செவ்வாய், 19 மே, 2020

டாஸ்மாக் காலை வாரியது .. விற்பனை வீழ்ச்சி !.. கையை பிசையும் தமிழக அரசு!

ுப நக்கீரன்:  இந்தியா முழுவதும் கரோனா காரணமாக, கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்து வருகின்றது. இதனால் தொழிற்சாலைகள் முதல் பள்ளிக்கூடங்கள் வரை அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஊரடங்கு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் மதுக்கடைகளும் மூடப்பட்டு இருந்தன. மூன்றாவது ஊரடங்கின்போது மத்திய அரசு மதுக்கடைகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கியது.
அதன்படி சிவப்பு மண்டலங்கள் இல்லாத பகுதிகளில் மதுக்கடைகள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதன் அடிப்படையில் தில்லி, கர்நாடகம், அஸ்ஸாம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மதுக்கடைகளை திறந்தது. கர்நாடகாவில் மதுகடைகளை திறந்ததால் தமிழக எல்லையோர மாவட்டத்தில் உள்ள மக்கள்  கர்நாடகத்திற்கு படையெடுத்தனர்.

இதனால் தமிழக அரசு கடும் அதிர்ச்சி ஆகி மாநில எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் என்று பார்த்தால், தமிழகத்தில் விரைவில் மதுக்கடைககள் திறக்கப்படும் என்றும் மே மாதம் 4ம் தேதி அறிவிப்பு வெளியிட்டு குடிமகன்களில் வயிற்றில் பாலை வார்த்தது. அதன்படி கடந்த 7ம் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டது முதல் நாளில் 170 கோடிக்கும், இரண்டாம் நாளில் 140 கோடிக்கும் என இரண்டு நாட்களில் 310 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றது. இந்நிலையில் மதுக்கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தார்கள். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிடும் டாஸ்மாக் செயல்பாட்டிற்கு தடை விதித்தது. அதன்படி ஊரடங்கு தொடரும் வரை டாஸ்மாக் செயல்படாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக அரசு அடுத்த நாளே உச்சநீதிமன்றத்தை நாடியது. தமிழக அரசின் அப்பீலை சில தினங்களில் விசாரித்த உச்சநீதிமன்றம், டாஸ்மாக் விற்பனையில் தமிழக அரசே இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று தமிழக அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த தமிழக அரசு கடந்த 16ம் தேதி மதுக்கடைகளை மீண்டும் திறந்தது. ஆனால் 7ம் தேதி மதுக்கடைகள் திறந்தபோது கிடைத்த வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு வருமானம் தற்போது குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அதன்படி, மூன்றாம் நாளான நேற்று டாஸ்மாக் வருமானம் 109 கோடி என்ற அளவில் இருந்தது. இந்த முறையும் மதுரை மண்டலம் விற்பனையில் முதலிடத்தில் இருந்தது. தினமும் 150 முதல் 170 கோடி வரை வருமானம் பார்க்கும் வரபிரசாதமாக இருந்த டாஸ்மாக் விற்பனை, மக்களிடம் உள்ள கரோனா அச்சத்தாலும், வேலை இல்லாததாலும் மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு வருவது குறைந்துள்ளது. டாஸ்மாக்கில் இருந்து பெரிய வருமானத்தை எதிர்பார்த்திருந்த தமிழக அரசுக்கு, டாஸ்மாக்கில் வருமானம் குறைந்தது அதிர்ச்சியை தந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக