திங்கள், 11 மே, 2020

ஆழி_செந்தில்நாதன் : மேல்நிலைப்பள்ளிகளிலிருந்து தமிழை நீக்கும் சதியை முறியடிப்போம்.

மேல்நிலைப் பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் ஒன்றை மட்டும் எடுத்தால் போதும் என்று ஒரு பரிந்துரை
பள்ளிக்கல்வித் துறையால் செய்யப்பட்டிருக்கிறதாக வந்திருக்கும் செய்தி நம்மைக் கொதிப்படைய வைக்கிறது.
எடப்பாடி பழநிச்சாமி தலைமையிலான அடிமை அரசு இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறதோ என்று தெரியவில்லை. மோடி தலைமையிலான பாஜக அரசு எட்டடி பாய்ந்தால் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு பதினாறு அடி பாய்கிறது.
பாடச்சுமையைக் குறைத்தல் என்கிற பெயரில் எடுக்கப்படும் இந்த நடவடிக்கை, பாடச்சுமையை குறைப்பதைவிட அறிவின் பலத்தைக் குறைத்துவிடும். இது நமது அறிவுத்திறனையும் மொழியுரிமையையும் குலைக்கும் செயல்பாடாகும்.
இது தமிழ் தேசத்தின் ஆணிவேரையே அழிக்கும் செயல்பாடாகும். அறிவு என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளாத மூடர்கள் எடுக்கும் முடிவே இத்தகைய முடிவுகள்.
தமிழ் என்பதும் ஆங்கிலம் என்பதும் வெறும் மொழிப்பாடங்கள் அல்ல. பத்தாம் வகுப்புவரை நாம் கற்பது அடிப்படைகள். சொல்லப்போனால் மேல்நிலைக் கல்வி, கல்லூரி கல்விக் காலங்களில்தான் மொழிகளையும் ஆழ்ந்து படிக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு வரும். அந்தச் சமயத்தில் மொழிகளை நீக்குவது சமூகத் தற்கொலையாகும்.

தமிழும் ஆங்கிலமும் மொழிகள்தான் என்றாலும் இரண்டையும் கற்றுக்கொள்வதன் நோக்கம் வேறு வேறு.ஆங்கிலத்தின் முக்கியத்துவதை நாம் குறைத்து மதிப்படவில்லை. அது திறன் சம்பந்தப்பட்டது. ஆங்கிலம் வழியாகப் பெறக்கூடிய எதையும் நாம் பெறவேண்டும். ஆனால் தமிழை இழந்தால் நாம் எதை இழக்கிறோமோ அதை ஆங்கிலத்தின் மூலமாக பெறமுடியாது.
தமிழ்நாட்டில் நீங்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் - இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள் என்று சொன்னால் இன்றைய நிலையில் ஆங்கிலத்தைத்தான் நூற்றுக்கு நூறு சதவீதம் பேரும் எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. தமிழை மட்டும் எடுத்து பிளஸ் டூ முடிப்பேன் என்று யாராலும் கனவுகூட காணமுடியாது. ஏனென்றால் அடுத்த நிலையில் எந்த கல்லூரிப்படிப்புக்கு அவர் போகமுடியும்?
தமிழை மேல்நிலைப்பள்ளியில் ஒரு தேர்வாக (OPTION) ஆக முன்வைத்தால், இறுதியில் தமிழை முதல் வகுப்பு அல்லது மழலையர் வகுப்பிலிருந்தே படிக்கவேண்டிய அவசியம் இருக்காது என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.
தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களை வடிகட்டும் திட்டமாகவும், தமிழிலிருந்து ஆங்கிலத்தை நோக்கி மேல்நிலைப்பள்ளி, கல்லூரி காலங்களில் நகர்வதைத் தடுக்கும் திட்டமாகவும் இந்த பரிந்துரை இருக்கிறது.
தமிழ் மொழித்திறன் என்பது தொடர்புப்பாட்டுத் திறனாகவும் நமது வரலாற்று - பண்பாட்டுச் சொத்துக்களின் சாவியாகவும் இருக்கிறது. அறிவுமுதிர்ச்சி கூடும் வயதுகளில் அவற்றைப் படிக்கும்போதே ஒரு இளைஞர் முழுமையான கல்வியைப் பயில்கிறார். அத்துடன் அந்தக் கலாச்சாரக் கல்வியே அவரது பலமாகவும் ஆகிறது.
இந்தியாவில் ஆதிக்கச்சாதியினர் தங்கள் கலாச்சாரக் கல்வியை ஒருபோதும் கைவிடுவதில்லை. பள்ளிக்கு உள்ளாகவோ அல்லது வெளியிலோ - பாலர் பள்ளி முதல் ஐஐடி வரை - அவர்கள் தங்களுடைய வரலாற்று-கலாச்சாரக் கல்வியை நீட்டித்துக்கொள்கிறார்கள். ஆனால் தமிழ் போன்ற மொழிகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் அவரவர் வேர்களிலிருந்து அறுத்தெரியப் படுகிறார்கள்.
உண்மையானக் கல்வியாளர்கள் யாராக இருந்தாலும் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் மொழிப்பாடத்தை வேண்டாம் என்று கூறியிருக்கவாய்ப்பில்லை. சொல்லியிருந்தால் அவர்கள்கல்வியாளர்களே அல்ல. இது தமிழை ஒழிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஒரு அரசியல் சதியாகும்.
தமிழர்கள் மத்தியில் தமிழ் அழிக்கப்படவேண்டும் என்கிற சிந்தனை ஒரு ஆர் எஸ் எஸ் காரர்களுக்குத்தவிர வேறு யாருக்கு வரும்?
ஒரு பக்கம் இந்தியையும் ஆங்கிலத்தையும் சமஸ்கிருதத்தையும் கட்டாயமாகக் கொண்ட சிபிஎஸ்இ இந்தியா முழுக்க வரவேண்டும் என்று துடிக்கிறவர்கள், தமிழ்நாட்டில் மட்டும் தமிழ் வேண்டாம் என்கிற நிலையைக் கொண்டுவருவதற்குக் காரணம் என்ன? தமிழ்நாட்டுப் பள்ளியில் தமிழ்ப் படிக்கவேண்டாம் என்றால் நாளை தமிழ்நாட்டில் வேலை செய்ய தமிழ்தெரிந்திருக்கவேண்டாம் என்கிற நிலை உறுதிப்படும்.
தமிழ்நாட்டில் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வேண்டாம் என்று கூறுபவர்கள் யாராவது உத்தரப் பிரதேசத்தில் மேல்நிலைப்பள்ளியில் இந்தி வேண்டாம் என்று கூறுவார்களா?
அத்துடன், உலகின் பொதுப்போக்குக்கு எதிராக இருக்கிறது இந்தப் பரிந்துரை. நாம் "எந்திர கதியிலான" காலக்கட்டத்திலிருந்து அறிவுயுகத்துக்குள் நுழைந்து கிட்டத்தட்ட ஒரு தலைமுறையாகிவிட்டது. இப்போது எந்த அளவுக்கு அறிவியல் பாடங்கள் முக்கியமோ அதே அளவுக்கு சமூகவியல் பாடங்களும் அதிலும் குறிப்பாக மொழிப்பாடங்களும் முக்கியமானது.
நான்காம் தொழில்யுகத்தில் மொழிகளுக்கிடையிலான வித்தியாசங்களே மறைந்துகொண்டிருக்கிறது. ஆங்கிலம் படித்தால்தான் சோறு என்கிற நிலைகூட மாறக்கூடும்.
எனவே, இளைஞர்களின் மொழிப்புலனை வலுவாக்குவது மிக முக்கியமானது. அதுவும் அவரவர் தாய்மொழியிலான மொழிப்புலம் என்பது மிகவும் முக்கியமானது.
எதிர்வரும் காலத்தில், மொழித்திறன்களின் அடிப்படையிலான புத்தாக்கத் திறன்களும் கற்பனைத்திறன்களும் நமது வாழ்க்கையிலும் வேலைகளிலும் மிகவும் அதிக முக்கியத்துவம் பெறும். இந்த நிலையில், இருமொழியாளர்களே ஒருமொழியாளர்களைவிட கூடுதல் திறமையானவர்கள் என்பதை உலகம் ஒத்துக்கொள்ளத்தொடங்கியிருக்கிறது.
ஒரு காலத்தில் பொறியியல், அறிவியல் பாடங்களே பெரும்பாலும் நூற்றுக்கு தொண்ணூற்றொம்பது சதவீதம் படித்துவந்த மேலைநாடுகளில் இப்போது மொழி, கலாச்சார ஆய்வுகள் உள்ளிட்ட பாடங்களுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்.

அமெரிக்காவில் பல பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் இன்று ஏற்படுவது ஏன்? சீனாவில் தமிழ்க்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆண்டு சில நூறு பேரை தமிழ் படிக்கவைப்பது ஏன்?
செயற்கை நுண்ணறிவும் தானியக்கமும் பெருகிவரும் இந்தக் காலத்தில் இனி வழக்கமான பொறியியல் படிப்புகளுக்குத்தான் சிக்கலே ஒழிய சமூகவியல் துறைகளுக்கு இனி வரவேற்பு அதிகமாகவே இருக்கும். இதை அமெரிக்க, ஐரோப்பிய, சீன நாடுகளின் கல்வித்துறைகளின் முன்னுரிமைகள் எவ்வாறு மாற்றமடைகின்றன என்பதைப் பற்றி அறிந்தால் புரிந்துகொள்ளலாம்.
மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளில் தமிழைப் படிப்பதுதான் ஆழமான தமிழ் மொழிப் பயன்பாட்டை நிலை நிறுத்தும். இல்லையென்றால் தமிழ் ஒரு பேச்சுவழக்காகிவிடும். இந்தியாவை ஆளும் இந்துத்துவவாதிகளுக்கு இது மிக முக்கியமானதாகும். தமிழோடு சேர்த்து தமிழ் அடையாளத்தையும் நீக்கினால் என்ன ஆகும்?
தமிழ் இல்லையேல் தமிழர் இல்லை. தமிழர் இல்லையேல் தமிழ் நிலம் இல்லை. தமிழ் நிலம் இல்லையேல் நமக்கு எதிர்காலமே இல்லை.
இந்த அதிர்ச்சிகரமான பரிந்துரைகள் பற்றி மேலதிக தகவலுக்காகக் காத்திருக்கிறோம். இப்படி ஒரு பரிந்துரை உண்மையில் நடைமுறைப்படும் நிலை ஏற்படுமானால் தமிழ்நாடு கொந்தளித்தே ஆகவேண்டும்.
உயர் கல்வி தமிழில் கிடைக்கவேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழ் மட்டுமே தெரிந்த அல்லது தமிழில் மட்டுமே சிறப்பாக சிந்திக்க முடியும் என்கிற நிலையில் இருக்கக்கூடிய ஒருவர், தன் வாழ்க்கையில் வெற்றிபெறவேண்டுமானால் அவரது மொழி உரிமைக்குப் போராடுவதே ஜனநாயகமும் சமூக நீதியும் ஆகும்.
மொழிக்களத்திலும் சமூக நீதிக்காகப் போராடுவோம்.
இது போன்ற நடவடிக்கைகளில் இறங்கி தமிழ்நாட்டை நாசகரமான பாதையில் கொண்டு செல்லவேண்டாம் என்று தன்னாட்சித் தமிழகம் தமிழ்நாட்டரைசையும் ஒன்றிய அரசையும் கேட்டுக்கொள்கிறது. மீறினால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கவும் செய்கிறது.
ஆழி செந்தில்நாதன்
ஒருங்கிணைப்பாளர்
தன்னாட்சித் தமிழகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக