வெள்ளி, 29 மே, 2020

உன் தட்டில் என்ன இருக்கிறது?

Shalin Maria Lawrence : எனக்கு ஒரு வினோத பழக்கம் இருக்கிறது.
யாராவது தன்னைத்தானே தேசபக்தன் என்று சொல்லிக்கொண்டாலும் இல்லை தேச பக்தியைப் பற்றி ஓவராகப் பொங்கினாலோ அவர்களுக்கு ஒரு சின்ன பரீட்சையை வைப்பேன் . சிக்கலான பயிற்சியெல்லாம் கிடையாது, மிக சுலபமானது தான். இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன? அவை என்னென்ன? இதுதான் அந்தப் பரீட்சை.
இந்தக் கேள்வியை பலரிடம் நான் கேட்டிருக்கிறேன் ஆனால் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே அதற்கான சரியான பதிலை கொடுத்திருக்கிறார்கள்.
பலர் இன்னும் கூட இந்தியாவில் 26 மாநிலங்கள் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், பலர் 20 என்பார்கள், சிலர் 37 என்பார்கள். எண்ணிக்கையைக் கூட விடுங்கள் மன்னித்து விடலாம். ஆனால் இந்திய மாநிலங்களின் வரிசையில் நேபாளை சொல்லுவார்கள், பூட்டானை சொல்லுவார்கள். வடகிழக்கு மாநிலங்களை பற்றி சுத்தமாக தெரியாது. அசாம் அருணாச்சலப்பிரதேசம் தவிர்த்து வேறு மாநிலங்கள் அவர்களுக்கு நினைவுக்கு வராது. சிக்கிம் இன்னொரு நாடு இல்லையா என்று நம்மையே திருப்பி கேட்பார்கள். மிகவும் விசித்திரமாக இருக்கும். இப்படி பதில் சொல்லும் யாவருமே அதிகம் படித்தவர்கள்தான்.

இதில் குறிப்பாக புதிதாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட அல்லது பிரிக்கப்பட்ட மாநிலங்கள் பெரிதாக தெரிவதில்லை. அதில் முக்கியமாக அவர்கள் மறந்துவிடும் மாநிலம் சத்தீஸ்கர்.
சத்தீஸ்கர் மத்திய பிரதேசத்தில் இருந்து பிரிந்து இந்தியாவின் 28 ஆவது மாநிலமாக சேர்க்கப்பட்டது. அதிகமான காடுகளும் மலைகளும் அமைந்துள்ள சட்டீஸ்கரில் இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. குறிப்பாக கனிம வளங்கள் அளவுக்கு அதிகமாகவே சட்டீஸ்கரில் காணக்கிடைக்கின்றன. அதனாலேயே இங்கே அரசு உதவியுடன் கார்ப்பரேட்டுகள் அத்துமீறல் ஈடுபடுகின்றன.
இது ஒரு பக்கம் இருக்க சத்தீஸ்கரின் பழங்குடியினர் மிகவும் புராதான வாழ்வியல் முறையை கடைபிடிப்பவர்கள்.
அதில் பஸ்தர் பகுதியில் வாழும் கோன்ட் எனப்படும் ஆதிவாசிகள் இடம் பல வித்தியாசமான உணவு பழக்கம் இன்னும் உள்ளது.
அவர்கள் வசிக்கும் காட்டுப்பகுதியில் உள்ள சால் மரங்களில் உள்ள இலைகளில் கூடு கட்டியிருக்கும் ஒரு வகை பெரிய சிவப்பு எறும்புகளை முட்டையோடு சேகரித்துக் கொண்டு வந்து அவைகளைப் இடித்து அதனோடு இஞ்சி மிளகாய் உப்பு எல்லாம் சேர்த்து அரைத்து சட்டினியாக செய்து விடுவார்கள். புளிப்பு தன்மையுடன் இருக்கும் அந்த சட்னியை உண்டால் அதிலிருக்கும் போர்மிக் ஆசிட் உடலில் உள்ள பாக்டீரியாவை அழித்து அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது என்பது அவர்களின் நம்பிக்கை. சாப்ரா எனப்படும் இந்த எறும்பு சட்னி பரவலாக அங்கே உண்ணப்படுகிறது.
இதேபோல் நாகலாந்து மாநிலம் கோஹிமாவில் மலைக் குளவியை குழம்பு செய்து உண்ணுகிறார்கள்.
இதுபோல் இந்தியா முழுவதும் உள்ள 29 மாநிலங்களில் தங்களின் தட்ப வெப்ப சூழலுக்கு இணங்க, அதிகமாக கிடைக்கும் இயற்கை வளங்களை வைத்து விதவிதமான உணவுகளை இந்தியாவின் குடிமக்கள் பல காலமாக உண்டு வருகின்றனர்.
தில்லி என்றால் மொகலாய உணவு வகைகள், வங்காளத்தில் மீன், கேரளாவில் சந்தியா, கர்நாடகாவில் உடுப்பி உணவு, தமிழகத்தில் சாம்பார் என்பதெல்லாம் மேலோட்டமான கணிப்புகள். இவைகளையெல்லாம் தாண்டி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனித்தன்மை உண்டு, அதையும் தாண்டி ஒவ்வொரு மாநிலத்திலும் பூர்வகுடிகள் உண்டு, அதையும் தாண்டி ஆதிவாசிகள் உண்டு, அதனால் இங்கே ஒரே மாதிரி உணவு முறையும் கிடையாது. இதில் பல வித்தியாசமான உணவு பழக்க வழக்கங்கள் அடங்கும். ஊடகங்களின் சொல்லப்படுவது எல்லாம் மிகவும் தட்டையான தகவல்தான். உண்மையை சொன்னால் இந்தியாவின் ஆன்மா அதனுடைய பன்முகத்தன்மைதான்.
ஆனால் இதையெல்லாம் வசதியாக நாம் மறந்து விட்டு வெட்டுக்கிளி சாப்பிடும் சீனர்களை கிண்டல் செய்து கொண்டிருக்கிறோம்.
இந்தியாவிலேயே மாறுபட்ட உணவு சார்ந்த ரசனைகள் இருக்கும் பொழுது பக்கத்து நாடுகளை சீண்டி கொண்டிருக்கிறோம்.
ஒருவரின் உணவு பழக்கத்திற்காக அவரை கிண்டல் செய்வது மிகவும் தவறான விஷயம். மாட்டி ருசிக்காக நம்மை ஒடுக்குகிறார்கள் என்று சொல்லிக்கொண்டே வெட்டுக்கிளிகள் சாப்பிடுபவரை கேவலப்படுத்துகிறோம்.
மனிதன் தன்னைத்தானே உயிரோடு தக்கவைக்க தனக்கு என்ன கிடைக்கிறதோ அதை வைத்து வாழ கற்றுக் கொண்டவன். மனிதகுலம் அப்படித்தான் தழைத்து வருகிறது. பிழைப்பதற்காக எலியும் உண்ணலாம் வெட்டுக்கிளியும் புசிக்கலாம்.
நல்ல பண்பாடு என்பது மற்றவரின் உணவு பழக்கத்தை மதிப்பது.இந்தியர்களுக்கு இதில் நிறைய பயிற்சி தேவைப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக