சனி, 23 மே, 2020

சோனியா காந்தி : கூட்டாட்சி தத்துவம் மறக்கடிக்கப்பட்டுள்ளது

tamil.indianexpress.com/ : Sonia Gandhi : அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ஒன்றிற்கு 10 கிலோ அரிசி உள்ளிட்ட தானியங்கள் வீதம் 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும். 100 நாட்கள்...
அனைத்து அதிகாரங்களும் பிரதமர் அலுவலகத்திலேயே இருப்பதாகவும், கூட்டாட்சி தத்துவம் மறக்கடிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இந்தியாவில் கொரோனா தொற்று மற்றும் தற்போதைய அரசியல் சூழல் ஆகியவை குறித்து 22 கட்சிகளின் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆலோசனை நடத்தினார்.
அப்போது சோனியா காந்தி பேசியதாவது, இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், தற்போது எதுவும் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. எல்லா அதிகாரங்களும் ஒரே ஒரு அலுவலகத்தில் தான் குவிந்து கிடக்கின்றன.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஒருங்கிணைந்த அம்சமான கூட்டாட்சியின் தத்துவம் தற்போது மறக்கடிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் அசாதாரண சூழல் குறித்து விவாதிக்க நாடாளுமன்றமோ, அல்லது கூட்டுக்குழு கூட்டங்களுக்கோ இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை.
இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், 13 கோடி ஏழைக் குடும்பங்கள் ஆகியோரின் நலனில், இந்த அரசு அக்கறை செலுத்த தவறிவிட்டது.
மே 12ம் தேதி பிரதமர் மோடி ஆற்றிய உரையில், ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார சிறப்பு திட்டங்கள் குறித்து கூறியதும், அதனைத்தொடர்ந்து 5 நாட்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார சிறப்பு திட்டங்கள் குறித்து விளக்கியதும், நாடு சந்தித்துள்ள கொடூரமான நகைச்சுவை ஆகும்.
ஏழைகளுக்கு பணம் வழங்க வேண்டும், அனைத்துக் குடும்பத்தினருக்கும் இலவச உணவு தானியங்களை வழங்க வேண்டும், இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பேருந்து மற்றும் ரயில் வசதி செய்ய வேண்டும் என்று பல அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தன. ஆனால், இந்த கோரிக்கைகள் யாவும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல, மத்திய அரசு கண்டும் காணாத விதமாகவே இருந்துவந்தது.
எதிர்க்கட்சிகளின் தலையாய பணி யாதெனில், மத்திய அரசிற்கு ஆக்கப்பூர்வமான கருத்துகளையும், ஆலோசனைகளையும் தக்கநேரத்தில் மத்திய அரசிற்கு சொல்வதே ஆகும். அதனடிப்படையிலேயே இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி நண்பர்கள், இந்த விசயத்தில் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று கூறினார்.

நாட்டின் பொருளாதாரம் 2020-21ம் நிதியாண்டில் எதிர்மறை விளைவை சந்தித்து -5 சதவீதம் வரை செல்லும் என்று முன்னணி பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இந்த பொருளாதார சீரழிவினால் ஏற்படும் விளைவுகள் படுபயங்கரமாக இருக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா தொற்று பாதிப்பால், பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்யும் வகையில், மத்திய அரசிடம் எந்தவொரு திட்டமும் இல்லை.
பொதுத்துறைகளை தனியாருக்கு விற்பது, தொழிலாளர் நல சட்டங்களை திருத்துவது உள்ளிட்டவைகளே மத்திய அரசின் சாகச நடவடிக்கைகளாக உள்ளன.
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் 21 நாட்கள் போர் நடைபெற உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்து ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். ஊரடங்கு நிலை, தொற்றின் பாதிப்பை கட்டுப்படுத்த உதவும். ஆனால், கொரோனா பரவலை குணப்படுத்தாது என்பதை எளிதாக பிரதமர் மறந்துவிட்டார்.
ஊரடங்கு தொடர் நீட்டிப்பால், நாட்டு மக்களின் வருமானம் அடியோடு பாதிக்கப்பட்டு விட்டது. கொரோனா சோதனைகள், மற்றும் ரேபிட் டெஸ்ட் கிட் இறக்குமதி விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியமாக நடந்துகொண்டது.
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையை சரிசெய்ய பொருளாதார சீர்திருத்தம் அவசியம் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசிடம் எதிர்க்கட்சிகள் கூட்டாக வைத்துள்ள கோரிக்கைகள்
வருமான வரி வரம்பிற்குள் வராத அனைத்து குடும்பங்களுக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு தலா ரூ.7500 வழங்க வேண்டும்.
அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ஒன்றிற்கு 10 கிலோ அரிசி உள்ளிட்ட தானியங்கள் வீதம் 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும். 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கால அளவை 200 நாட்களாக உயர்த்த வேண்டும்.
புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது ஊருக்கு செல்ல இலவச போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்
கொரோனா பாதிப்பு விவகாரத்தில் சோதனைகள், கட்டமைப்பு உள்ளிட்டவைகளை மேம்படுத்தி துல்லியமான தகவல்களை தர வேண்டும்.
தொழிலாளர் நல சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களை திரும்பப்பெற வேண்டும்
ராபி அறுவடை காலத்தில் விவசாயிகளிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார நிலையில் கொள்முதல் செய்து அவற்றை சந்தைகளில் வர்த்தகப்படுத்தி விவசாயிகள் நலம் பெற வழிவகை மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாநில அரசுகளுக்க குறிப்பிட்ட தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
ஊரடங்கு நிலையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்
நாடாளுமன்ற செயல்குழுவை கூட்டி விவாதிக்க வேண்டும்.
உள்நாட்டு / சர்வதேச விமான போக்குவரத்து சேவைகளை துவக்குவதற்கு முன்பு அந்தந்த மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். உள்ளிட்ட கோரி்க்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்த கூட்டத்தில், முன்னாள் பிரதமர் தேவகவுடா, சரத் பவார், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, ஹேமந்த் சோரன், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் காணொலிக்காட்சி மூலம் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக