்றுக் கொள்ள செல்வி அழைக்கப்பட்டிருந்தார்.
ஆனால் விடுதலைப் புலிகளினால் சிறைவைக்கப் பட்டபடியே அப்போதும் இருந்தார்.
1993 டிசம்பர் வெளியான 'சரிநிகர்' பத்திரிகையில், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் பேட்டியில் (இப்பேட்டியில் மூலமானது Counterpoint எனும் ஆங்கில சஞ்சிகையாகும்) செல்வி தமது தடுப்புக் கைதியாகவே இருப்பதாக ஒப்புக் கொண்டிருந்தார்.
செல்வியின் விடுதலைக்காக பல சர்வதேச நாடுகள் குரல் கொடுத்து வந்தன.
மேலும் சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட பல மனித உரிமை நிறுவனங்களும் அவரது விடுதலையைக் கோரியிருந்தன.
தேசத்தை நேசித்தது தான் செல்வி செய்த குற்றம். மனிதத்தைக் கோரிய அவரது அர்ப்பணிப்பு தான் அவர் செய்த குற்றம்.
அவரது கவிதைகள் யுத்தத்தினால் நலிவுற்ற பெண்கள் பற்றியதும் யுத்தம் பற்றியதுமான சித்திரங்களையே வெளிப்படுத்தியது.
இன்று அவர் எம்முடன் இல்லை.
விடுதலையின் பேரால், கருத்துச் சுதந்திரத்தின் குரல் நசுக்கப்படுகின்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாங்கள் மீள எழுவோம்.
நாங்கள் மீளவும் உயிர்ப்போம். மானுட விடுதலைக்காக
விக்கிப்பீடியா : செல்வநிதி தியாகராசா ஈழத்துக் கவிஞரும், பெண்ணிலைவாதியும் ஆவார். இவர் செல்வி எனும் பெயரினால் பெரிதும் அறியப்பட்டவர். இவருக்கு சர்வதேச கவிஞர்கள் எழுத்தாளர்கள் நாவலாசிரியர்கள் கூட்டமைப்பின் (PEN) 1992 ஆம் ஆண்டுக்கான எழுத்துச் சுதந்திரத்துக்கான பன்னாட்டு விருது கிடைத்தது[1]. இவர் 1991 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டார்.
இவர் நாடக நெறியாளரும் நடிகையுமாவார். தோழி எனும் பெண் இலக்கிய இதழின் ஆசிரியராக செயற்பட்டார்.
ஈழத்து பெண் கவிஞர்களின் கவிக்குரலாக வெளியிடப்பட்ட சொல்லாத சேதிகள் என்ற தொகுப்பில் செல்வியின் கவிதைகள் வெளிவந்தன. செல்வியின் கவிதைகள் மனஓசை, மண், அரங்கேற்றம், ஓசை, நான்காவது பரிமாணம், சரிநிகர், திசை போன்ற இதழ்களிலும் வெளிவந்தன. சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்புக்களிலும் இடம்பெற்றன. யாழ் பெண்கள் ஆய்வு வட்டம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ அவை மற்றும் இலக்கியவட்டத்தின் உறுப்பினராகவும் இருந்தவர். இரண்டு நாடகங்களையும் எழுதியிருக்கிறார். "பூரணி இல்லம்" என்ற பெண்கள் மையத்தின் உறுப்பினராக இருந்தார். வடக்கில் நடந்த யுத்தத்தின் போது பாதிப்புக்கும், குண்டுத் தாக்குதலுக்கும் உள்ளானவர்களுக்கு நிவாரண உதவிகளை இந்த மையம் செய்து வந்தது.
உலகப் புகழ்பெற்ற ‘Poetry International Award’ கவிதைக்கான சர்வதேச விருது செல்விக்கு சர்வதேச கவிஞர்கள், எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள் கூட்டமைப்பான Poets Essayists and Novelists (PEN) அமைப்பால் வழங்கப்பட்டது.[1].
கடத்தப்பட்டமை
1991 ஆகத்து 30 ஆம் நாள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள அவரது வீட்டில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் கடத்தப்பட்டார்.[2] செல்வியின் விடுதலைக்காக பல சர்வதேச நாடுகள் குரல் கொடுத்தன. சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட பல மனித உரிமை நிறுவனங்களும் அவரது விடுதலையைக் கோரியிருந்தன. இவர் பின்னர் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.. கலாநிதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக