சனி, 9 மே, 2020

மதுக்கடைகளை மூடும் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு

government-appeals-to-supreme-court-against-chennai-high-court-order-to-close-liquor-shopshindutamil.i : டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலானபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் மதுக்கடைகளைத் திறக்கலாம் என்கிற அறிவிப்பும் ஒன்று. இதையடுத்து பல மாநிலங்கள் மதுக்கடைகளைத் திறந்தன. தமிழகத்திலும் மூன்று நாட்கள் கடந்து மே 7-ம் தேதி அன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
மதுக்கடைகள் திறக்கப்பட்டால் சமூக விலகல் கேள்விக்குறியாகும், கரோனா தொற்று பரவும் என உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம் மதுக்கடைகள் திறக்கும் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனத் தீர்ப்பளித்தது. மற்றொரு வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் தனி நபர் இடைவெளி, ஆதார் கார்டு, ரசீது வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது.
நிபந்தனை மீறப்பட்டால் தடை செய்ய நேரிடும் என எச்சரித்திருந்தது. இந்நிலையில் இரண்டு நாட்களில் பண்டிகைக் காலம் போல் மதுப்பிரியர்கள் அடித்துப் பிடித்து முண்டியடித்து ரூ.294.5 கோடிக்கு மதுவகைகளை வாங்கினர். குற்றச்சமபவங்கள் ஒரே நாளில் அதிகரித்தன. சமூக விலகலின்றி கும்பல் கும்பலாகக் கூடி மதுபானங்களை வாங்கினர்.
இதுகுறித்த பொதுநல வழக்கை மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளைச் சார்ந்த சிலர் தாக்கல் செய்தனர். அதில் வழக்கை விசாரித்த வினீத் கோத்தாரி அமர்வு, மே 17-ம் தேதி வரை மதுக்கடைகளைத் திறக்கத் தடை விதித்தும் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மூடும்படியும் உத்தரவிட்டது. இந்நிலையில் மதுக்கடைகளை மூடும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசு இன்று தாக்கல் செய்த மனுவில், “கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில், உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மது வாங்க வருவோர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை காவல்துறை கண்காணித்து வருகின்றது.
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே டாஸ்மாக் கடைகளத் திறப்பது என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது.
மேலும், தமிழகத்தில் டாஸ்மாக் மூடினால் எல்லை மாவட்டங்களில் மது வாங்குவது தொடர்பாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், ஆன்லைனில் மது விற்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளது
டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர் யோகேஷ் கன்னா மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் மேல் முறையீடு வேண்டாம் என வேண்டுகோள் வைத்தும் தமிழக அரசு அதை அலட்சியம் செய்து மேல் முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக